23 ஆண்டுகளுக்குப் பின் பஞ்சாப்பில் மீட்கப்பட்ட மகன் – தாய் கண்ணீர்மல்க ஆரத்தழுவிய நெகிழ்ச்சி
கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகனைப் பஞ்சாப் மாநிலத்தில் கண்டறிந்து, மீட்டெடுத்த தாய் அவரை கோவையில் உள்ள வீட்டிற்கு அழைத்து வந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 23 ஆண்டுகளுக்குப் பிறகு தன் மகனைக் கண்ட தாய் சுந்தரி, கண்ணீர் மல்க அவரை ஆரத்தழுவி அணைத்துக் கொண்டார்.
கோவை, ஜூலை 30 : கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகனைப் பஞ்சாப் மாநிலத்தில் கண்டறிந்து, மீட்டெடுத்த தாய் அவரை கோவையில் உள்ள வீட்டிற்கு அழைத்து வந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி – சுந்தரி தம்பதியருக்கு 2 மகன்கள் இருந்தனர். கடந்த 1999 ஆம் ஆண்டு கணவர் ராமமூர்த்தி உடல்நலக்குறைவால் உயிரிழந்ததை தொடர்ந்து, சுந்தரி 2000 ஆம் ஆண்டு பிழைப்பு தேடி தனது இரு மகன்களுடன் கோவை கவுண்டம்பாளையம் பகுதிக்கு வந்து வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், 2003 ஆம் ஆண்டு சுந்தரியின் மூத்த மகன் பிரகாஷ திடீரென காணாமல் போனார். அவரை உறவினர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் தாய் சுந்தரி தொடர்ந்து தேடி வந்தார்.
23 ஆண்டுகளுக்குப் பின் பஞ்சாப்பில் மீட்கப்பட்ட மகன்
இதன் இடையே, பிரகாஷ் பஞ்சாப் – பாகிஸ்தான் எல்லையில் கொத்தடிமையாகப் பணியாற்றி வந்ததும், சண்டிகரைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் மூலம் அவர் சமீபத்தில் மீட்கப்பட்டதும் தெரியவந்தது. மகனைத் திரும்ப அனுப்ப முறையான அரசு ஆவணங்கள் தேவைப்பட்டதால், சுந்தரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். ஆட்சியரின் விசாரணையில் பிரகாஷ் கோவையில் 3-ஆம் வகுப்பு வரை படித்தது கண்டறியப்பட்டு, உடனடியாக அவரது பள்ளி மாற்றுச்சான்றிதழ் (TC) உள்ளிட்ட அரசு ஆவணங்கள் தயார் செய்யப்பட்டன. அரசு ஆவணங்களுடன் பஞ்சாப் சென்ற சுந்தரியிடம், அங்கு உள்ள அதிகாரிகள் சான்றிதழ்களைச் சரிபார்த்து பிரகாஷை ஒப்படைத்தனர்.
23 ஆண்டுகளுக்குப் பிறகு தன் மகனைக் கண்ட தாய் சுந்தரி, கண்ணீர் மல்க அவரை ஆரத்தழுவி அணைத்துக் கொண்டார். மீட்கப்பட்ட மகனுடன் தாய் சுந்தரி கோவையில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். அவரை உறவினர்களும் சந்தித்துச் சென்றனர்.
இது குறித்து பேசிய தாய் சுந்தரி கூறும் போது , 23 ஆண்டுகளாக நான் வடித்த கண்ணீருக்கும், செய்த பிரார்த்தனைக்கும் தற்போது பலன் கிடைத்து உள்ளது. ஒவ்வொரு நாளும் எங்காவது உயிருடன் இருப்பான் என்ற நம்பிக்கை இருந்தது. கடவுளை வேண்டிக் கொண்டு இருந்தேன் இன்று மகன் கிடைத்து விட்டான்.
இந்தத் தருணத்தை என்னால் மறக்க முடியாது. என்னைப் பார்த்ததும் என் மகன் அடையாளம் கண்டுகொண்டான். யாரோ ஒருவர் கொத்தடிமையாக கட்டிப் போட்டு வைத்து கொடுமைப்படுத்தியதாகவும், அங்கு உள்ள ஒருவர் உதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் மீட்கப்பட்டு உள்ளான். என் மகனை என்னுடன் சேர்க்க நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் மற்றும் உறுதுணையாக இருந்த சமூக ஆர்வலர் முத்தையா ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றி என்றார்.