அமோனியா வாயு கோரத்தாண்டவம்.. பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு.. மரண பிடியில் 10 தொழிலாளர்கள்!
Ammonia Gas Leak Incident: திருவள்ளூர் மாவட்டத்தில் அமோனியா கேஸ் கசிந்த சம்பவத்தில் ஏற்கெனவே 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 7- ஆக உயர்ந்து உள்ளது. மேலும், ஆபத்தான நிலையில் 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளுர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ள கன்னிகைப்பேர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கடல் மீன்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் அஸ்ஸாம், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 230 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் 100 தொழிலாளர்கள் மட்டும் தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்தனர். மற்ற தொழிலாளர்கள் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள அறைகளில் தங்கி இருந்தனர். இந்த நிலையில் தொழிற்சாலையின் ஒரு அறையில் ஓரத்தில் இருந்த அமோனியா வாயு தொட்டி சரியாக மூடப்படாத நிலையில், அதில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இந்த வாயு கசிவால் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 60 பெண் தொழிலாளர்கள் உட்பட 65- க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதுடன், காது வழியாக ரத்த கசிவு ஏற்பட்டது.
அமோனியா வாயு கசிவால் 64 பேர் பாதிப்பு
மேலும், உடலில் ஆங்காங்கே சிறிய கொப்பளங்கள் ஏற்பட்டு காயங்களாக மாறியது. தொடர்ந்து, அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டு மயக்கம் அடைந்தவர்களின் 44 தொழிலாளர்கள் மஞ்சங்காரணை தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 20 பேர் செங்குன்றம் தனியார் மருத்துவமனையிலும் ஆம்புலன்ஸ் மூலமாக அங்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து சம்பவ இடத்தில் தீ மற்றும் வாயு கசிவை கட்டுப்படுத்தினர்.
மேலும் படிக்க: தெரு நாய்களால் அதிகரிக்கும் அச்சம்.. நடவடிக்கை குறித்து அறிக்கை கேட்டு உயர்நீதிமன்றம் உத்தரவு




தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
இந்த விபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 3 தொழிலாளர்கள் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில், இன்று திங்கள்கிழமை ( ஜூன் 22) காலை மேலும் 3 தொழிலாளர்கள் பலியானதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்த நிலையில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒடிஷா மாநிலத்தை சேர்ந்த பராத்தி ஜூவாங்கா ( 20 வயது) என்ற பெண் சிகிச்சை பலன் இன்றி இன்று திங்கள்கிழமை மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் 10 தொழிலாளர்கள்
இதன் மூலம் அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7- ஆக உயர்ந்துள்ளது. மேலும், 10- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் தொடர் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் படிக்க: 14.6 கி.மீ. நீளமுள்ள வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் பாதை.. ஜூலை மாதம் திறந்து வைக்கும் பிரதமர் மோடி..