14.6 கி.மீ. நீளமுள்ள வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் பாதை.. ஜூலை மாதம் திறந்து வைக்கும் பிரதமர் மோடி..
ஜூலை மாத முதல் வாரத்தில் மத்திய அமைச்சரவையில் சிறிய அளவிலான மாற்றம் நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதன் பின்னர் பிரதமர் தமிழ்நாடு வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மெட்ரோ ரயில் பாதை திறப்பு விழாவுடன் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களும் தொடங்கி வைக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜூன் 22, 2026: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளில் முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படும் வடபழனி – பூந்தமல்லி பைபாஸ் (நசரத்பேட்டை) இடையிலான 14.6 கிலோமீட்டர் நீளமுள்ள மெட்ரோ ரயில் பாதையை, பிரதமர் மோடி ஜூலை மாதத்தின் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் திறந்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்வின் போது, பல்வேறு நிறைவடைந்த ரயில்வே திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பதோடு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இரண்டு புதிய திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார் என மத்திய மற்றும் மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் திட்டம்:
வடபழனி – பூந்தமல்லி பைபாஸ் இடையிலான 14.6 கிலோமீட்டர் பாதை, கலங்கரை விளக்கம் (மெரினா கடற்கரை) முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை செல்லும் 26.1 கிலோமீட்டர் நீளமுடைய மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்தின் நான்காவது வழித்தடத்தின் (மஞ்சள் வழித்தடம்) ஒரு பகுதியாகும்.
இந்த பாதையில் சேவையை தொடங்குவதற்குத் தேவையான அனைத்து கட்டாய அனுமதிகளும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் பெறப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் இந்த பாதையின் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக தமிழக அரசு, பிரதமர் அலுவலகத்துக்கு தகவல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
புதிய வழிதடத்தை திறந்து வைக்கும் பிரதமர் மோடி:
ஜூலை மாத முதல் வாரத்தில் மத்திய அமைச்சரவையில் சிறிய அளவிலான மாற்றம் நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதன் பின்னர் பிரதமர் தமிழ்நாடு வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மெட்ரோ ரயில் பாதை திறப்பு விழாவுடன் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களும் தொடங்கி வைக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய மெட்ரோ சேவை தொடங்கப்பட்டால், பூந்தமல்லி புறநகர் பகுதியிலிருந்து வடபழனி வரை தற்போது சுமார் 90 நிமிடங்கள் ஆகும் பயண நேரம் வெறும் 30 நிமிடங்களாக குறையும். மேலும், வடபழனியில் ஏற்கனவே இயங்கி வரும் சென்னை சென்ட்ரல் – பரங்கிமலை பசுமை வழித்தட மெட்ரோ சேவையுடன் நேரடி இணைப்பு கிடைக்கும்.
மேலும் படிக்க: தெரு நாய்களால் அதிகரிக்கும் அச்சம்.. நடவடிக்கை குறித்து அறிக்கை கேட்டு உயர்நீதிமன்றம் உத்தரவு
தொடக்க கட்டத்தில், பூந்தமல்லி பைபாஸ் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில்கள் போரூர் வரை உள்ள அனைத்து 10 நிலையங்களிலும் நின்று செல்லும். அதன் பின்னர் வடபழனி வரை நேரடியாக இயக்கப்படும். இதனால் ஆலப்பாக்கம், கரம்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார்திருநகர், சாலிகிராமம் கிடங்கு மற்றும் சாலிகிராமம் உள்ளிட்ட ஆறு இடைநிலை நிலையங்கள் தற்காலிகமாக தவிர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாமதமாகும் திறப்பு விழா:
வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ பாதை திறப்பு, குத்தம்பாக்கம் புறநகர் பேருந்து முனையத்தின் செயல்பாட்டுடன் நேரடியாக தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் திருமழிசை அருகே அமைந்துள்ள இந்த புதிய பேருந்து நிலையத்தை கடந்த பிப்ரவரி மாதமே திறக்க தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், மெட்ரோ ரயில் பணிகள் நிறைவடையாத காரணத்தால் திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, முக்கிய சாலைகளின் சுமையை தளர்த்தும் நோக்கத்திலேயே குத்தம்பாக்கம் பேருந்து முனையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முனையம், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 21 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மேலும், நசரத்பேட்டை (பூந்தமல்லி பைபாஸ்) மெட்ரோ நிலையத்திலிருந்து சுமார் 6.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
மெட்ரோ சேவை தொடங்கிய பின்னரே குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.