நீட் மறுதேர்வை முன்னிட்டு இந்தியாவில் டெலிகிராமுக்கு தற்காலிக தடை: பாவல் துரோவ் எதிர்ப்பு
இதற்கிடையில், இணைய சுதந்திர அறக்கட்டளை உள்ளிட்ட பல அமைப்புகள் இந்தத் தடையை “அளவுக்கு மீறிய நடவடிக்கை” என விமர்சித்துள்ளன. டெலிகிராமை முடக்குவது முழுமையான தீர்வாக இருக்காது என்றும், மக்கள் ப்ராக்சி உள்ளிட்ட வழிகளில் அதை பயன்படுத்த முடியும் என்றும் இணைய பாதுகாப்பு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜூன் 17, 2026: நீட்-யூஜி 2026 மறுதேர்வை முன்னிட்டு தேர்வு மோசடி மற்றும் தவறான தகவல் பரவலைத் தடுக்க இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜூன் 21ஆம் தேதி நடைபெறவுள்ள மறுதேர்வை முன்னிட்டு, ஜூன் 22 வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தேசிய தேர்வாணையமான NTA-வின் பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டெலிகிராம் நீக்கப்பட்டுள்ள நிலையில், ஆப்பிள் நிறுவனமும் விரைவில் அதே நடவடிக்கையை மேற்கொள்ளும் என கூறப்படுகிறது.
டெலிகிராம் தடைக்கு பாவல் துரோவ் கடும் எதிர்ப்பு:
இந்தத் தடைக்கு டெலிகிராம் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான பாவல் துரோவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “சிலர் கசிந்த வினாத்தாள்களை பகிர்ந்ததற்காக 15 கோடிக்கும் மேற்பட்ட சாதாரண பயனாளர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். இதனால் பிரச்சினை தீரவில்லை; அது வேறு செயலிகளுக்கு மாறிவிட்டது,” என அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், கடந்த சில வாரங்களில் கசிந்த தேர்வு வினாத்தாள்கள் மற்றும் மோசடி தொடர்பான நூற்றுக்கணக்கான சேனல்கள் நீக்கப்பட்டதாகவும், “Edited” குறியீட்டை தெளிவாக காட்டும் மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளதாகவும் டெலிகிராம் தெரிவித்துள்ளது.
முறைகேடுகள் நடக்காமல் இருக்க நடவடிக்கை:
இதுகுறித்து NTA இயக்குநர் அபிஷேக் சிங் கூறுகையில், “தேர்வில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். புதிய வினாத்தாள் கசிவு எதுவும் இல்லை. ஆனால் போலியான தகவல்கள் மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தின,” என தெரிவித்தார்.
தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 69A-ன் கீழ் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், ஜூன் 30 வரை இந்தியாவில் டெலிகிராமில் ஏற்கனவே பதிவிடப்பட்ட செய்திகளை திருத்தும் வசதியும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
இந்த வசதியை பயன்படுத்தி பழைய பதிவுகளில் புதிய PDF கோப்புகளை சேர்த்து, தேர்வுக்கு முன்பே வினாத்தாள் வெளியானது போல போலி ஆதாரங்கள் உருவாக்கப்பட்டதாக NTA விளக்கியுள்ளது.
மேலும் படிக்க: டெலிகிராமிற்கு தற்காலிக தடை.. நீட் மறுதேர்வுக்கு முன்னதாக அரசு முக்கிய முடிவு.. ஏன் தெரியுமா?
“PAPER LEAKED NEET”, “Re-NEET 2026” போன்ற சேனல்கள் ஆயிரங்களில் இருந்து லட்சக்கணக்கில் பணம் வாங்கி வினாத்தாள்கள் வழங்குவதாக கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இணைய சுதந்திர அறக்கட்டளை உள்ளிட்ட பல அமைப்புகள் இந்தத் தடையை “அளவுக்கு மீறிய நடவடிக்கை” என விமர்சித்துள்ளன. டெலிகிராமை முடக்குவது முழுமையான தீர்வாக இருக்காது என்றும், மக்கள் ப்ராக்சி உள்ளிட்ட வழிகளில் அதை பயன்படுத்த முடியும் என்றும் இணைய பாதுகாப்பு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.