தவெக எம்எல்ஏ பல்லவி ஆண் குழந்தைக்கு “டிவிகே” என பெயர்… முதல்வர் ஜோசப் விஜய் சூட்டினார்!
Pallavi MLA Baby Name: தமிழக வெற்றிக் கழகத்தின் சென்னை திருவிக நகர் தொகுதி எம்எல்ஏ-வான பல்லவியின் ஆண் குழந்தைக்கு டிவிகே ( தமிழ் வெற்றி கொண்டான்) என்று முதல் அமைச்சர் ஜோசப் விஜய் பெயர் வைத்தார். இந்த பெயர் பேசும் பொருளாகியுள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த 17- ஆவது சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் சார்பில் சென்னை திருவிக நகர் சட்டப்பேரவை தொகுதியில் பல்லவி என்ற பெண் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தல் பிரச்சாரத்தின் போதே, பல்லவி எம்எல்ஏ நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். தற்போது, அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை வயிற்றில் இருக்கும் போதே, டி. வி. கே. என பெயர் சூட்ட போவதாக பல்லவி எம்எல்ஏ தெரிவித்து இருந்தார். அதாவது, தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், முதல் அமைச்சருமான ஜோசப் விஜய் கடைசியாக நடித்திருந்த ஜனநாயகன் படத்தில் அவரது பெயர் தளபதி வெற்றி கொண்டான் என்பதன் சுருக்கமே டி. வி. கே. ஆகும். இது பேசும் பொருளானது. இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை கடந்த ஜூன் 18- ஆம் தேதி கூடிய நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தில் பல்லவி எம்எல்ஏ தனது கை குழந்தையுடன் பங்கேற்று இருந்தார்.
கைக்குழந்தையுடன் சட்டப்பேரவைக்கு வந்த பல்லவி எம்எல்ஏ
அப்போது, சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு அங்கு உள்ள பெண் எம்எல்ஏக்களுக்கான அறையில் சிறிது நேரம் இருந்துவிட்டு புறப்பட்டு சென்றார். அப்போது, தன்னுடன் தனது ஆண் குழந்தையையும் எடுத்து வந்திருந்தார். இந்த நிலையில், பல்லவி எம்எல்ஏ தனது கைக் குழந்தையுடன் தலைமைச் செயலகத்தில் இன்று திங்கள்கிழமை ( ஜூன் 22- ஆம் தேதி) வந்திருந்தார்.
மேலும் படிக்க: தெரு நாய்களால் அதிகரிக்கும் அச்சம்.. நடவடிக்கை குறித்து அறிக்கை கேட்டு உயர்நீதிமன்றம் உத்தரவு




குழந்தையை வாங்கி உச்சி முகர்ந்த முதல்வர் விஜய்
சட்டப்பேரவை கூட்டம் முடிவடைந்து முதல்- அமைச்சர் ஜோசப் விஜய் தனது வீட்டுக்கு புறப்பட்ட நேரத்தில் அவரை பல்லவி எம்எல்ஏ சந்தித்து பேசினார். அப்போது, பல்லவி எம்எல்ஏவின் கைக்குழந்தையை முதல்- அமைச்சர் ஜோசப் விஜய் தனது கைகளால் வாங்கி உச்சி முகர்ந்தார். தொடர்ந்து, அந்த குழந்தைக்கு டி .வி. கே. என பெயர் சூட்டினார்.
குழந்தைக்கு டிவிகே என பெயர் சூட்டிய விஜய்
அதாவது, தமிழ் வெற்றி கொண்டான் என்ற பெயரை சூட்டி இருந்தார். இதன் மூலம் தனது மகனுக்கு டி. வி. கே. என பெயர் சூட்ட வேண்டும் என்ற தமிழக வெற்றிக் கழகத்தின் எம். எல். ஏ. பல்லவியின் நீண்ட நாள் ஆசை நிறைவேறி உள்ளது. தொடர்ந்து, அந்த குழந்தையை முதல்வர் விஜய் ஆசீர்வதித்தார்.
மேலும் படிக்க: சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு 1091 என்ற உதவி எண் அறிவிப்பு.. முழு விவரம் இதோ..