தவெகவின் தற்குறி நிர்வாகமே வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.. குதிரை பேர குற்றச்சாட்டில் நீலி கண்ணீர் வடிக்க வெட்கமா இல்லையா.. பொங்கிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran Latest Speech : தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ வைத்துள்ள குதிரை பேர குற்றச்சாட்டுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடுமை யான விமர்சனத்தை முன் வைத்து உள்ளார் .
தவெக அமைச்சர், எம்எல்ஏ-வின் குதிரை பேர குற்றச்சாட்டு தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் கூறியிருப்பதாவது: தமிழக வெற்றிக் கழக அமைச்சரும், எம்எல்ஏவும் முன் வைத்துள்ள குதிரை பேர குற்றச்சாட்டு அலங்கோல ஆட்சியின் அவலங்களை மறைத்து மக்களை திசை திருப்பும் செயலாகும். கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் வீழ்ச்சி என்பது போல தவெகவின் தற்குறித்தனமான நிர்வாகமே அதன் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். தமிழக அரசியலில் முதல் முறையாக குதிரை பேரத்தை அறிமுகம் செய்தது மைனாரிட்டி ஆட்சியை நடத்தி வரும் தவெக தான். தற்போது, குதிரை பேரம் குறித்து பேசுவது, சாத்தான் வேதம் ஓதுவதற்கு இணையானது. திறனற்ற நிர்வாகத்தால் பொதுமக்கள், அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், விவசாயிகள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், வேலை வாய்ப்பு எதிர்நோக்கி இருக்கும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் வாழ்வாதாரத்தை இழந்து நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சோபா வரும் முன்னே தவெக தலைவர் வருவார் பின்னே
இதை திசை திருப்புவதற்காகவே குதிரை பேர நாடகத்தை பார்க்க வேண்டி உள்ளது. ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெருபான்மை இல்லாத தவெக யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே என்பது போல, தவெக தலைவர் விஜய் வருவார் பின்னே சோபா வரும் முன்னே என ஒவ்வொரு கட்சியின் தலைமை அலுவலகத்துக்கும் சோபாவை அனுப்ப ஆதரவு கோரியதோடு தவெகவுக்கு எதிராக போட்டியிட்டு மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்ற மாற்றுக் கட்சி எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து அதன் மூலம் ஆட்சியை தக்க வைத்து குதிரை பேரம் குறித்து ஒப்பாரி வைப்பது முரண்பாட்டின் உச்சகட்டமாகும்.
மேலும் படிக்க: தவெக ஆட்சியை கவிழ்க்கனும்.. ரூ. 15 கோடி தரோம் அதிமுகவுக்கு வாங்க.. முஸ்தபா எம்எல்ஏ பகீர் குற்றச்சாட்டு!




அரசின் நிர்வாக சீர்கேட்டால் தமிழகம் பின்னடைவு
அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, மின்சார கட்டண குளறுபடி, அரசின் அனைத்து துறைகளையும் தனியார் மயமாக்கும் நடவடிக்கைகள், அதிக விலைக்கு மின்சார கொள்முதல், அரசு நிர்வாகங்களில் ஆளுங்கட்சியினரின் தலையீடு, எம்எல்ஏக்கள் முதல் அமைச்சர்கள் வரை அரசு பணிகளை ஒதுக்குவதற்கு லஞ்சம் கேட்பதாக எழும் புகார்கள், பொருளாதார வீழ்ச்சி, அண்டை மாநிலங்களை நோக்கி செல்லும் தொழில் முதலீடுகள் என தவெக அரசின் நிர்வாக சீர்கேடுகளை ஒட்டுமொத்த தமிழகமும் பின்னடைவை சந்தித்துக் கொண்டிருக்கிறது.
நீலி கண்ணீர் வடிக்க வெட்கமாக இல்லையா
அத்துடன், நாள் தோறும் அதிகரித்து வரும் தொடர் படுகொலைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், சிறை கைதிகள் தப்பியோடும் நிகழ்வுகள், குழந்தைகள் மாயமாகும் சம்பவங்கள், போதை பொருட்களை பதுக்கி வைக்கும் ஆளுங்கட்சியினரின் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு, நிர்வாகத் தோல்விகளை திசை திருப்பி மக்களை ஏமாற்றும் நோக்கில் ஆட்சிக்கு எதிராக குதிரை பேரம் நடப்பதாக கூறி நீலி கண்ணீர் வடிக்க வெட்கமாக இல்லையா என்று டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும் படிக்க: 3 நாள் காவல் நிறைவு.. சிறையில் போலீசார் துன்புறுத்தினரா.. நீதிபதியிடம் அன்பில் மகேஷ் அளித்த பதில்!