ஏஐ ஆய்வகங்கள்… 7 லட்சம் வீடுகள்… முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
TN 2030 Vision : தமிழ்நாடு 2030 வளர்ச்சி இலக்குகளை முன்வைத்து சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மார்ச் 6, 2026 அன்று கனவுகள் மெய்படும் என்ற தலைப்பில் தமிழக அரசின் சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முக்கிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார்.
சென்னை, மார்ச் 6 : தமிழ்நாடு 2030 வளர்ச்சி இலக்குகளை முன்வைத்து சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மார்ச் 6, 2026 அன்று கனவுகள் மெய்படும் என்ற தலைப்பில் தமிழக அரசின் சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சியின் போது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான தமிழக வளர்ச்சி திட்டங்களை ஸ்டாலின் அறிக்கை என்ற பெயரில் மொத்தம் 14 முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
இந்த அறிவிப்புகளில் முக்கியமாக, 2030 ஆம் ஆண்டுக்குள் வீடு இல்லாத ஒவ்வொரு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குடும்பத்திற்கும் வீடும், நிலப்பட்டாவும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், 2030 ஆம் ஆண்டுக்குள் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்றும், பள்ளி மற்றும் உயர்கல்வி மாணவர்களின் கல்வி தொடர்ச்சி விகிதத்தை 90 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார்.
இதையும் படிக்க : தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி எப்போது? வெளியான அறிவிப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய வீடியோ
மக்கள் சொன்ன கருத்துக்களை அடிப்படையாக வைத்து, அதில் முக்கியமானவற்றை எல்லாம் முன்னுரிமைப்படுத்தி, தமிழ்நாட்டின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கான எனது தொலைநோக்குப் பார்வை, அதாவது, “தமிழ்நாடு 2030” க்கான உயர்கல்வித் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத் துறையின் முக்கிய… pic.twitter.com/b8gEHALIdj
— DMK (@arivalayam) March 6, 2026
மேலும் பேசிய அவர், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2030ஆம் ஆண்டுக்குள் மொத்தம் 7 லட்சம் வீடுகள் கட்டப்படும். கிராமப்புறங்களில் 5 லட்சம் வீடுகளும், நகர்ப்புறங்களில் 2 லட்சம் வீடுகளும் கட்டப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடும், முகவரியும் இருக்க வேண்டும். அந்த வீட்டு சாவியை நான் நேரடியாக ஒப்படைப்பேன் என்றார்.
பின்னர், கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்களுக்கு கிடைத்த நலன்களே எனது மகிழ்ச்சிக்கான காரணம். நாங்கள் வெறும் வாக்குறுதிகள் மட்டும் அளித்து நிற்கவில்லை. பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளோம். ஆட்சிக்கு வந்தபோது பல நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற ஆசையும், கனவும் இருந்தது. அந்த கனவுகளில் பெரும்பாலானவை கடந்த ஐந்து ஆண்டுகளில் நிறைவேறியுள்ளன என்று அவர் கூறினார்.
இதையும் படிக்க : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.வி மாற்றம்.. குடியரசு தலைவர் அதிரடி உத்தரவு!
தொடர்ந்து பேசிய அவர், என் ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் சிறந்தது எதுவென்று கேட்டால், எல்லா திட்டங்களும் சிறந்தவைதான் என்று நான் சொல்வேன். காரணம், மக்களின் தேவைகளை புரிந்து கொண்டு, அதற்கேற்ற திட்டங்களை உருவாக்கி, மக்களிடம் கொண்டு சென்று வெற்றி பெறச் செய்துள்ளோம். தமிழகத்தில் அரசின் நலத்திட்டங்களால் பயன் பெறாத குடும்பமே இல்லை என்ற அளவுக்கு திட்டங்களை கொண்டு வந்துள்ளோம் என்றும் முதல்வர் குறிப்பிட்டார்.



