AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“அதிமுகவும் தவெகவும் ஒன்றுதான்”.. மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழாவில் ஆதவ் அர்ஜுனா அதிரடி பேச்சு!!

கட்சியில் இணைந்த சிலருக்கு உடனடியாகப் பதவிகள் வழங்கப்படவில்லை என்று எழும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், "மற்ற அரசியல் கட்சிகளைப் போல 'நீங்கள் எங்கள் கட்சிக்கு வந்தால் இந்த பதவியைத் தருகிறோம், அதைத் தருகிறோம்' என்று சொல்லி வியாபாரம் செய்யக்கூடிய கட்சி தமிழக வெற்றிக் கழகம் கிடையாது" என்று திட்டவட்டமாகக் கூறினார்.

“அதிமுகவும் தவெகவும் ஒன்றுதான்”.. மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழாவில் ஆதவ் அர்ஜுனா அதிரடி பேச்சு!!
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 20 Jun 2026 13:49 PM IST

சென்னை, ஜுன் 20: சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில், மாற்று அரசியல் கட்சிகளில் இருந்து விலகி ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தவெகவில் இணையும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், திரைப்பட இயக்குநர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் அக்கட்சியின் தலைவர் முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர். தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்காகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாற்றுக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிகாலை முதலே பனையூர் தலைமை அலுவலகத்தின் முன்பாகக் குவியத் தொடங்கினர்.

மேலும் படிக்க: சட்டம் – ஒழுங்கு குறித்து முதல்வர் விஜய் பேரவையில் பேசுவாரா? பிரேமலதா விஜயகாந்த் கேள்வி!

தவெகவில் இணைய கட்டுங்கடங்காத கூட்டம்:

மாற்றுக்கட்சியினர் மற்றும் ரசிகர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அனைவரும் ஒரே நேரத்தில் உள்ளே நுழைய முயன்றதால், முக்கிய நிர்வாகிகளைத் தவிர மற்றவர்களைக் காவல்துறையினர் வெளியில் காத்திருக்குமாறு அறிவுறுத்தினர். அலுவலகத்தின் உள்ளே போதிய இடவசதி இல்லை எனக் கூறி காவல்துறையினர் தொண்டர்களைத் தடுத்து நிறுத்தினர். முக்கிய நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் உள்ளே வரக்கூடிய சமயத்தில், வெளியில் காத்திருந்த தொண்டர்கள் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கூட்டமாக உள்ளே புக முயன்றனர்.

தொண்டர்களுக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு:

கதவு திறக்கப்பட்ட அந்தத் தருணத்தில், ஒரே நேரத்தில் ஏராளமானோர் உள்ளே நுழைந்ததால் அங்கிருந்த காவல்துறையினருக்கும் தொண்டர்களுக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. காவல்துறையினர் தடுத்தும் கேட்காமல், கதவைத் தள்ளிவிட்டு தொண்டர்கள் உள்ளே நுழைந்ததால் அப்பகுதியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திலிருந்த காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் உடனடியாகச் செயல்பட்டு, கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தி அனுமதியின்றி உள்ளே நுழைந்தவர்களை வெளியேற்றினர்.

“அதிமுகவும் தவெகவும் ஒன்றுதான்”:

இந்தத் தள்ளுமுள்ளு மற்றும் பரபரப்பான சூழலுக்கு மத்தியில் நடைபெற்ற இணைப்பு விழாவில், கட்சியின் மூத்த நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா கலந்துகொண்டு தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் உண்மையான அதிமுகவும், தமிழக வெற்றிக் கழகமும் எப்பொழுதும் ஒன்றுதான், இரண்டின் குறிக்கோளும் ஒன்றுதான். அதிமுகவின் தொண்டர்களும் நிர்வாகிகளும், தவெக நிர்வாகிகளுடன் இணையும் பொழுது, இது தமிழ்நாட்டில் வேறு யாராலும் வெல்ல முடியாத ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும்” என்று குறிப்பிட்டார்.

வேறு திசையை நோக்கிச் செல்லும் அதிமுக:

அதிமுகவின் தற்போதைய தலைமை மீது விமர்சனம் வைத்த அவர், “எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரால் பார்த்துப் பார்த்து வளர்க்கப்பட்ட இயக்கம், தற்போதைய தலைமையால் வேறு திசையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. கட்சி நிகழ்ச்சியொன்றில் ஏன் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் படங்கள் இல்லை என்று நியாயமாகக் கேள்வி கேட்டதற்காக, நீண்ட கால அனுபவசாலியான கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவரை தற்போதைய தலைமை தூக்கி எறிந்துள்ளது. இது அந்த மூத்த நிர்வாகியின் தவறல்ல, தற்போதைய தலைமையின் தவறு” என்று விமர்சித்தார்.

மேலும், “அதிமுக தொண்டர்களைத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மிகுந்த அன்போடு அரவணைத்துக் கொள்வார். அந்த வலிமையும் பாசமும் எங்கள் தலைவரிடமும், பொதுச்செயலாளரிடமும் உள்ளது. உங்களை ஒரு குடும்பமாக நாங்கள் வரவேற்கிறோம்” என்று தெரிவித்தார்.

வியாபாரம் செய்யும் கட்சி தவெக அல்ல:

கட்சியில் இணைந்த சிலருக்கு உடனடியாகப் பதவிகள் வழங்கப்படவில்லை என்று எழும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், “மற்ற அரசியல் கட்சிகளைப் போல ‘நீங்கள் எங்கள் கட்சிக்கு வந்தால் இந்த பதவியைத் தருகிறோம், அதைத் தருகிறோம்’ என்று சொல்லி வியாபாரம் செய்யக்கூடிய கட்சி தமிழக வெற்றிக் கழகம் கிடையாது” என்று திட்டவட்டமாகக் கூறினார். மக்கள் சேவையில் சிறப்பாகப் பணியாற்றக்கூடிய தகுதியானவர்களுக்குத் தலைவர் விரைவில் உரிய பொறுப்புகளைக் கண்டிப்பாக வழங்குவார் என்றும் அவர் உறுதியளித்தார்.

திமுக – அதிமுக கூட்டணி குறித்து சாடல்:

தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பேசிய ஆதவ் அர்ஜுனா, “இன்றைய சூழலில் அதிமுகவும் திமுகவும் திரைமறைவில் ஒன்று சேர்ந்துவிட்டன. ஜெயலலிதாவின் கனவை விட்டுவிட்டு, அதிமுக தலைமை திமுகவோடு கைகோர்த்ததன் வெளிப்பாடுதான், அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்கள் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர். எடப்பாடி தொகுதியில் இருந்துகூட தொண்டர்கள் மற்றும் உறவினர்கள் இங்கு வந்து இணைந்துள்ளனர்” என்றார்.

மேலும் படிக்க: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாள்.. மு.க.ஸ்டாலின் வாழ்த்தில் மிஸ்- ஆன அந்த வார்த்தை!

வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் தவெக மற்றும் அதிமுக தொண்டர்கள் இணைந்து தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய சதவீத வெற்றியைப் பெற்று புதிய சாதனை படைப்போம் என்று நம்பிக்கையுடன் கூறினார்.

Follow Us