மதுரையில் பரபரப்பு… அவனியாபுரத்தில் ஓட.. ஓட.. விரட்டி வாலிபர் படுகொலை.. தடுக்க முயன்றவருக்கு அரிவாள் வெட்டு!
Madurai Youth Murder : மதுரை மாவட்டத்தில் அவனியாபுரத்தில் முன் விரோத தகராறில் இளைஞர் 5 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி படுகொலை செய்தது. இதனை தடுக்க வந்த அவரது நண்பரையும் அந்த கும்பல் வெட்டி சாய்த்தது .
மதுரை மாவட்டம், அவனியாபுரம் அருகே உள்ள மாநகராட்சி காலனி 2- ஆவது பிளாக் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி ( 30 வயது). இவருக்கு மனைவி உள்பட இரு குழந்தைகள் உள்ளனர். இதே பகுதி ஆறுமுக நகரை சேர்ந்தவர் ராஜா உசேன் ( 33 வயது). நண்பர்களான இவர்கள் சம்பவத்தன்று மாநகராட்சி காலனி பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி அருகே பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு 5 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் ராஜா உசேனை வெட்டத் தொடங்கியது. இதனால் அச்சம் அடைந்து பாலாஜி அந்த கும்பலிடம் இருந்து தப்பி ஓடினார். இருப்பினும், அந்த கும்பல் ராஜாவை தப்பவிடாமல் பின் தொடர்ந்து சென்று விரட்டி சென்று 3- ஆம் பிளாக் பகுதியில் வைத்து சுற்றி வளைத்தது. தொடர்ந்து, அந்த கும்பல் பயங்கர ஆயுதங்களால் பாலாஜியை சரமாரியாக வெட்டியது.
இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல்
இதில், அவர் உயிரிழந்ததை உறுதி செய்த பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இந்த சம்பவத்தில், பாலாஜி பலத்த வெட்டு காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் நடுரோட்டில் துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பட்ட பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்தப் பகுதியில் அரங்கேறிய கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த அவனியாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிருக்கு போராடிய ராஜா உசேனை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க: அம்மா உணவக இட்லி திருட்டுத்தனமாக விற்பனை.. இரு ஊழியர்கள் பதவி காலி.. நெல்லை நகராட்சி இயக்குநர் அதிரடி!




மதுரை மாநகர துணை ஆணையர் விசாரணை
மேலும், கொலை வெறி கும்பல் வெட்டியதில் உயிரிழந்த பாலாஜியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து, மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் சோதனை செய்யப்பட்டது. தடய அறிவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர். மேலும் மதுரை மாநகர காவல் துணை ஆணையர் இனிகோ திவ்யன் நேரில் விசாரணை மேற்கொண்டார்.
கோவில் திருவிழா முன்விரோதத்தில் சம்பவம்
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அந்த பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் பாலாஜி தரப்புக்கும், வில்லாபுரம் பகுதியை சேர்ந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது. அதன்படி, பாலாஜியை வில்லாபுரத்தை சேர்ந்த கும்பல் கொலை செய்துள்ளது. இதனை தடுக்க வந்த ராஜா உசேனை வெட்டி உள்ளது தெரியவந்தது. இது தொடர்பாக 5 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை.. தமிழக பாஜகவில் அதிரடி மாற்றம்? டெல்லி போடும் மெகா பிளான்!