மது வாங்கும் போது ஏற்பட்ட தகராறு.. டாஸ்மாக் கடை வாசலில் இளைஞரை வெட்டி சாய்த்த மர்ம நபர்கள்..
Trichy Crime: இந்தத் தாக்குதலில் பிரகாஷுக்கு உடலில் பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன. ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதனால் டாஸ்மாக் கடை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செப்டம்பர் 14, 2026: திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில், 30 வயது இளைஞரை மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது வாங்குவதற்காக 30 வயது மதிக்கத்தக்க பிரகாஷ் என்ற இளைஞர் சென்றுள்ளார். அப்போது அவர் மதுபாட்டில் வாங்குவதற்காக கடையின் முன் வரிசையில் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு அருகில் நின்று கொண்டிருந்த சில நபர்களுடன் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறு:
முதலில் சாதாரண வாக்குவாதமாக தொடங்கிய இந்தப் பிரச்சினை, நேரம் செல்லச் செல்ல முற்றி, கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது. இதனால் டாஸ்மாக் கடையின் முன்பு சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்தவர்கள் சிலர் அவர்களை சமாதானப்படுத்த முயன்றதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், வாக்குவாதம் தொடர்ந்து முற்றிய நிலையில், மர்ம நபர்கள் தாங்கள் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த கத்தியை திடீரென எடுத்துள்ளனர். பின்னர் டாஸ்மாக் கடையின் வாசல் பகுதியில் வைத்து பிரகாஷை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.
வெட்டி சாய்த்த மர்ம நபர்கள்:
இந்தத் தாக்குதலில் பிரகாஷுக்கு உடலில் பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன. ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதனால் டாஸ்மாக் கடை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் படிக்க: மின்சார துறையில் வரும் முக்கிய மாற்றம்.. முதல்வர் விஜய் முன்னிலையில் ரூ. 11,000 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து..
இதுகுறித்து உடனடியாக சமயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், உயிரிழந்த பிரகாஷின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மர்ம நபர்களை தேடும் பணியில் காவல் துறையினர்:
தொடர்ந்து, இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான காரணம் என்ன, பிரகாஷுடன் தகராறில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், சம்பவ இடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
தப்பியோடிய மர்ம நபர்களை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். டாஸ்மாக் கடைக்கு மது வாங்கச் சென்ற 30 வயது இளைஞர் கத்தியால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சமயபுரம் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.