“முஸ்லிம் லீக் முடிவையே மதிமுகவும் எடுக்கும்”.. யார் நண்பன், யார் பகைவன் என்பதை காட்டிய தேர்தல்.. ஆர்.எஸ்.பாரதி காட்டம்!
கூட்டணியை விட்டு வெளியேறுபவர்களுக்குச் சவால் விடுத்த அவர், இப்போது அதிமுகவில் இருந்து விலகிப் போகிறவர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டுத் தேர்தலைச் சந்திக்கிறார்கள் அல்லவா? அதேபோல இந்த கூட்டணியில் இருந்து வெளியே போகிறவர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டுத் தேர்தலைச் சந்திக்கத் தயாரா?" என்று கேள்வி எழுப்பினார்.
சென்னை, ஜுன் 21: நடந்து முடிந்த தேர்தல் யார் நண்பர்கள், யார் பகைவர்கள் என்பதைத் துல்லியமாக அடையாளம் காட்டிவிட்டதாக திமுகவின் மூத்த தலைவரும், அக்கட்சியின் அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ்.பாரதி மிகக் காரசாரமாகத் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் இருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சி விலகி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) அதிகாரப்பூர்வமாக இணைவதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், ஆர்.எஸ்.பாரதி இந்த அதிரடி கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிக்க: முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்றதற்கான காரணம் இதுதான், ஆதாரம் உள்ளது – அமைச்சர் கீர்த்தனா பரபரப்பு பேட்டி
“அன்று, இன்று, நாளை” என்றவர்கள் இன்று எங்கே?
செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, கூட்டணிக் கட்சிகளின் திடீர் நிலைப்பாட்டு மாற்றம் குறித்துத் தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தினார். திமுக தலைவர் ஸ்டாலினிடம் ஆதரவு கேட்டபோதுகூட, ‘நாங்கள் ரொம்ப நாளாக திமுகவோடு இருக்கக்கூடிய கூட்டணி கட்சி’ என்று காதர் மொகிதீன் கூறினார். ‘அன்று, இன்று, நாளை’ எப்போதும் திமுகவுடன் தான் இருப்போம் என்று சொன்ன ஐயுஎம்எல், இன்னைக்கு ‘இன்று, நாளை எப்போதும் தவெக உடன்’ என்று ஒரு முடிவை அறிவித்திருக்கிறார்கள்” என்று சாடினார்.
மேலும், எங்களிடம் சொன்ன முடிவை அவர்கள் எப்படி மாற்றினார்களோ, அதேபோல தவெக-விடம் சொல்லியிருக்கும் இந்த முடிவும் சீக்கிரமே மாறும் என்பதற்கு அவர்களே ஒரு ‘ஒப்புதல் வாக்குமூலம்’ கொடுத்துவிட்டார்கள் என்றும் அவர் விமர்சித்தார்.
ஐயூஎம்எல் வழியையே மதிமுகவும் பின்பற்றும்:
முஸ்லிம் லீக் கட்சியின் இந்த முடிவைத் தொடர்ந்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் திமுக கூட்டணியில் நீடிப்பது குறித்து தங்களது பொதுக்குழுவில்தான் இறுதி முடிவு எடுப்போம் என்று அறிவித்திருக்கிறார். இதைக் குறிப்பிட்ட ஆர்.எஸ்.பாரதி, “வைகோவும் இப்போது பொதுக்குழுவைக் கூட்டி முடிவு எடுக்கப் போவதாகக் கூறுகிறார். முஸ்லிம் லீக் எடுத்த அதே முடிவைத்தான் மதிமுகவும் எடுக்கப் போகிறது” என்று முன்கூட்டியே கணித்துக் கூறினார்.
ஊடகங்கள் கணிக்காத அதிசயம்:
இந்த தேர்தலை ஒரு ‘அதிசயமான தேர்தல்’ என்று குறிப்பிட்ட அவர், அரசியல் களத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள் குறித்துப் பேசினார். எந்தவொரு ஊடகமோ, பத்திரிகையாளர்களோ விஜய் இந்த அளவிற்கு அரசியல் களத்தில் வருவார் என்று சொல்லவில்லை. இப்படி எதிர்பாராத ஒரு அதிசயம் நடந்த உடனே, அதற்குப் பலியாகக் கூடிய ‘பலவீனமானவர்கள்’ தங்களது கொள்கைகளை மறந்து பலியாகிவிட்டார்கள் என்றும், கொள்கை உறுதி உடையவர்கள் மட்டுமே திமுகவுடன் உறுதியாக இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
ராஜினாமா செய்ய சவால்:
திமுகவின் உழைப்பில் வெற்றி பெற்றுவிட்டு, சில நாட்களுக்குள் சுயநலத்திற்காகப் பேச்சை மாற்றுவது கேவலமான அரசியல் என்று ஆர்.எஸ்.பாரதி மிகக் கடுமையாகக் சாடினார். கூட்டணியை விட்டு வெளியேறுபவர்களுக்குச் சவால் விடுத்த அவர், “இப்போது அதிமுகவில் இருந்து விலகிப் போகிறவர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டுத் தேர்தலைச் சந்திக்கிறார்கள் அல்லவா? அதேபோல இந்த கூட்டணியில் இருந்து வெளியே போகிறவர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டுத் தேர்தலைச் சந்திக்கத் தயாரா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிக்க : “அதிமுகவும் தவெகவும் ஒன்றுதான்”.. மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழாவில் ஆதவ் அர்ஜுனா அதிரடி பேச்சு!!
மக்கள் பாடம் புகட்டுவார்கள்:
திமுகவிற்கு இந்தத் தேர்தல் புதிய அனுபவங்களைத் தந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், “எங்களது கண்களைத் திறப்பதற்கு இந்த தேர்தல் ஒரு நல்ல பாடம்” என்றார். மிக விரைவில் அரசியல் மாற்றம் வரும் என்றும், அப்போது நாங்கள் யார் என்பதை நிரூபித்துக் காட்டுவோம் என்றும், சுயநலத்திற்காகக் கூட்டணி மாறும் இத்தகைய சந்தர்ப்பவாதிகளுக்கு ஓட்டுப் போட்ட தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் கூறித் தனது பேட்டியை நிறைவு செய்தார்.