“அமைச்சராக பெருமை இல்லை.. தளபதியின் நண்பன் என்பதில் தான் பெருமை!”.. அமைச்சர் ஸ்ரீநாத் நெகிழ்ச்சி!!
அரிது அரிது மானிடனாய் பிறப்பது அரிது, அதிலும் அரிது தளபதியின் நண்பனாய் பிறப்பது; அதை முழுமையாக உணர்ந்தவன் நான் என்றார். மேலும், வரவிருக்கும் பிறந்தநாளுக்கு தூத்துக்குடி மக்கள் கொடுத்திருக்கும் மாபெரும் தேர்தல் வெற்றியே தலைவருக்குக் கிடைத்த ஆகச்சிறந்த பரிசு என்றும் அவர் குறிப்பிட்டார்.
தூத்துக்குடி, ஜுன் 21: என்னை ஒரு நடிகன் என்றோ, இயக்குனர், எம்எல்ஏ அல்லது அமைச்சர் என்றோ சொல்வதில் எனக்கு எள்ளளவும் பெருமை இல்லை. ஆனால், தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் நம் தளபதியின் நண்பன் என்று சொல்வதில் மட்டுமே நான் வாழ்நாளுக்கும் பெருமைப்படுவேன் என்று தூத்துக்குடியில் நடைபெற்ற தவெக கட்சி விழாவில் அமைச்சர் ஸ்ரீநாத் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மத்திய மாவட்ட தவெக சார்பில் மாபெரும் மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய சுமார் 3,250க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தவெக-வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இதையும் படிக்க: “முஸ்லிம் லீக் முடிவையே மதிமுகவும் எடுக்கும்”.. யார் நண்பன், யார் பகைவன் என்பதை காட்டிய தேர்தல்.. ஆர்.எஸ்.பாரதி காட்டம்!
முதல்வர் நாற்காலியில் என் நண்பன்:
மேடையில் உணர்ச்சிப்பொங்கப் பேசிய அமைச்சர் ஸ்ரீநாத், விஜய்யுடனான தனது நீண்ட கால திரையுலக மற்றும் தனிப்பட்ட நட்பை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார். “நான் அவரை மிக நெருக்கமான ஒரு நண்பராகப் பார்த்திருக்கிறேன். பெற்றோரை மதிக்கும் நல்ல மகனாக, நல்ல கணவராக, தன் குழந்தைகளுக்குப் பொறுப்புள்ள தகப்பனாகப் பார்த்திருக்கிறேன். இன்று, அதே மனிதரை இந்த தமிழ்நாட்டினுடைய முதல் குடிமகனாக, முதலமைச்சராகப் பார்க்கும்போது ஒரு நண்பனாக எனக்கு ஏற்படும் சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை” என்றார்.
விமர்சனங்களுக்குப் படிப்படியான பதிலடி:
விஜய் அரசியல் கட்சித் தொடங்கிய போது எழுந்த விமர்சனங்கள் மற்றும் அதற்குத் தவெக கொடுத்த பதிலடிகளை அவர் வரிசையாகப் பட்டியலிட்டார். “அவரெல்லாம் எங்கே கட்சி ஆரம்பிக்கப் போகிறார்?” என்றார்கள், ஆனால் வலுவான உட்கட்டமைப்புடன் கட்சி ஆரம்பித்துக் காட்டினார். “அரசியல் வேறு, சினிமா வேறு… தேர்தலை எப்படிச் சந்திப்பார்?” என்றார்கள், துணிச்சலுடன் தேர்தலைச் சந்தித்தார். “தேர்தலில் ஜெயிப்பது அவ்வளவு எளிதல்ல” என்றார்கள், மக்கள் ஆதரவோடு மாபெரும் வெற்றி பெற்றார். “ஜெயித்தாலும் எப்படி ஆட்சி அமைப்பார்கள்?” என்ற கேள்விக்கு, இன்று வெற்றிகரமாக ஆட்சி அமைத்துக் காட்டியுள்ளார். “சொன்னதைச் சொன்னபடி படிப்படியாகச் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்தான் நம் தலைவர்” எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார் ஸ்ரீநாத்.
அரிது அரிது தளபதியின் நண்பனாய் பிறப்பது:
மேடையில் ஔவையாரின் புகழ்பெற்ற வரிகளை மேற்கோள் காட்டிப் பேசிய அமைச்சர், “அரிது அரிது மானிடனாய் பிறப்பது அரிது, அதிலும் அரிது தளபதியின் நண்பனாய் பிறப்பது; அதை முழுமையாக உணர்ந்தவன் நான்” என்றார். மேலும், வரவிருக்கும் பிறந்தநாளுக்கு தூத்துக்குடி மக்கள் கொடுத்திருக்கும் மாபெரும் தேர்தல் வெற்றியே தலைவருக்குக் கிடைத்த ஆகச்சிறந்த பரிசு என்றும் அவர் குறிப்பிட்டார்.
தவெக இளைஞர்களுக்கு 3 முக்கிய கட்டளைகள்:
கட்சியில் புதிதாக இணைந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு, தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் ஸ்ரீநாத் சில முக்கியமான சமூகப் பொறுப்புகளைச் சுட்டிக்காட்டி உறுதிமொழி ஏற்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி, தூத்துக்குடி மாவட்டம் முற்றிலும் போதை இல்லாத ஒரு பகுதியாக மாற வேண்டும். அதற்கு இளைஞர்கள் தங்களை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும். பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதுகாப்பில் தவெக இளைஞர்கள் எப்போதும் முன்னிற்க வேண்டும். பொதுவெளியில் மிகவும் கண்ணியமான, ஒழுக்கமான மற்றும் பொறுப்புள்ள இளைஞர் சமுதாயமாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதையும் படிக்க: முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்றதற்கான காரணம் இதுதான், ஆதாரம் உள்ளது – அமைச்சர் கீர்த்தனா பரபரப்பு பேட்டி
தூண்களாக நின்ற நிர்வாகிகளுக்கு நன்றி:
தேர்தல் பிரச்சாரக் காலம் தொட்டு இன்று வரை தனக்குப் பெரிய தூண்களாக விளங்கி வரும் மாவட்டச் செயலாளர் சாம், கிஷோர், கோல்டன், புதிதாக இணைந்துள்ள அபி மற்றும் விஜயசீலன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு மேடையில் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.