தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி எப்போது? வெளியான அறிவிப்பு
Population Census in Tamil Nadu: இந்தியாவில் 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான முன்னேற்பாடுகள் மத்திய மற்றும் மாநில அரசுகளால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இதன் முதற்கட்டமாக, பொதுமக்கள் தாங்களாகவே விவரங்களைப் பதிவு செய்யும் 'சுய கணக்கெடுப்பு' முறை ஜூலை 17, 2026 முதல் ஜூலை 31 வரை 15 நாட்களுக்கு நடைபெறும்.
சென்னை மார்ச் 06: இந்தியாவில் 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பை முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய பதிவாளர் பொது அலுவலகம் வெளியிட்ட உத்தரவு தமிழ்நாடு அரசின் அரசிதழில் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948ன் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மக்கள் தொகை தொடர்பான தகவல்களை சேகரிக்கும் முக்கிய நடவடிக்கையாக இந்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜூலை 17 முதல் சுய கணக்கெடுப்பு தொடக்கம்
தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமாக சுய கணக்கெடுப்பு (Self Enumeration) நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதன்படி பொதுமக்கள் தங்களது குடும்ப விவரங்களை தாங்களே பதிவு செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சுய கணக்கெடுப்பு பணி ஜூலை 17, 2026 முதல் ஜூலை 31, 2026 வரை 15 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையின் மூலம் மக்கள் நேரடியாக தங்களது குடும்ப தகவல்களை பதிவு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 1 முதல் வீடு வீடாக கணக்கெடுப்பு
சுய கணக்கெடுப்பு முடிந்த பின்னர் அடுத்த கட்டமாக வீடு வீடாக சென்று தகவல் சேகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி ஆகஸ்ட் 1, 2026 முதல் ஆகஸ்ட் 30, 2026 வரை 30 நாட்கள் வீட்டு பட்டியல் தயாரிக்கும் (House Listing Operations) பணிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலத்தில் கணக்கெடுப்பு அதிகாரிகள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று குடும்பங்களின் அடிப்படை விவரங்களை பதிவு செய்வார்கள்.
Also Read: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.வி மாற்றம்.. குடியரசு தலைவர் அதிரடி உத்தரவு!
வீடுகள் மற்றும் குடும்ப தகவல்கள் சேகரிப்பு
இந்த கணக்கெடுப்பின் போது வீடுகளின் அடிப்படை அமைப்பு, கட்டிட எண், வீட்டு எண், வீட்டு நிலைமை, சுவர் மற்றும் கூரை அமைப்பு போன்ற தகவல்கள் பதிவு செய்யப்படும். அதேபோல் குடும்பத்தில் வசிக்கும் நபர்களின் எண்ணிக்கை, குடும்பத் தலைவர் பெயர், பாலினம், சமூக பிரிவு உள்ளிட்ட விவரங்களும் சேகரிக்கப்படும். மேலும் குடிநீர் வசதி, கழிப்பிடம், சமையலறை, எரிபொருள் பயன்பாடு, இணைய வசதி, மொபைல் போன், வாகன வசதி போன்ற பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்த தகவல்களும் பதிவு செய்யப்படுகின்றன.
அரசு திட்டங்களுக்கு முக்கிய ஆதாரம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலம் பெறப்படும் தகவல்கள் அரசு திட்டங்களை திட்டமிடுவதற்கு முக்கிய ஆதாரமாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மாநில மற்றும் மத்திய அரசுகள் மக்கள் தேவைகள், அடிப்படை வசதிகள் மற்றும் சமூக நிலைமை போன்றவற்றை மதிப்பீடு செய்ய இந்த தரவுகளை பயன்படுத்துகின்றன. இதனால் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நாட்டின் நிர்வாக மற்றும் வளர்ச்சி திட்டங்களில் முக்கிய பங்கு வகிப்பதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.