முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்றதற்கான காரணம் இதுதான், ஆதாரம் உள்ளது – அமைச்சர் கீர்த்தனா பரபரப்பு பேட்டி
சிவகாசியில் முதல்வர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற மருத்துவ முகாமில் கலந்துகொண்ட அமைச்சர் கீர்த்தனா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்றுவிட்டதாக சொல்பவர்களுக்கு உரிய நேரத்தில் எப்போது ஆந்திராவுக்கு சென்றது என ஆதாரத்துடன் தெரிவிப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
விருதுநகர், ஜூன் 20 : முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்றுவிட்டது என சொல்பவர்களுக்கு அதற்கான காரணத்தை உரிய நேரத்தில் ஆதராத்துடன் தெரிவிப்பேன் என தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா விளக்கமளித்தார். தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு ஜூன்20, 2026 இன்று சிவகாசியில் நடைபெற்ற மருத்துவ முகாம் நடைபெற்றது. அதில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
அமைச்சர் கீர்த்தனா பரபரப்பு பேட்டி
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் முதல்வர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு ஜூன் 20, 2026 இன்று சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த ஒரு மாதத்தில் பல்வேறு நிறுவனங்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிலைக்கு வந்துள்ளோம் என்றார்.
இதையும் படிக்க : “அதிமுகவும் தவெகவும் ஒன்றுதான்”.. மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழாவில் ஆதவ் அர்ஜுனா அதிரடி பேச்சு!!




மேலும் பேசிய அவர், முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்றுவிட்டதாக சொல்பவர்களுக்கு உரிய நேரத்தில் எப்போது ஆந்திராவுக்கு சென்றது என ஆதாரத்துடன் தெரிவிப்பேன். சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக தொழில் முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்றுள்ளனர். அதற்கான உரிய ஆதாரம் மற்றும் எதற்காக, எப்போது வெளியறினார்கள் என்பது குறித்த விவரங்கள் எங்களிடம் உள்ளன. சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினால் அதற்கு பதிலளிக்க தயாராக இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு, பண்ணையார் தனத்தை விட்டு விட வேண்டும். டி.ஆர்.பி.ராஜா இன்னமும் தொழில் துறை அமைச்சராகவே தன்னை நினைத்து வாழ்ந்துகொண்டிருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களுக்கும், மக்களுக்கும் மரியாதை கொடுங்கள். நிதி ஆயோக் கூட்டத்தில் 1.5 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை தமிழகம் அடையும் என முதல்வர் தெரிவித்திருந்தார். அதற்கான தொலை நோக்கு திட்டம் தாயரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
இதையும் படிக்க : நீட் மறுதேர்வு.. முறைகேடுகளைத் தவிர்க்க கடும் கட்டுப்பாடுகள்.. என்னென்ன? முழு விவரம்!!
திமுக அரசு வாங்கிய கடனை நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தி இருந்தால் ரொம்ப நல்லது. அதனால் மக்கள் பலனடைந்தார்களா என்பதுதான் கேள்வி. கொரோனா காலம் என்று சமாளிக்கின்றனர். இதே காலத்தை கடந்து வந்த மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களின் வளர்ச்சியை எடுத்து பார்க்க வேண்டும்.
30 நாட்களிலேயே ஏமாற்றம் என விமர்சிக்கின்றனர்.. 5 ஆண்டுகளாக நீங்கள் ஏமாற்றியதால்தான் மாற்றம் வேண்டும் என்று மக்கள் எங்களை தேர்ந்தெடுத்து உள்ளனர். அரசு அதிகாரிகளை கைக்குள் போட்டுக் கொண்டு ஏதாவது செய்துவிடலாமா என முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அதையும் தாண்டி ஊழல் இல்லாத ஆட்சியை மக்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். மாற்றத்தை ஏற்றுக் கொள்ளுங்கள், இல்லாவிட்டால் கல்யாண வீடுகளுக்கு சென்று கத்திக் கொண்டிருங்கள் என்றார்.