AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி.. விழுப்புரம் டூ நாகை வரை சிறப்பு ரயில்..

சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு மார்ச் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை மற்றும் தீபாராதனைகள் நடைபெறுகின்றன. பக்தர்கள் நெரிசலின்றி தரிசனம் செய்ய இலவச தரிசனம் மற்றும் 3 வகையான கட்டண தரிசன வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி.. விழுப்புரம் டூ நாகை வரை சிறப்பு ரயில்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 05 Mar 2026 19:47 PM IST

மார்ச் 5, 2026: சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு மார்ச் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள திருநள்ளாறு பகுதியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா நாளை காலை 8.24 மணிக்கு நடைபெறுகிறது. அதாவது சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இடம் பெயர்வதை முன்னிட்டு இந்த சனிப்பெயர்ச்சி விழா அனுசரிக்கப்படுகிறது.

விழுப்புரம் முதல் நாகை வரை சிறப்பு ரயில்:

இந்த விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்களின் வசதிக்காக தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது.

விழுப்புரம் இருந்து நாகப்பட்டினம் செல்லக்கூடிய முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் காலை 9.10 மணிக்கு விழுப்புரம் நிலையத்திலிருந்து புறப்பட்டு பிற்பகல் 1.05 மணிக்கு நாகப்பட்டினம் சென்றடையும்.

அதேபோல் நாகப்பட்டினத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு விழுப்புரம் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு ரயில் பண்ருட்டி, கடலூர், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், மயிலாடுதுறை, திருநள்ளாறு, காரைக்கால், நாகூர் வழியாக நாகப்பட்டினம் சென்றடையும்.

திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா:

  • சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் நிகழ்வே சனிப்பெயர்ச்சி என அழைக்கப்படுகிறது.

  • சனி பகவான் ஒவ்வொரு ராசியிலும் சுமார் 2½ ஆண்டுகள் தங்கியிருப்பார்.

  • இதனால் சனிப்பெயர்ச்சி ஜோதிடத்தில் முக்கியமான மாற்றமாக கருதப்படுகிறது.

  • திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் சனி பகவானுக்காக புகழ்பெற்ற தலமாக கருதப்படுகிறது.

  • சனிப்பெயர்ச்சி நாளில் பக்தர்கள் எண்ணெய் அபிஷேகம், எள் தீபம் ஏற்றுதல், எள் தானம் போன்ற வழிபாடுகளை செய்து சனி பகவானின் அருளைப் பெறுவார்கள்.

  • இந்த நாளில் கோவிலில் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெறவுள்ளன.

  • விழாவை முன்னிட்டு திருநள்ளாறு மற்றும் காரைக்கால் பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

முன்னேற்பாடுகள் என்ன?

சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை மற்றும் தீபாராதனைகள் நடைபெறுகின்றன. பக்தர்கள் நெரிசலின்றி தரிசனம் செய்ய இலவச தரிசனம் மற்றும் 3 வகையான கட்டண தரிசன வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இலவச தரிசன வரிசை மற்றும் கட்டண சிறப்பு தரிசன வரிசை தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது. டிக்கெட் பெறுவதற்காக 15 இடங்களில் கவுண்டர்கள் செயல்படுகின்றன. அதிகளவில் பக்தர்கள் வருவதை கருத்தில் கொண்டு சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Follow Us