சட்டமன்றத்தில் கலகலப்பு.. பிரேமலதா விஜயகாந்த் பேச பேச.. குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்!!
Chaos in the Assembly: சட்டமன்றப் பணியாளர்கள் ஒவ்வொரு உறுப்பினரின் இருக்கைக்கும் சென்று டம்ளரில் தண்ணீர் வழங்குவதை மாற்றி, ஒவ்வொரு மேஜையிலும் தண்ணீர் பாட்டில்களை வைக்கலாம் எனப் பிரேமலதா யோசனை கூறினார். பிளாஸ்டிக் பாட்டில்களைத் தவிர்த்து கண்ணாடி பாட்டில்களைப் பயன்படுத்தலாம் என்றும் முதலமைச்சருக்குக் கோரிக்கை வைத்தார்.
சென்னை, ஜுன் 22: தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய தேமுதிக பொதுச்செயலாளரும், விருதாச்சலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த், அவையில் பல முக்கிய கருத்துக்களைப் பதிவு செய்தார். அவரது பேச்சின் போது அவையில் காரசாரமான விவாதங்களுக்கு மத்தியிலும் சில சுவாரசியமான, கலகலப்பான தருணங்கள் அரங்கேறின. தனது உரையின் தொடக்கத்தில், 53-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழக முதலமைச்சருக்கு, மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் சார்பாகவும், கட்சியின் சார்பாகவும் தனது மனப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்களைப் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். மேலும், மேகதாது அணை மற்றும் ஆளுநர் உரை போன்ற முக்கிய விவாதங்களில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பேசுவதற்குச் சமமான வாய்ப்புகளை சபாநாயகர் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிக்க: ‘சைகை காட்டி கேலி செய்த எம்எல்ஏக்கள்’.. “இனி இப்படி செய்தால் அவ்ளோதான்!”.. ஸ்ட்ரிக்ட்டாக எச்சரித்த சபாநாயகர்!
ஆளுநர் உரை மீதான விமர்சனமும் விவாதமும்:
ஆளுநர் உரை குறித்துப் பேசிய பிரேமலதா, “ஆளுநரின் உரை ஆளுங்கட்சியின் அறிக்கை போலவே இருந்தது. தமிழில் உரையாற்ற முயன்ற ஆளுநர், 37 நிமிட உரையில் சுமார் 37 இடங்களில் தமிழ் வார்த்தைகளைத் தவறாக உச்சரித்தார். அண்ணா, கலைஞர், காமராஜர், வேலுநாச்சியார் போன்ற தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிடும் போது பிழைகள் இருந்தது வேதனையளிக்கிறது” என்றார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய சபாநாயகர், “மாற்று மாநிலத்தைச் சேர்ந்த ஒரு ஆளுநர் தமிழகத்திற்கு வந்து, இங்குள்ள தலைவர்களின் பெயர்களைத் தமிழில் உச்சரிக்க முயன்ற அவரது ஆர்வத்தை நாம் முதலில் பாராட்டக் கற்றுக்கொள்ள வேண்டும். அவர் தமிழை ஆர்வமாகக் கற்று வருகிறார்” என்று கூறி, ஆளுநரின் தமிழ் உச்சரிப்பு மீதான விமர்சனங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.
அவையைச் சிரிக்க வைத்த விவாதம்:
சட்டமன்றப் பணியாளர்கள் ஒவ்வொரு உறுப்பினரின் இருக்கைக்கும் சென்று டம்ளரில் தண்ணீர் வழங்குவதை மாற்றி, ஒவ்வொரு மேஜையிலும் தண்ணீர் பாட்டில்களை வைக்கலாம் எனப் பிரேமலதா யோசனை கூறினார். பிளாஸ்டிக் பாட்டில்களைத் தவிர்த்து கண்ணாடி பாட்டில்களைப் பயன்படுத்தலாம் என்றும் முதலமைச்சருக்குக் கோரிக்கை வைத்தார்.
குறுக்கிட்ட ஓ.பன்னீர்செல்வம்:
இந்த யோசனைக்குக் குறுக்கிட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்), “அவையில் கோபம் வந்தால் தண்ணீர் பாட்டில்களை ஒருவருக்கொருவர் வீசி எறிவதற்குக் கூடுதல் வாய்ப்பு ஏற்பட்டுவிடும்” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். இதற்குப் பதிலளித்த சபாநாயகர், “தண்ணீர் பாட்டில் தான் வீச வேண்டும் என்று இல்லை, டம்ளரைக் கூட வீசலாம். ஒருவேளை ஓபிஎஸ் அவர்கள் தனது தனிப்பட்ட அனுபவத்தின் காரணமாக இதைக் குறிப்பிடுகிறாரா?” எனக் கேட்க, அவையில் பலத்த சிரிப்பொலி எழுந்தது.
பிரேமலதாவும், “காலையிலிருந்து அவையில் காரசாரமாக விவாதம் சென்றதால், முதலமைச்சரின் பிறந்தநாளுமாக எல்லாரும் சந்தோஷமாக இருக்கவே இதைப் பேசினேன். தண்ணீர் என்றாலே காவேரி தண்ணீரோ, டாஸ்மாக் தண்ணீரோ எப்படியும் ஒரு பிரச்சனைதான்” என நகைச்சுவையாகப் பேசி அவையைக் கலகலப்பாக்கினார்.
அம்மோனியா கசிவு விபத்து குறித்து கவலை:
கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் நடந்த அம்மோனியா கசிவு விபத்தில் வடமாநில இளம் பெண்கள் பாதிக்கப்பட்டு, ரத்தம் வழியும் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை நேரில் கண்டு வேதனை அடைந்ததாகப் பிரேமலதா குறிப்பிட்டார். அவர்களுக்குத் தமிழக அரசு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கி, அமைச்சர்கள் நேரில் சென்றதைப் பாராட்டிய அவர், ஏழைப் பெண்களான அவர்களுக்குக் கூடுதல் மருத்துவ உதவிகளை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றார்.
இதையும் படிக்க : அரசுப் பள்ளியில் புகுந்து இடையூறு.. ‘ரீல்ஸ்’ போட்ட தவெக நிர்வாகி கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்!
விருதாச்சலம் தொகுதி கோரிக்கைகள்:
2006-ல் கேப்டன் விஜயகாந்த் வெற்றி பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க விருதாச்சலம் தொகுதியில் தன்னை வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி கூறிய பிரேமலதா, தொகுதி சார்ந்த முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார். விருதாச்சலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய தனி மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
விருதாச்சலத்தில் நலிவடைந்துள்ள அரசு பீங்கான் தொழிற்சாலை மற்றும் கல்லூரியைச் சீரமைத்து, ஏற்றுமதி மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெருக்க வேண்டும். அப்பகுதியில் நிலத்தடி நீர் மாசுபடுவதால் கிட்னி பாதிப்புகள் ஏற்படுகின்றன; எனவே தடையற்ற கூட்டுக் குடிநீர் திட்டத்தைக் கொண்டு வர வேண்டும். மரவள்ளிக்கிழங்கு, மக்காச்சோளம், நெல், கரும்பு பயிரிடும் விவசாயிகளின் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
தனது தொகுதி கோரிக்கைகள் அடங்கிய மனுவைச் சபாநாயகரிடம் நேரில் சமர்ப்பித்த பிரேமலதா விஜயகாந்த், காவிரி மற்றும் மேகதாது அணை விவகாரங்களில் தமிழகத்தின் நீராதாரம் காக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.