தென் மாவட்டங்களில் தொடரும் மழை.. இன்று 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை..
Rainfall Alert: நீலகிரி, கோயம்புத்தூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தின் ஓரிரு இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும், ஏனைய தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நவம்பர் 4, 2026: தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நவம்பர் 4 முதல் 8ஆம் தேதி வரை சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 3.1 கி.மீ. உயரம் வரை மற்றொரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது.
4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:
நவம்பர் 4: நீலகிரி, கோயம்புத்தூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தின் ஓரிரு இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும், ஏனைய தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நவம்பர் 5: தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் இதர தென் தமிழகத்தில் மிதமான மழையும், வட தமிழகத்தின் ஓரிரு இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நவம்பர் 6: தேனி, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதர தென் தமிழகம் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் படிக்க: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசு குழுவிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்
நவம்பர் 7: மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இதர தென் தமிழகம் மற்றும் வட கடலோர தமிழகத்தின் ஒருசில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 8: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும். இதர தென் தமிழகத்தின் ஒருசில இடங்களில் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தின் ஒருசில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நவம்பர் 9 மற்றும் 10: தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களின் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தின் ஒருசில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க: 450 டன் வெங்காயம் வீண்! விலையேற்றதால் மக்கள் கண்ணீர்.. கவலையின்றி இடைத்தேர்தல் பணியில் 24-ஆம் புலிகேசி.. உதயநிதி காட்டம்!
வெப்பநிலை எப்படி இருக்கும்?
நவம்பர் 4 முதல் 8ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது. எனினும், வெப்பநிலை சற்று குறைய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கான வானிலை முன்னறிவிப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (நவம்பர் 4) மற்றும் நாளை (நவம்பர் 5) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.