நீட் மறுதேர்வு.. முறைகேடுகளைத் தவிர்க்க கடும் கட்டுப்பாடுகள்.. என்னென்ன? முழு விவரம்!!
மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்புகளைப் பகிர்வதற்காக தேசிய தேர்வு முகமை புதிய முறையைக் கையாண்டுள்ளது. அதன்படி, தேர்வு தொடர்பான அனைத்து அதிகாரப்பூர்வ விவரங்களும் பிரத்யேக வாட்ஸ்அப் எண் மூலமாக மட்டுமே மாணவர்களுக்கு வழங்கப்படும். அந்த எண்ணில் தேசிய தேர்வு முகமையின் பெயருக்கு அருகில் அதிகாரப்பூர்வ 'புளூடிக்' இடம் பெற்றிருக்கும்.
சென்னை, ஜுன் 20: நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடைபெற உள்ள நிலையில், தேர்வில் எந்தவித முறைகேடுகளும் நடக்காமல் இருக்க தேசிய தேர்வு முகமை கடுமையான கட்டுப்பாடுகளையும் வழிகாட்டுதல்களையும் விதித்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வு ஏற்கனவே நடைபெற்றிருந்தது. எனினும், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததால் அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, தற்போது மறுதேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வை நாடு முழுவதும் உள்ள பல நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள முக்கிய நகரங்களில், ஏராளமான மாணவர்கள் எழுத உள்ளனர்.
மேலும் படிக்க: “மாணவர்கள் தவறான முடிவை எடுக்கக் கூடாது; உதவி மையத்தை அழையுங்கள்!”.. அமைச்சர் அருண்ராஜ் சொன்ன தகவல்!!
தேர்வு நேரம் மற்றும் வினாத்தாள் பாதுகாப்பு:
மறுதேர்வு மதியத்திற்கு மேல் தொடங்கி மாலை வரை நடைபெற உள்ளது. இம்முறை எவ்வித முறைகேடுகளும் நிகழக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கும் தேசிய தேர்வு முகமை, வினாத்தாள் தயாரித்த குழுவினரை முழுமையாகத் தனிமைப்படுத்தியிருந்தது. மேலும், பலத்த பாதுகாப்புடன் உரிய தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்கள் அனுப்பப்பட்டுள்ளன.
அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு:
மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்புகளைப் பகிர்வதற்காக தேசிய தேர்வு முகமை புதிய முறையைக் கையாண்டுள்ளது. அதன்படி, தேர்வு தொடர்பான அனைத்து அதிகாரப்பூர்வ விவரங்களும் பிரத்யேக வாட்ஸ்அப் எண் மூலமாக மட்டுமே மாணவர்களுக்கு வழங்கப்படும். அந்த எண்ணில் தேசிய தேர்வு முகமையின் பெயருக்கு அருகில் அதிகாரப்பூர்வ ‘புளூடிக்’ இடம் பெற்றிருக்கும். இந்தத் தகவல்கள் அனைத்தும் ‘பிராட்காஸ்ட்’ முறையில் மட்டுமே அனுப்பப்படும் என்றும், தேசிய தேர்வு முகமை தரப்பில் இருந்து எந்தவொரு ஓடிபி எண்ணோ அல்லது கட்டணமோ கேட்கப்படாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
தேர்வு மையக் கட்டுப்பாடுகள் மற்றும் நேரக் கட்டுப்பாடு:
வருகை நேரம்: மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே தேர்வு மையத்திற்கு வர வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் தாமதமாக வரும் மாணவர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
கொண்டு வர வேண்டியவை: நீட் தேர்வுக்கான நுழைவு அட்டை, அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை எடுத்து வர வேண்டும்.
அனுமதிக்கப்படும் பொருட்கள்: வெளிப்படையாகத் தெரியும் குடிநீர் பாட்டில்கள் அனுமதிக்கப்படும். சர்க்கரை நோய் பாதிப்பு உள்ள மாணவர்கள் தங்களுக்கான மாத்திரைகள் மற்றும் பழங்களைக் கொண்டு வர அனுமதி உண்டு.
தடைசெய்யப்பட்ட பொருட்கள்: செல்போன்கள், ஸ்மார்ட் வாட்ச், புளூடூத் கருவிகள், கால்குலேட்டர், மணிபர்ஸ், நகைகள், உலோக அணிகலன்கள் மற்றும் உணவுப் பொட்டலங்களை தேர்வு அறைக்குள் எடுத்துச் செல்லக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ள குறிப்பிட்ட ஆடைக் கட்டுப்பாட்டைப் பின்பற்றியே மாணவர்கள் வர வேண்டும்.
தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள்:
தேர்வில் முறைகேடுகள் நடப்பதைத் தடுக்கவும், தேர்வுச் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும் ஏராளமான நகர ஒருங்கிணைப்பாளர்களும், தேர்வு மையங்களில் பல பார்வையாளர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தேர்வு மையங்கள் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, அவை நேரடியாக மத்திய கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டிருக்கும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: நீட் மறுதேர்வை முன்னிட்டு இந்தியாவில் டெலிகிராமுக்கு தற்காலிக தடை: பாவல் துரோவ் எதிர்ப்பு
மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் பரவும் எவ்வித வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்றும், ஏதேனும் சந்தேகத்திற்குரிய தகவல்கள் அல்லது பதிவுகள் கண்டறியப்பட்டால் உடனடியாக அதிகாரிகளிடம் புகார் அளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.