AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? 15,659 சிறப்பு பேருந்துகள்.. சென்னையில் 16 இடங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும்..

Diwali Special Bus: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் குடியிருப்புகளுக்கு அருகிலேயே பேருந்து சேவையைப் பெறும் வகையில் திருவான்மியூர், ஆவடி, தாம்பரம், திருவொற்றியூர், அடையாறு, பிராட்வே, எழும்பூர், அம்பத்தூர், தரமணி, தீவுத்திடல், வேளச்சேரி, அசோக் பில்லர், பூந்தமல்லி, சிறுசேரி, சைதாப்பேட்டை உள்ளிட்ட 16 இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? 15,659 சிறப்பு பேருந்துகள்.. சென்னையில் 16 இடங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 04 Nov 2026 16:49 PM IST

நவம்பர் 4, 2026: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக 15,659 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக இந்தச் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும், பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நடப்பாண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து நவம்பர் 9ஆம் தேதி திங்கட்கிழமையும் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால், சனி, ஞாயிறு, திங்கள் எனத் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இதனால் சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லத் திட்டமிட்டு வருகின்றனர்.

சென்னையில் இருந்து 15,659 சிறப்பு பேருந்துகள்

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் பொதுமக்களின் பயணத் தேவையைக் கருத்தில் கொண்டு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து மட்டும் 15,659 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், நவம்பர் 5ஆம் தேதி முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், பயணிகள் தங்களது பயணத்தை எளிதாக மேற்கொள்ளும் வகையில் சென்னையில் 16 இடங்களில் இருந்து பேருந்துகளில் ஏறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: தவெக ஆட்சியை கவிழ்க்கனும்.. ரூ. 15 கோடி தரோம் அதிமுகவுக்கு வாங்க.. முஸ்தபா எம்எல்ஏ பகீர் குற்றச்சாட்டு!

முன்பதிவு செய்த பயணிகள் சென்னையின் 16 இடங்களில் இருந்தும் தங்களது பேருந்துகளில் ஏறிச் செல்லலாம். பயணிகளின் குறைகளைத் தீர்க்கவும், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அதேபோல், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

சென்னையில் எந்தெந்த இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் குடியிருப்புகளுக்கு அருகிலேயே பேருந்து சேவையைப் பெறும் வகையில் திருவான்மியூர், ஆவடி, தாம்பரம், திருவொற்றியூர், அடையாறு, பிராட்வே, எழும்பூர், அம்பத்தூர், தரமணி, தீவுத்திடல், வேளச்சேரி, அசோக் பில்லர், பூந்தமல்லி, சிறுசேரி, சைதாப்பேட்டை உள்ளிட்ட 16 இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மேலும் படிக்க: டாஸ்மாக் கடைகளில் அதிரடி மாற்றம்.. காலி மதுபாட்டில்களை திருப்பிக் கொடுத்தால் ரூ.10.. அறிமுகமாகும் தானியங்கி இயந்திரம்!

எந்த ஊர்களுக்கு எந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து செல்லலாம்?

  • கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படும்.
  • சிஎம்டிஏ காலநிலைப் பூங்கா அருகே உள்ள தற்காலிக பேருந்து நிலையம்: வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
  • மறைமலைநகர் தற்காலிக பேருந்து நிலையம்: கும்பகோணம், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
  • கோயம்பேடு பேருந்து நிலையம்: கிழக்குக் கடற்கரைச் சாலை (ECR) வழியாக காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு மற்றும் திருத்தணி உள்ளிட்ட வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படும்.
  • மாதவரம் பேருந்து நிலையம்: பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநிலத்தை நோக்கிச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

சென்னை திரும்பவும் சிறப்புப் பேருந்துகள்!

தீபாவளி விடுமுறையைச் சொந்த ஊர்களில் கொண்டாடிவிட்டு மீண்டும் சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காகவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு 11,197 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow Us