நாங்குநேரி இரட்டை கொலை சம்பவம்.. 7 பேர் கைது.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..
இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஜானின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை துதர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும், இதன் பின்னணியில் உள்ள முக்கிய நபர்களையும் பிடிக்க வேண்டும் என்றும் அவர்கள் தொடர்ந்து கோரிக்கை முன்வைத்தனர்.
நெல்லை, மார்ச் 5, 2026: நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் உள்ள ஒரு டீக்கடையில் மார்ச் 2ஆம் தேதி இரவு, முகமூடி அணிந்த மர்ம நபர்கள் திடீரென அங்கு இருந்தவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அங்கு இருந்தவர்களை சரமாரியாக வெட்டியுள்ளது. இந்த தாக்குதலில் பெரும்பத்து இந்திரா காலனியைச் சேர்ந்த 42 வயதான ஜான் மற்றும் செங்கல் சூளையில் பணியாற்றி வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 50 வயதுடைய திருநாத் கட்டா ஆகிய இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த சம்பவத்தில் ஆறு பேர் படுகாயம் அடைந்து தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இரட்டை கொலை – 7 பேர் கைது:
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாக சென்னிமலையைச் சேர்ந்த கண்ணன், அந்தோணி, மைக்கேல் ராஜ், உச்சிமாகாளி, வசந்தகுமார், சுப்பையா, கல்யாணி, இசக்கிராஜா ஆகிய ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களிடம் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. அதாவது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை மாவட்டத்தில் நடந்த தொடர் கொலை சம்பவங்களுக்கு பழிவாங்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட அனைவரும் 19 முதல் 23 வயது உட்பட்ட இளைஞர்களாகும். இவர்கள் கடந்த சில நாட்களாகவே பெரும்பத்து பகுதியை நோட்டமிட்டு, அங்கு என்ன நடக்கிறது, எத்தனை மணிக்கு யார் யார் இருக்கிறார்கள் என்பதைக் கவனித்து மக்களின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர்.
வெளியான பகீர் தகவல்:
பின்னர் குறிப்பிட்ட சமூகத்தை, குறிப்பாக பட்டியலின மக்கள் அதிகம் கூடும் இடத்தை கண்டறிந்து இந்த தாக்குதலை திட்டமிட்டு நடத்தியதாக கூறப்படுகிறது. தாக்குதலுக்கு பிறகு அங்கிருந்து தப்பிப்பதற்காக பல்வேறு உயர்ரக இருசக்கர வாகனங்களையும் திருடியிருப்பது அம்பலமாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஜானின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை துதர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும், இதன் பின்னணியில் உள்ள முக்கிய நபர்களையும் பிடிக்க வேண்டும் என்றும் அவர்கள் தொடர்ந்து கோரிக்கை முன்வைத்தனர்.
இதற்கிடையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், உறவினர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.