லஞ்சம், ஊழல், போதைப்பொருள் பக்கம் போகாதீர்கள்.. எதற்கும் அடிமையாகாதீர்கள் – மாணவர்களுக்கு முதலமைச்சர் விஜய் அட்வைஸ்..
CM Vijay Speech: மாணவர்களுக்கு முக்கியமான அறிவுரைகளையும் வழங்கிய விஜய், "இது உங்களுக்கான நிகழ்ச்சி. உங்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காகத்தான் உங்களுடைய அண்ணனாக நான் வந்திருக்கிறேன். லஞ்சம், ஊழல், போதைப்பொருள் போன்ற தவறான பாதைகளுக்குச் செல்லாதீர்கள். எந்தத் தவறுக்கும் அடிமையாகிவிடாதீர்கள் என பேசியுள்ளார்.
நவம்பர் 4, 2026: தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவில், மாணவர்கள் அரசியல் குறித்து கவலைப்படாமல் நன்றாகப் படித்து வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். மேலும், மாணவர்களுக்காகவும் அவர்களின் எதிர்காலத்திற்காகவும்தான் தான் அரசியலுக்கு வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், “நான் இங்கு முதலமைச்சராக வரவில்லை; எப்போதும் போல உங்களுடைய அண்ணனாக வந்திருக்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.
நீலாங்கரையில் கல்வி விருது வழங்கும் விழா!
தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆண்டுதோறும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு கல்வி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா சென்னை நீலாங்கரையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகைகளை வழங்கிப் பாராட்டினார்.
கோடிக்கணக்கான நன்றிகள்.. மாணவர்களிடம் நெகிழ்ந்த விஜய்!
இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் பேசிய விஜய், “என் நெஞ்சில் குடியிருக்கும் என்னுடைய அன்பான செல்லங்களே, நண்பா, நன்றி! உங்கள் எல்லோருக்கும் என்னுடைய வணக்கம். வெறும் வணக்கம் சொல்லிவிட்டுக் கடந்து போக முடியாது. உங்கள் அனைவருக்கும் பெரிய பெரிய நன்றிகளைச் சொல்ல வேண்டும். கோடிக்கணக்கான நன்றிகள். நிபந்தனையற்ற அன்பையும் ஆதரவையும் எனக்குக் கொடுத்த இறைவனுக்கு நன்றி” என்று தெரிவித்தார்.
முதலமைச்சராக அல்ல.. உங்கள் அண்ணனாக வந்திருக்கிறேன்!
தொடர்ந்து பேசிய அவர், “நான் இங்கு முதலமைச்சராக வரவில்லை. எப்போதும் போல உங்களுடைய அண்ணனாக வந்திருக்கிறேன். உங்களுக்காகவும் சேர்த்துத்தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். விஜய் ஏதோ அரசியல் பேசப்போகிறாரா? 2029 தேர்தலுக்கு இப்போதே தயாராகச் சொல்லப்போகிறாரா? என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இங்கு அரசியல் பேச வரவில்லை. உங்களிடம் ஓட்டு கேட்கவும் வரவில்லை. இப்போதைக்கு உங்களுக்குக் கட்சி அரசியல் தேவையில்லை. நன்றாகப் படியுங்கள். வாழ்க்கையில் பெரிய பெரிய உயரங்களுக்குச் செல்லுங்கள்” என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
தமிழ்நாடே உங்களை நம்பித்தான் இருக்கிறது!
மாணவர்களின் எதிர்காலம் குறித்து குறிப்பிட்ட விஜய், “உங்களை நம்பித்தான் உங்களுடைய பெற்றோரும், இந்தச் சமூகமும் இருக்கிறது. நானும் உங்களை நம்பித்தான் இருக்கிறேன். ஏன், தமிழ்நாடே உங்களை நம்பித்தான் இருக்கிறது. எனவே, அனைவரும் உங்களுடைய தனித்தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்” என்றார்.
உங்களைத் தடுத்தால் நீங்கள் ஜெயிக்கப்போகிறீர்கள் என்று அர்த்தம்!
🔔 | மாணவர்களுக்கு அட்வைஸ் : முதலமைச்சர் ஜோசப் விஜய்
வெந்து தணிந்தது காடு முதலமைச்சருக்கு வணக்கத்தை போடு 🙏
#CMJosephVijayWithStudents https://t.co/EpaXuseQfM
— Prakash Vijay (@PrakazVijay_Of) November 4, 2026
மாணவர்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் தடைகள் குறித்துப் பேசிய விஜய், “உங்களை யாராவது தடுக்கிறார்கள் என்றால், நீங்கள் ஜெயிக்கப்போகிறீர்கள் என்பது அவர்களுக்கு உறுதியாகத் தெரிந்துவிட்டது என்று அர்த்தம். தடைகளைத் தாண்டி நீங்கள் வெற்றி பெற்றுவிட்டால் அவர்கள் வயிறு எரிவார்கள். எனவே, உங்களை நீங்கள் பலமாகவும், உறுதியாகவும் நம்பிக்கையுடனும் வைத்துக் கொள்ளுங்கள். அந்த நம்பிக்கை இருந்தாலே வெற்றி நிச்சயம்” என்று தன்னம்பிக்கை அளித்தார்.
மேலும் படிக்க: பட்டா மாற்றத்துக்கு ரூ.1.5 லட்சம் லஞ்சம்.. நீலகிரியில் பெண் விஏஓ அதிரடி கைது.. லஞ்ச ஒழிப்பு போலீஸ் நடவடிக்கை!
லஞ்சம், ஊழல், போதைப்பொருள் பக்கம் போகாதீர்கள்!
தொடர்ந்து மாணவர்களுக்கு முக்கியமான அறிவுரைகளையும் வழங்கிய விஜய், “இது உங்களுக்கான நிகழ்ச்சி. உங்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காகத்தான் உங்களுடைய அண்ணனாக நான் வந்திருக்கிறேன். லஞ்சம், ஊழல், போதைப்பொருள் போன்ற தவறான பாதைகளுக்குச் செல்லாதீர்கள். எந்தத் தவறுக்கும் அடிமையாகிவிடாதீர்கள். உங்களோடு நான் இருக்கிறேன்; என்னோடு நீங்கள் இருக்கிறீர்கள். இந்த இணைப்பு எப்போதும் தொடரும். நம்பிக்கையோடு இருங்கள். நல்லதே நடக்கும்” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.