AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பாதியாக குறைந்த மாணவர்கள் சேர்க்கை.. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பெரும் அதிர்ச்சி!!

கடந்த ஆண்டு மாநகராட்சிப் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது, இந்த கல்வி ஆண்டில் அந்த எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது. மாணவர் சேர்க்கை இவ்வாறு குறைந்ததற்கு, பள்ளிகளின் அருகே உள்ள தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகள் இடிக்கப்படுவதுதான் மிக முக்கியக் காரணம் என கூறப்படுகிறது.

பாதியாக குறைந்த மாணவர்கள் சேர்க்கை.. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பெரும் அதிர்ச்சி!!
மாதிரிப் புகைப்படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 20 Jun 2026 08:29 AM IST

சென்னை, ஜுன் 20: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பல்வேறு குடியிருப்புகள் அகற்றப்படுவதன் காரணமாக, சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்க்கை பாதியாகக் குறைந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இது ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மாணவர்களின் தொடக்கக் கல்வியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் எனப் பல பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஒட்டுமொத்தமாக ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: தமிழ்நாட்டின் முதல் திருநங்கை அரசுப் பேருந்து ஓட்டுநர்.. ஸ்ரீதேவியின் சாதனைப் பயணமும்.. குவியும் மக்கள் ஆதரவும்!

ஒவ்வொரு கல்வி ஆண்டும் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது சென்னை மாநகராட்சிக்கு ஒரு மிகப்பெரிய சவாலாகவே இருந்து வருகிறது. இதற்காகப் பள்ளி நிர்வாகங்கள் சார்பில் வீடு வீடாகச் சென்று பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஆட்டோக்கள் மூலம் பிரச்சாரம் செய்தல் மற்றும் இலவச சீருடைகள், புத்தகப் பைகள் போன்ற சலுகைகளை விளம்பரப்படுத்திப் பதாகைகள் வைத்தல் எனப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பாதியாகக் குறைந்த மாணவர்கள் சேர்க்கை:

இத்தகைய விழிப்புணர்வுப் பணிகளுக்கு மத்தியிலும், கடந்த ஆண்டு மாநகராட்சிப் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது, இந்த கல்வி ஆண்டில் அந்த எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது. மாணவர் சேர்க்கை இவ்வாறு குறைந்ததற்கு, பள்ளிகளின் அருகே உள்ள தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகள் (முன்னாள் குடிசை மாற்று வாரியம்) இடிக்கப்படுவதுதான் மிக முக்கியக் காரணம் எனப் பள்ளி நிர்வாகங்கள் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

சிந்தாதரிப்பேட்டை பள்ளியின் அவலநிலை:

உதாரணமாக, சென்னை சிந்தாதரிப்பேட்டை அருகே உள்ள மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வந்தனர். ஆனால், தற்போது அங்கு மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே படித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்குக் காரணம், அந்தப் பள்ளியின் அருகில் இருந்த வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பின் பல பிளாக்குகளில் இருந்த நூற்றுக்கணக்கான வீடுகளும் முற்றிலுமாக இடிக்கப்பட்டு, தற்போது புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதனால் அங்கு வசித்த மக்கள் செம்மஞ்சேரி, கண்ணகி நகர் போன்ற தொலைதூரப் பகுதிகளுக்குக் குடிபெயர்ந்துள்ளதால், அப்பகுதியில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை முற்றிலும் நின்றுபோயுள்ளது.

மாணவர்களின் எதிர்காலமும் சமூகப் பாதிப்புகளும்:

திடீரெனத் தொலைதூரப் பகுதிகளுக்கு மக்கள் இடம்பெயர்வதால், மாணவர்களின் கல்வியில் ‘இடைநிற்றல்’ பெருமளவில் ஏற்படுகிறது. கல்வி தடைபடுவதால் ஏற்படும் சமூகப் பாதிப்புகள் குறித்துப் பள்ளி நிர்வாகங்கள் தரப்பில் பின்வரும் கவலைகள் முன்வைக்கப்படுகின்றன. அதன்படி, ஆண் குழந்தைகள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்துவதால், போதைப்பொருள் பழக்கம் உள்ளிட்ட தவறான பாதைகளுக்குச் செல்லக்கூடிய அபாயம் ஏற்படுகிறது. அதேபோல், பெண் குழந்தைகள் கல்வியைத் தொடர முடியாத சூழலில், அவர்கள் மிக இளவயதுத் திருமணத்திற்குத் தள்ளப்படுகிறார்கள்.

இதையும் படிக்க: தமிழகத்தில் மீண்டும் நீட் பலி.. சேலத்தில் 19 வயது மாணவி எடுத்த விபரீத முடிவு.. கலைந்தது டாக்டர் கனவு!

பொதுமக்களின் எதிர்பார்ப்பு:

சென்னையில் உள்ள ஏழை எளிய மக்களின் குழந்தைகளே பெரும்பாலும் இந்த மாநகராட்சிப் பள்ளிகளை நம்பியுள்ளனர். எனவே, தமிழக அரசும் சென்னை மாநகராட்சியும் இந்த விவகாரத்தில் உடனடியாகக் கூர்ந்து கவனித்துச் செயல்பட வேண்டும் என்றும், விடுபட்ட மாணவர்களைக் கண்டறிந்து அவர்களின் தொடர் கல்விக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்றும் சென்னைவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow Us