AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் போலியான புத்தகங்கள்…. திமுக பரபரப்பு குற்றச்சாட்டு

Periyar Library Book Scam : கோவை பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதில் முறைக்கேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் கடந்த ஆட்சியில் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதில் எந்தவிதமான ஒளிவு மறைவுமின்றி வெளிப்படையான முறையில் புத்தகங்களை கொள்முதல் செய்யப்பட்டது என்பதை பதிப்பாளர்களே அறிவர் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் போலியான புத்தகங்கள்…. திமுக பரபரப்பு குற்றச்சாட்டு
முதல்வர் விஜய் - மு.க.ஸ்டாலின்
Karthikeyan S
Karthikeyan S | Published: 06 Nov 2026 18:12 PM IST

சென்னை, நவம்பர் 6 : கோவையில் உள்ள பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் வாங்குவது தொடர்பாக மோசடி நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் பகீர் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் திமுக மிகப்பெரிய ஊழல் செய்துள்ளதாக முதல்வர் விஜய் பகீர் குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார். இதற்கு திமுக தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுகவின் (DMK) எக்ஸ் பக்கத்தில், டந்த ஆட்சியில் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதில் எந்தவிதமான ஒளிவு மறைவுமின்றி வெளிப்படையான முறையில் புத்தகங்களை கொள்முதல் செய்யப்பட்டது என்பதை பதிப்பாளர்களே அறிவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் போலியான புத்தகங்கள்’

இது தொடர்பாக திமுகவின் பதிவில், இடைத்தேர்தல் பிரச்சாரம் மற்றும் தேர்தல் முடிவுக்கு பிறகு தவெக தலைவர், முதல்வர் விஜய்யின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து வந்திருக்கும் பதிவு அடடே இந்த பொம்மை பேசுமா? என ஆச்சரியமளிக்கிறது. விலைவாசி உயர்வு குறித்து பதிவு இல்லை.கொலைகள் குறித்து கவலையில்லை. காணாமல் போன சிறுமி குறித்து விசாரிப்புகள் இல்லை. மின்வெட்டு, மின் கட்டணம் குறித்தெல்லாம் எந்த வாக்குறுதியும் இல்லை. அவ்வளவு ஏன் அரசின் அசமஞ்சத்தால் கடலில் இறந்து மிதந்த மீனவர்கள் குறித்து கூட பதிவு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : திருச்சியில் பெரும் சோகம்.. மனைவி தற்கொலை செய்த அதே மின்விசிறியில் தூக்கிட்ட கணவன்.. என்ன காரணம்!

மேலும், திமுக தலைவர் கோவை பெரியார் அறிவுலகம் சென்றதும் அவருக்கு கிடைத்த பாராட்டும் பேசு பொருளானதும், புத்தக கொள்முதலில் ஊழல் என்று ஓடி வந்திருக்கிறார் தவெக தலைவர். பெரியார் அறிவுலகத்தில் அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகத்தின் போலியான நூல்களில் மட்டும் 2026 ஜூன் மாதம் என்று முத்திரை இடப்பட்டுள்ளது என்று அங்கிருக்கும் தோழர்கள் தெரிவிக்கிறார்கள். அந்த தேதி கூட முதல்வர் விஜய்யின் பிறந்தநாள் தான் என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த பதிவில் அதே பெரியார் அறிவுலகத்தில் உள்ள வால்காவிலிருந்து கங்கை வரை போன்ற புகழ்பெற்ற மற்ற பதிப்பக நூல்கள் திமுக ஆட்சியின் 2026 மார்ச் மாத முத்திரையோடு உள்ளன. அப்படியென்றால் போலி பதிப்பக புத்தகங்கள் எப்பொழுது வாங்கப்பட்டன? யார் முடிவு எடுத்தது? தவெக ஆட்சியில் யாருக்கு கமிஷன் போனது? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய் விமர்சனம்

முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக பதிவிட்ட முதல்வர் விஜய், பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த திமுக ஆட்சியில் 2025 ஆம் ஆண்டு நவம்பர் 5 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில் நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் பெருமாள் முருகனே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிந்துள்ள அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.

இதையும் படிக்க : தென்காசியில் எரிந்த நிலையில் பெண் சடலம்.. நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி… போலீசார் விசாரணை!

நாம் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடித்து வருவது திமுக தான் என்று பகிரங்கமாக நமது மாநாட்டிலேயே அறிவித்தோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே திமுக தான் என்பதையும் இன்று வரை நாம் மட்டுமே சமரசமின்றிச் சொல்லி வருகிறோம். எப்போதும் திமுக பற்றி நாம் சொல்வது உண்மைதான் என்பதைத் தி.மு.க.வே மெய்ப்பித்து உள்ளது. அதற்கான இப்போதைய உதாரணமாக, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாகி உள்ளது. என தெரிவித்துள்ளார்.

Follow Us