கோவை, மதுரைக்கு மெட்ரோ – நிர்மலா சீதாராமனிடம் முதல்வர் விஜய் கோரிக்கை
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த தமிழக முதல்வர் ஜோசப் விஜய், தமிழகத்துக்கான திட்டங்கள் தொடர்பாக கோரிக்கை விடுத்தார். குறிப்பாக ஓசூர், கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய நகரங்களின் பொதுப் போக்குவரத்தினை மேம்படுத்திடத் தேவையான மெட்ரோ இரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை விடுத்தார்.
சென்னை, மே 27 : தமிழக முதல்வர் விஜய் 2 நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த அவர் தமிழக அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது, மேகதாது அணை விவகாரம் ஆகிய முக்கிய பிரச்னைகள் குறித்து கோரிக்கை விடுத்தார். அவர்களது சந்திப்பு 10 நிமிடங்கள் நீடித்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன் சிபிஐ விசாரணைக்காக டெல்லி சென்ற விஜய் தற்போது முதல்வராக டெல்லி சென்றுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பிரதமரை சந்தித்த பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்து தமிழகத்துக்கான திட்டங்கள் தொடர்பாக கோரிக்கை விடுத்தார்.
நிர்மலா சீதாராமனிடம் தமிழக முதல்வர் வைத்த கோரிக்கைகள்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்த முதல்வர் விஜய் தமிழக அரசு சார்பில் முக்கிய கோரிக்கைகளை முன் வைத்தார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடனான சந்திப்பின்போது, விரைவான வளர்ச்சியைப் பெற்றுவரும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. இத்தகைய வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் வகையில், முக்கிய உட்கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடு செய்வது இன்றியமையாதது.




இதையும் படிக்க : சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படை – யூனிபார்ம் அறிமுகம் – என்ன ஸ்பெஷல்?
நிதியமைச்சருடன் முதல்வர் விஜய் சந்திப்பு
மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களை இன்று (27.05.2026) புதுதில்லியிலுள்ள அவரது அலுவலகத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.#CMJosephVijay pic.twitter.com/WTd2jgU3B6
— CMOTamilNadu (@CMOTamilnadu) May 27, 2026
இதன் காரணமாக தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான துறைமுகங்கள். நெடுஞ்சாலைகள், இரயில்வே திட்டங்கள், தொழில் வழித்தடங்கள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டுமென்று முதல்வர் விஜய் கோரிக்கை விடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டின் வலுவான கல்விச் சூழலை மேலும் வலுப்படுத்த, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை தமிழ்நாட்டில் நிறுவிடவும், தமிழ்நாட்டின் பொருளாதாரத்திலும், தொழில் வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றி வரும் ஓசூர், கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய நகரங்களின் பொதுப் போக்குவரத்தினை மேம்படுத்திடத் தேவையான மெட்ரோ இரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்திடுமாறும் முதல்வர் விஜய் நிதியமைச்சரிடம் கோரிக்கை விடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை.. முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்..
இதனைத் தொடர்ந்து மே 28, 2026 நாளை டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனையும் தமிழக முதல்வர் விஜய் மரியாதை நிமித்தமாக சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.