பள்ளி வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்த 3ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு.. டெல்லியில் நடந்த சோகம்..
இன்று காலை சுமார் 9.52 மணியளவில் சிறுமியின் உயிரிழப்பு தொடர்பாக காவல்துறைக்கு அவசர அழைப்பு வந்துள்ளது. இதையடுத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சிறுமி நிர்மான் விஹார் பகுதியில் உள்ள மாலிக் ரேடிக்ஸ் ஹெல்த்கேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதும், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்ததும் தெரியவந்துள்ளது.
நவம்பர் 4, 2026: டெல்லியில் பள்ளி வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு டெல்லியின் மயூர் விஹார் பகுதியில் உள்ள பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமி, புதன்கிழமை காலை வகுப்பறையில் இருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அவர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்த சிறுமி!
இன்று காலை சுமார் 9.52 மணியளவில் சிறுமியின் உயிரிழப்பு தொடர்பாக காவல்துறைக்கு அவசர அழைப்பு வந்துள்ளது. இதையடுத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சிறுமி நிர்மான் விஹார் பகுதியில் உள்ள மாலிக் ரேடிக்ஸ் ஹெல்த்கேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதும், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்ததும் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பள்ளி வகுப்பறையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சிறுமி திடீரென வகுப்பறையில் மயங்கி தரையில் விழுவது பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: அக்னிவீரர்களுக்கு குட் நியூஸ்! 4 ஆண்டுகள் இல்லை.. இனி 6 ஆண்டுகள்.. மத்திய அமைச்சரவை அதிரடி முடிவு!
பள்ளியில் அவசர மருத்துவ வசதிகள் இல்லையா? பெற்றோர் குற்றச்சாட்டு!
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சிறுமியின் குடும்பத்தினர் பள்ளி நிர்வாகத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். பள்ளியில் போதுமான அவசர மருத்துவ வசதிகள் இல்லை என்றும், சிறுமி மயங்கி விழுந்தபோது அவருக்கு உரிய நேரத்தில் சிபிஆர் (CPR) எனப்படும் இதய நுரையீரல் மீட்பு சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், பள்ளிகளில் மாணவர்களுக்கு திடீரென உடல்நலப் பாதிப்பு அல்லது மருத்துவ அவசரநிலை ஏற்படும்போது உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கான அடிப்படை மருத்துவ வசதிகளும், பயிற்சி பெற்ற ஊழியர்களும் இருக்க வேண்டும் என குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
உயிரிழப்புக்கான காரணம் என்ன? போலீசார் விசாரணை!
இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியின் பெற்றோர் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தினரிடம் இதுவரை வாக்குமூலம் பெறப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வகுப்பறை சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களை ஆய்வு செய்து, சிறுமி மயங்கி விழுந்தது முதல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது வரையிலான நிகழ்வுகளை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: சில்லறை பிரச்னையால் பறிபோன உயிர்.. பேருந்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண் நடத்துநர் பலி!
முதற்கட்ட தகவல்களின்படி, மருத்துவக் காரணங்களால் சிறுமி மயங்கி விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியான பின்னரே உயிரிழப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும். இந்தச் சம்பவத்தில் இதுவரை எந்தவிதமான சதிச்செயலும் கண்டறியப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.