தமிழ்தாய் வாழ்த்து… மேகதாது அணை… பிரதமரிடம் முதல்வர் விஜய் வைத்த 4 கோரிக்கைகள்
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த தமிழக முதல்வர் விஜய் தமிழகத்துக்காக 4 முக்கிய கோரிக்கைகளை வழங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில், பிரதமர் மோடி நெதர்லாந்து பயணத்தின் போது ஆனைமங்கல செப்பேடுகளை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வந்தமைக்காக முதல்வர் விஜய் நன்றி தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
சென்னை, மே 27 : தமிழக முதல்வர் ஜோசப் விஜய் 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இந்த நிலையில் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த அவர் தமிழகத்துக்காக 4 முக்கிய கோரிக்கைகளை வழங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில், பிரதமர் மோடி நெதர்லாந்து பயணத்தின் போது ஆனைமங்கல செப்பேடுகளை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வந்தமைக்காக முதல்வர் விஜய் நன்றி தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் தமிழ்தாய் வாழ்த்து பாடல் குறித்து கோரிக்கை விடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பிரதமரிடம் முதல்வர் விஜய் வைத்த 4 கோரிக்கைகள்
இது தொடர்பாக வெளியான அறிக்கையில், மாநில வாழ்த்துப்பாடலான, தமிழ்தாய் வாழ்த்து தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தொடக்கத்தில் பாடப்பட்டு வருகிறது. உள்துறை அமைச்சகத்தால் இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, சில குறிப்பிட்ட அரசு நிகழ்ச்சிகளில், தேசியப் பாடல் முதலாவதாகப் பாடப்பட்டு வருகிறது. அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் மாநில வாழ்த்துப்பாடலைப் பாடுவதற்கு உள்துறை அமைச்சகத்தால் உரிய தெளிவுரையினை வழங்குமாறு பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படை – யூனிபார்ம் அறிமுகம் – என்ன ஸ்பெஷல்?
மேலும், மேம்பட்ட நடுத்தர போர் விமான வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு மையம் மற்றும் வான்வழி அமைப்பு மையம் (CABS) ஆகியவற்றை தமிழ்நாட்டில் அமைப்பது குறித்து கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், வான்வழி அமைப்பு மையத்தினை (CABS) தமிழ்நாட்டில் அமைக்குமாறு முதல்வர் விஜய் கேட்டுக்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமருடன் தமிழக முதல்வர் சந்திப்பு
மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களை புதுதில்லியிலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சந்தித்துப் பேசினார்.#CMJosephVijay pic.twitter.com/7vlen8rDNt
— CMOTamilNadu (@CMOTamilnadu) May 27, 2026
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைத் திட்டத்திற்கான பூமி பூஜையை நடத்தவுள்ளதாக கர்நாடக மாநில துணை முதல்வர் அறிவித்திருப்பது காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பிற்கும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கும் முற்றிலும் முரணானது என்றும், இந்த அறிவிப்பு தமிழ்நாட்டு விவசாயிகளிடையே பெருங்கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் பிரதமர் தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய இணை ஆற்றுப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் மேற்காணும் திட்டத்தினை அனுமதிக்கக் கூடாது என ஜல் சக்தி அமைச்சகத்திற்கும், மத்திய நீர்வள ஆணையத்திற்கும் அறிவுறுத்துமாறு முதல்வர் விஜய் கேட்டுக்கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : 4 தொகுதிகள் காலி.. அடுத்து என்ன நடக்கும்? தவெகவுக்கு இது மேலும் பலமா?
மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் மிகக் கவலைக்கிடமான அளவிற்கு அதிகரித்துள்ளது. கடந்த 2026 ஆம் ஆண்டில் மட்டும் 12 கைது சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. தற்போது 58 மீனவர்கள் இலங்கையில் காவலில் உள்ளனர். 266 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க இலங்கை அரசை, இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.