செந்தில் பாலாஜியின் சகோதரரை வலைவீசி தேடும் போலீஸ்.. சென்னைக்கே வந்த கரூர் போலீசார்.. அதிரடி சோதனை!!
Senthil Balaji brother ashok: நீதிமன்ற விசாரணை ஒருபுறம் இருக்க, கரூர் மாவட்ட காவல் துறையிலும் அசோக் மீது ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த உள்ளூர் வழக்கு விசாரணைக்காகவே கரூர் போலீசார் சென்னைக்கு வந்து அவரது வீட்டைச் சோதனையிட்டதாகத் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை, ஜுன் 20: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரரான அசோக் என்பவரைத் தேடி கரூர் மாவட்ட போலீசார் சென்னைக்கு வந்து திடீர் விசாரணை மற்றும் சோதனையில் ஈடுபட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள கற்பக அவென்யூ, எம்ஆர்சி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டை அசோக் வாடகைக்கு எடுத்து சில மாதங்களாகத் தங்கி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கரூர் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் (ADSP) தலைமையிலான தாராளமான போலீசார் அதிகாலையிலேயே அசோக்கின் வீட்டிற்கு அதிரடியாக வந்து சேர்ந்தனர். இருப்பினும், போலீசார் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அசோக் அல்லது அவரது குடும்பத்தினர் யாரும் அங்கு இல்லை என்பது தெரியவந்தது.
மேலும் படிக்க: பண மோசடி புகார்.. திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி மகன் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு!
ஊழியர்களின் செல்போன்கள் ஆய்வு:
அசோக் வீட்டில் இல்லாததைத் தொடர்ந்து, அங்கு பணியில் இருந்த ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும், அங்குள்ள ஊழியர்களின் கைபேசிகளை (Cellphones) வாங்கி, அவர்கள் கடைசியாக யாரிடம் பேசினார்கள் என்பது குறித்த விவரங்களையும், அசோக்கின் கைபேசி சிக்னல் இந்த பகுதியில் காண்பிக்கப்பட்ட விவரங்களையும் கொண்டு தீவிர ஆய்வு மேற்கொண்டனர். சில மணி நேரத்திற்கும் மேலாக இந்த ஆய்வு நீடித்தது.
பின்னணி மற்றும் வழக்கு விவரம்:
போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாகவும், அதில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாகவும் கூறி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் வெளியே வந்துள்ளார்.
இந்த விவகாரத்தில் அசோக் குமாருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி அமலாக்கத் துறை அவருக்குப் பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் சில வருடங்களாகத் தலைமறைவாக இருந்து வந்தார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்ததைத் தொடர்ந்து, அது தொடர்பான வழக்கு விசாரணை தற்போது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
பரபரக்கும் விசாரணை:
நீதிமன்ற விசாரணை ஒருபுறம் இருக்க, கரூர் மாவட்ட காவல் துறையிலும் அசோக் மீது ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த உள்ளூர் வழக்கு விசாரணைக்காகவே கரூர் போலீசார் சென்னைக்கு வந்து அவரது வீட்டைச் சோதனையிட்டதாகத் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை.. தமிழக பாஜகவில் அதிரடி மாற்றம்? டெல்லி போடும் மெகா பிளான்!
இருப்பினும், அவர் மீது ஏற்கனவே உள்ள வேலைவாய்ப்பு மோசடி வழக்கு தொடர்பாக வந்தார்களா அல்லது வேறு ஏதேனும் புதிய புகார் தொடர்பாக வந்தார்களா என்பது குறித்த அதிகாரப்பூர்வ விபரங்களைக் காவல்துறையினர் இன்னும் முழுமையாக வெளியிடவில்லை. இச்சம்பவத்தால் பட்டினப்பாக்கம் பகுதியில் சில மணி நேரம் பலத்த பரபரப்பு நிலவியது.