இந்த 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் – ஆரஞ்சு அலெர்ட் விடுத்த வானிலை மையம்
தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 1, 2026 இன்று மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதன் படி நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களுக்கு இன்று மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, ஆகஸ்ட் 1 : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 1, 2026 இன்று மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதன் படி நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களுக்கு இன்று மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகுந்த கவனமுடன் இருக்க எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலும் ஆந்திராவில் ஒரு சில பகுதிகளிலும் கனமழைக்கான அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேரளாவில் சில பகுதிகளுக்கு அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
3 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்
இது தொடர்பாக தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஆகஸ்ட் 1, 2026 இன்று கோவை, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். குறிப்பாக நீலகிரி, கோவை, தேனி ஆகிய 3 மாவட்டங்களில் ஆகஸ்ட் 1, 2026 இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : “பாஜகவின் முதன்மை எதிரி தவெக தான்!”.. திமுக ஆட்சிக்கும் தற்போதைய ஆட்சிக்கும் வித்தியாசமில்லை.. நயினார் நாகேந்திரன் சாடல்!
மேலும் திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 2, 2026 நாளை முதல் ஆகஸ்ட் 4, 2026 தேதி வரை3 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், ஆகஸ்ட் 5, 6, 2026 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
இதையும் படிக்க : திருச்செந்தூர் முருகன் கோயில் தரிசன நேரத்தில் மாற்றமா? உண்மை இதோ!
சென்னை வானிலை நிலவரம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆகஸ்ட் 1, 2026 இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இந்த கனமழைக்கான எச்சரிக்கை மக்களிடம் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.