அரசுப் பள்ளியில் புகுந்து இடையூறு.. ‘ரீல்ஸ்’ போட்ட தவெக நிர்வாகி கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்!
தலைவர்களின் தொடர் கண்டனங்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத் தலைமை உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டது. அந்தவகையில், கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்கும் வகையிலும், அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதாகக் கூறி, மாவட்டச் செயலாளர் தென்னரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.
காஞ்சிபுரம், ஜுன் 21: அரசுப் பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து மாணவர்களின் கல்விக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தினர் ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இச்சம்பவத்திற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், சர்ச்சைக்குரிய தவெக நிர்வாகியைக் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி அக்கட்சியின் தலைமை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் படிக்க: சட்டம் – ஒழுங்கு குறித்து முதல்வர் விஜய் பேரவையில் பேசுவாரா? பிரேமலதா விஜயகாந்த் கேள்வி!
பள்ளி வகுப்பறையில் அரசியல் – சர்ச்சை பின்னணி:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, ஒரு அரசுப் பள்ளி வகுப்பறையில், சுமார் 20க்கும் மேற்பட்ட தவெகவினர் சென்று, முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் புகைப்படத்தை வகுப்பறை சுவரில் மாட்டி, ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில், அரசுப் பள்ளிகளுக்கு… pic.twitter.com/63j9RDS1dC
— K.Annamalai (@annamalai_k) June 20, 2026
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளிக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் உத்திரமேரூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் ராஜேஷ் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் சிலர் சென்றுள்ளனர். வகுப்பறையில் மாணவர்கள் படித்துக் கொண்டிருந்த வேளையில், தவெக தலைவர் விஜய் அவர்களின் புகைப்படத்தை வகுப்பறைக்குள் கொண்டு சென்றுள்ளனர். மாணவர்களிடையே அந்தப் புகைப்படத்தைக் காண்பித்து, அவர்களுக்குப் பாடம் எடுப்பது போலப் பாவனை செய்து, அதனை ‘ரீல்ஸ்’ வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
கல்வி கற்கும் புனிதமான இடத்தில், மாணவர்களைத் தங்களின் அரசியல் விளம்பரத்திற்காகப் பயன்படுத்திய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பொதுமக்கள் மற்றும் கல்வி ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது.
அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்:
அரசுப் பள்ளி வளாகத்திற்குள் அரசியல் கட்சியினர் நுழைந்த இச்சம்பவத்திற்கு தலைவர்கள் பலர் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தனர். அதன்படி, ‘வீ த லீடர்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை இச்சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ளார். அரசுப் பள்ளிகளில் இத்தகைய அரசியல் ரீதியான விளம்பரங்களைச் செய்வதும், ரீல்ஸ் வீடியோக்கள் எடுப்பதும் மாணவர்களின் கல்விச் சூழலையும் ஒழுக்கத்தையும் சீர்குலைக்கும் செயல் என்றும், இதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பள்ளி வளாகங்கள் என்பது அரசியல் கட்சிகளின் விளம்பரக் கூடாரங்களாக மாறக்கூடாது என்றும், கல்வி நிலையங்களின் புனிதத்தன்மையை அனைவரும் மதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதேபோல், அதிமுக, அமமுக உள்ளிட்ட இதர எதிர்க்கட்சிகளும், மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படுத்தும் இத்தகைய செயல்களுக்குத் தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தன.
கட்சித் தலைமையின் அதிரடி நடவடிக்கை:
தலைவர்களின் தொடர் கண்டனங்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத் தலைமை உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டது. அந்தவகையில், கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்கும் வகையிலும், அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதாகக் கூறி, தவெக பொதுச் செயலாளரின் வழிகாட்டுதலின்படி, மாவட்டச் செயலாளர் தென்னரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.
அதன்படி, இந்த சர்ச்சைக்கு முதன்மைக் காரணமான உத்திரமேரூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் ராஜேஷ், கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்தும் உடனடியாக நீக்கப்படுவதாகத் தவெக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், கட்சியின் மற்ற தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் யாரும் இவருடன் எந்தவிதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் கட்சித் தலைமை கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க: “அமைச்சராக பெருமை இல்லை.. தளபதியின் நண்பன் என்பதில் தான் பெருமை!”.. அமைச்சர் ஸ்ரீநாத் நெகிழ்ச்சி!!
பரபரப்பை கிளப்பிய சம்பவம்:
அரசியல் களத்தில் புதியதாகக் கால்பதித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தினர், கல்வி நிறுவனத்திற்குள் இத்தகைய விதிமீறலில் ஈடுபட்டதும், அதற்கு எழுந்த அரசியல் எதிர்ப்புகளால் தவெக தலைமை உடனடியாகத் தன் கட்சியின் நிர்வாகியை நீக்கி நடவடிக்கை எடுத்திருப்பதும் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.