‘சைகை காட்டி கேலி செய்த எம்எல்ஏக்கள்’.. “இனி இப்படி செய்தால் அவ்ளோதான்!”.. ஸ்ட்ரிக்ட்டாக எச்சரித்த சபாநாயகர்!
கடந்த வெள்ளிக்கிழமை அன்று பேரவை நடந்து கொண்டிருந்த போது, சில உறுப்பினர்கள் அவையில் உள்ள மற்ற உறுப்பினர்களைக் கேலி செய்யும் வகையில் சில முக பாவனைகளையும், சைகை மொழிகளையும் செய்துள்ளனர். இந்த காட்சிகள் கடந்த இரண்டு நாட்களாகச் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வீடியோவாக வெளியாகி மிக வேகமாகப் பரவி வருகிறது" என்று சுட்டிக்காட்டினார்.
சென்னை, ஜுன் 22: தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில், அவையின் மாண்பைக் குலைக்கும் வகையில் சைகை மொழிகள் மற்றும் முக பாவனைகள் மூலம் கேலி செய்த உறுப்பினர்களுக்குச் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இனிவரும் காலங்களில் இத்தகைய செயல்கள் தொடர்ந்தால் ‘அவை உரிமை மீறல்’ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிக்க : முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்றதற்கான காரணம் இதுதான், ஆதாரம் உள்ளது – அமைச்சர் கீர்த்தனா பரபரப்பு பேட்டி
சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோ:
தமிழக சட்டமன்றப் பேரவையின் இன்றைய கூட்டத் தொடர் தொடங்கியதும் சபாநாயகர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அவர் பேசுகையில், “கடந்த வெள்ளிக்கிழமை அன்று பேரவை நடந்து கொண்டிருந்த போது, சில உறுப்பினர்கள் அவையில் உள்ள மற்ற உறுப்பினர்களைக் கேலி செய்யும் வகையில் சில முக பாவனைகளையும், சைகை மொழிகளையும் செய்துள்ளனர். இந்த காட்சிகள் கடந்த இரண்டு நாட்களாகச் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வீடியோவாக வெளியாகி மிக வேகமாகப் பரவி வருகிறது” என்று சுட்டிக்காட்டினார்.
சட்டமன்ற மாண்பைக் காக்க அறிவுரை:
பேரவை நடவடிக்கைகள் நேரலையாக ஒளிபரப்பப்படுவதை நினைவூட்டிய சபாநாயகர், “சட்டமன்றப் பேரவை நடவடிக்கைகள் தற்போது நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுவதால், பேரவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இத்தகைய கண்ணியக்குறைவான செயல்கள் சட்டமன்றப் பேரவையின் மாண்பையும், கண்ணியத்தையும் குறைக்கும் செயலாகும்” என்று வேதனை தெரிவித்தார்.
மேலும், “இந்தியாவில் உள்ள பிற மாநில சட்டமன்ற பேரவைகளுக்கு எடுத்துக்காட்டாகவும், நூற்றாண்டு கால வரலாற்றுப் பெருமை கொண்டதாகவும் இந்தத் தமிழக சட்டமன்ற மாமன்றம் விளங்குகிறது. இதன் மரபினைக் காத்திடும் வகையிலும், கண்ணியத்தினையும் மாண்பினையும் உயர்த்திப் பிடிக்கும் வகையிலும், மாண்புமிகு உறுப்பினர்கள் தங்களது பொறுப்பினையும் கடமையினையும் உணர்ந்து செயல்பட வேண்டும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்துகிறேன்” என்றார்.
இதையும் படிக்க : அரசுப் பள்ளியில் புகுந்து இடையூறு.. ‘ரீல்ஸ்’ போட்ட தவெக நிர்வாகி கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்!
உரிமை மீறல் நடவடிக்கை எச்சரிக்கை:
இதுபோன்ற சைகை காட்டுவது மற்றும் கேலி செய்யும் செயல்கள் அவையில் தொடருமானால், அந்தச் செயல் ‘அவையின் உரிமை மீறலாக’ கருதப்படும். சம்பந்தப்பட்ட உறுப்பினர் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று எச்சரித்தார்.