AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs NZ: ஒருநாள் போட்டிகளில் கிங் கோலி புதிய உலக சாதனை.. இலக்கை துரத்துவதில் சச்சின் சாதனை முறியடிப்பு!

Virat Kohli Sets New ODI Chasing Record: இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி, ஒருநாள் போட்டிகளில் இலக்கைத் துரத்திப் பிடிப்பதில் புதிய உலக சாதனை படைத்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 74 ரன்கள் குவித்து, முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 8,720 ரன்கள் சாதனையை முறியடித்தார். கிங் கோலி தற்போது 8,721 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

IND vs NZ: ஒருநாள் போட்டிகளில் கிங் கோலி புதிய உலக சாதனை.. இலக்கை துரத்துவதில் சச்சின் சாதனை முறியடிப்பு!
விராட் கோலிImage Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 04 Nov 2026 17:54 PM IST

‘கிங்’ என்று அழைக்கப்படும் இந்திய அணியின் (Indian Cricket Team) நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, ஒருநாள் போட்டிகளில் இலக்கைத் துரத்திப் பிடிப்பதில் புதிய உலக சாதனை படைத்துள்ளார். இன்று அதாவது 2026 நவம்பர் 4ம் தேதி நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், விராட் கோலி (Virat Kohli) 13 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உட்பட 74 ரன்கள் எடுத்தார். அவரது ஸ்டிரைக் ரேட் 145.10 ஆக இருந்தது. இதன் மூலம், முன்னாள் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை முறியடித்து, ஒருநாள் போட்டிகளில் இலக்கைத் துரத்திப் பிடிப்பதில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் என்ற பெருமையை கோலி பெற்றார்.

விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் இலக்கைத் துரத்திய போட்டிகளில் 66.54 சராசரியில் 8,721 ரன்கள் எடுத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 42.23 சராசரியில் 8,720 ரன்கள் எடுத்துள்ளார். 6,801 ரன்களுடன் இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள ரோஹித் சர்மா 50.75 சராசரியைக் கொண்டுள்ளார்.

ALSO READ: கோலியின் ஸ்டைலிஷ் அரைசதம்.. இந்திய அணி எளிதாக இலக்கை விரட்டி வெற்றி!

ஒருநாள் போட்டிகளில் சேஸிங்கின் போது எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள்

  • 8721 ரன்கள் – விராட் கோலி (66.54)*
  • 8720 ரன்கள் – சச்சின் டெண்டுல்கர் (42.23)
  • 6801 ரன்கள் – ரோஹித் சர்மா (50.75)
  • 5742 ரன்கள் – சனத் ஜெயசூர்யா (29.44)
  • 5575 ரன்கள் – ஜாக் காலிஸ் (44.95)
  • 5559 ரன்கள் – கிறிஸ் கெய்ல் (39.99)
  • 5425 ரன்கள் – பிரையன் லாரா (42.71)
  • 5400 ரன்கள் – குமார் சங்கக்கார (40.29)

விராட் கோலி இந்தியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 2024-ல் டி20 சர்வதேசப் போட்டிகளிலிருந்தும், 2025-ல் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார். கோலி இதுவரை 317 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 305 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்த கோலி, 55 சதங்கள் மற்றும் 79 அரை சதங்கள் உட்பட, 58.78 சராசரியில் 15,109 ரன்கள் எடுத்துள்ளார். இந்த வடிவத்தில் கிங் கோலியின் அதிகபட்ச ஸ்கோர் 183 ரன்கள் ஆகும்.

போட்டியில் நடந்தது என்ன..?

முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்த நியூசிலாந்து அணி, 40.2 ஓவர்களில் 185 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடக்க ஆட்டக்காரர் டிம் சீஃபர்ட் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடித்து 38 ரன்கள் எடுத்தார். இந்தியாவுக்காக அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். குர்னூர் பிரார் 3 விக்கெட்களையும், அன்ஷுல் கம்போஜ் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

ALSO READ: கட்டுக்கடங்காத ரசிகர்கள்.. அனைவருக்கும் ஆட்டோகிராஃப் போட்ட கோலி!

இடைவிடாமல் பெய்த மழையால், இந்திய அணிக்கு 32 ஓவர்களில் 143 ரன்கள் என்ற திருத்தப்பட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, களமிறங்கிய இந்திய அணி 22.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு வெற்றி பெற்றது. கோலி அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேனாக இருந்தார். கேப்டன் சுப்மன் கில் 37 ரன்கள் எடுத்தார். இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 113 ரன்கள் (104 பந்துகளில்) பார்ட்னர்ஷிப் அமைத்து, ஒருதலைப்பட்சமான வெற்றியை உறுதி செய்தனர்.

Follow Us