மேகதாதுவில் அணை கட்டினால் பதவியில் இருந்து விலகுவேன்.. காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ் குமார் எச்சரிக்கை!
Congress Minister Rajesh Kumar: காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டினால் நான் பதவியில் இருந்து விலகுவதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ் குமார் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் கூறியிருப்பது பரபரப்பாகியுள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசு பல்வேறு எதிர் வினைகளை ஆற்றி வருகிறது. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கர்நாடக அரசு கட்டினால் நான் அமைச்சர் பதவியில் இருந்து விலக தயாராக உள்ளேன். மேகதாது அணை திட்டத்தில் விரைந்து அனுமதி வழங்குமாறு பிரதமர் மோடியை கர்நாடக முதல்வர் டி. கே. சிவகுமார் நேரில் சந்தித்து வலியுறுத்தி இருந்தார் என்று தெரிவித்தார். இதேபோல, மேகதாது அணை விவகாரத்தில் தமிழக உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது என்று அமைச்சர் ஷாஜகான் மற்றும் வருவாய், பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் உறுதி அளித்துள்ளனர்.
கர்நாடக காங்கிரஸுக்கு எதிராக தமிழக காங்கிரஸ் அமைச்சர் பேச்சு
இதனிடையே, கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா காங்கிரஸ் அரசுக்கு எதிராக தமிழக காங்கிரஸ் அமைச்சர் பேசி உள்ளார். காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகம், தமிழக எல்லையில் மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இது தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடகம் இடையே பேச்சுவார்த்தை உள்ளிட்டவை நடைபெற்றது. இருந்தாலும், இந்த விவகாரத்தில் தற்போது வரை தீர்வு எட்டப்படவில்லை.
மேலும் படிக்க: தவெக அரசின் இயலாமையை மறைக்கவே வெள்ளை அறிக்கை.. தங்கம் தென்னரசு தாக்கு!




மேகதாது அணை கட்டினால் விவசாயம் பெருமளவு பாதிக்கப்படும்
தற்போது, கர்நாடகா அரசு கூறி வருவது போல காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழக விவசாயிகளின் நீராதாரம் பெருமளவு பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதனால், கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டும் செயல் திட்டத்திற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் தான், கர்நாடகா காங்கிரஸ் அரசு மேகதாது அணை கட்டினால், தான் பதவியில் இருந்து விலகுவதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
மேகதாது விவகாரத்தின் தற்போதைய நிலை
பெங்களூருக்கு குடிநீர் தேவை மற்றும் 400 மெகாவாட் மின் உற்பத்திக்காக காவிரியும், அர்க்காவதியும் இணையும் மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. அதன்படி, மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெறுவதற்கான முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக இறங்கியதுடன், இந்த திட்டத்திற்கு அனுமதி கோரி மத்தியஅரசையும் தீவிரமாக வலியுறுத்தி வருகிறது.
மேலும் படிக்க: தீயணைப்புத்துறை ஆணைய தலைவர் சங்கர் ஜிவால் திடீர் ராஜினாமா.. மேலும் 5 அதிகாரிகள் பணி விலகல்.. என்ன காரணம்!