மூலப்பொருள், டீசல் விலை உயர்வால் அதிரும் கோவை.. 25 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் முடங்கும் அபாயம்!
இத்தகைய பொருளாதாரச் சுமைகளால் வாங்கிய தொழில் கடனைத் திரும்பச் செலுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. "வட்டி விகிதத்தையாவது தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும்" என்ற கோரிக்கையும் இதுவரை ஏற்கப்படவில்லை. மேலும், வார்ப்படத் தொழிலுக்கு முக்கியத் தேவையான வணிக கேஸ் சிலிண்டர் விலையேற்றம் மற்றும் தட்டுப்பாட்டுக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை.
கோவை, ஜுன் 19: தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையில், மூலப்பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக சுமார் 25 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தங்களது உற்பத்தியைத் தொடர முடியாமல் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் இந்த 25 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூலமாக, நேரடியாகவும் மறைமுகமாகவும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இங்கு இயந்திரங்களுக்குத் தேவையான உதிரிபாகங்கள், இயந்திர மூடிகள் மற்றும் வார்ப்படத் தொழில் சார்ந்த பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தற்போது ஏற்பட்டுள்ள நலிவினால், இந்த 5 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.
மேலும் படிக்க: ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. குடும்ப உறுப்பினர்களின் கைரேகை பதிவு இனி கட்டாயம்.. கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு!
ஏறுமுகத்தில் கட்டணங்கள்:
பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த எரிபொருள் விலை உயர்வு, ஒட்டுமொத்த உற்பத்திச் செலவையும் தலைகீழாக மாற்றியுள்ளது. எரிபொருள் விலை உயர்வைக் காரணம் காட்டி, லாரி உரிமையாளர்கள் சங்கம் வாடகையை உயர்த்தியுள்ளதால், கடந்த 15-ஆம் தேதி முதல் சரக்கு வாகனக் கட்டணங்கள் 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளன. வார்ப்படத் தொழிலுக்குத் தேவையான தாமிரம், அலுமினியம், வெண்கலம் ஆகியவற்றின் விலையும் சந்தையில் தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது.
செலவுகள் பன்மடங்கு அதிகரித்துள்ளதால், ஏற்கனவே மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்களிடமிருந்து (ரயில்வே உதிரிபாகங்கள் தயாரிப்பு உட்பட) பெற்ற ஆர்டர்களைக் கூட செய்து முடிக்க முடியாமல், பல நிறுவனங்கள் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
தொழில்துறையினரின் குமுறல்:
இவ்விவகாரம் குறித்துப் பேசிய தொழில்துறை பிரதிநிதிகள், ஏற்கனவே மின்கட்டண உயர்வு, தொழிலாளர் சம்பள நெருக்கடி, சர்வதேச சந்தையில் நிலவும் மந்தநிலை எனப் பல முனைகளில் அடிவாங்கி வருவதாகக் குறிப்பிட்டனர். இதற்கிடையே, தொழிற்சாலைகளுக்கு 200 லிட்டருக்கு மேல் டீசல் வழங்கக் கூடாது என மத்திய அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாட்டு உத்தரவு தங்களுக்குப் பேரிடியாக அமைந்துள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். டீசலை நம்பி இயங்கும் பெரிய தொழிற்சாலைகள் முடங்கினால், அவற்றைச் சார்ந்து இயங்கும் சிறு, குறு நிறுவனங்களின் ஒட்டுமொத்த உற்பத்திச் சங்கிலியும் (Supply Chain) முற்றிலுமாகத் தடைபடும் என எச்சரிக்கின்றனர்.
சிலிண்டர் தட்டுப்பாடு தீரவில்லை:
இத்தகைய பொருளாதாரச் சுமைகளால் வாங்கிய தொழில் கடனைத் திரும்பச் செலுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. “வட்டி விகிதத்தையாவது தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும்” என்ற கோரிக்கையும் இதுவரை ஏற்கப்படவில்லை. மேலும், வார்ப்படத் தொழிலுக்கு முக்கியத் தேவையான வணிக கேஸ் சிலிண்டர் விலையேற்றம் மற்றும் தட்டுப்பாட்டுக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. வெளிச்சந்தையில் 8,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை கூடுதல் பணம் கொடுத்து சிலிண்டர் வாங்கி தொழில் செய்யும் அளவிற்கு லாபம் இல்லை என்பதால், பல நிறுவனங்கள் தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்யும் கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளன.
தொழிலமைப்புகளின் அவசரக் கோரிக்கை
கைத்தொழில், குறுந்தொழில் நிறுவனங்கள் மற்றும் ரயில்வே உதிரிபாக உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் மத்திய, மாநில அரசுகளுக்கு விடுத்துள்ள அவசரக் கோரிக்கைகள் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு மூலப்பொருட்களின் விலையைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். குறுந்தொழில் நிறுவனங்களுக்குக் குறைந்த விலையில் மூலப்பொருட்கள் தங்கு தடையின்றிக் கிடைக்க ஆங்காங்கே புதிய அரசு மையங்களைத் தொடங்க வேண்டும்.மத்திய அரசு உடனடியாக தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகளை நேரில் அழைத்து பேசி, இந்த எரியும் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்.
அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், கோவையின் தொழில் கட்டமைப்பு முற்றிலும் சிதையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தொழில்துறையினர் எச்சரிக்கின்றனர்.
இதையும் படிக்க: மேகதாது அணை விவகாரம்: அரசியல் கடந்து நாம் ஓரணியில் நிற்க வேண்டும் – தனித்தீர்மானம் முன்மொழிந்த முதல்வர் விஜய்