AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு கொடூரம்.. பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு.. தீவிர சிகிச்சையில் பலர்!!

நச்சு வாயுவை அதிகளவில் சுவாசித்ததால் நுரையீரல் மற்றும் மூச்சுக்குழாய் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பல தொழிலாளர்களுக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், அவர்கள் வென்டிலேட்டர் செயற்கை சுவாசக் கருவிகளின் உதவியுடன் தீவிரக் கண்காணிப்புப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு கொடூரம்.. பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு.. தீவிர சிகிச்சையில் பலர்!!
அமோனியா வாயு கசிவு
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 22 Jun 2026 10:00 AM IST

திருவள்ளூர், ஜுன் 22: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளதாகச் சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள தனியார் கடல் உணவு ஏற்றுமதி ஆலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட திடீர் நச்சு வாயு கசிவு காரணமாக 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடுமையான மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு உடனடியாகப் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இதையும் படிக்க: சென்னை அருகே தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – 2 பேர் பலி

இதில் ஏற்கனவே சிலர் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் சிலர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 3 பேரும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேரும் உயிரிழந்துள்ளதாகச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தீவிர சிகிச்சையில் தொழிலாளர்கள்:

நச்சு வாயுவை அதிகளவில் சுவாசித்ததால் நுரையீரல் மற்றும் மூச்சுக்குழாய் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பல தொழிலாளர்களுக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், அவர்கள் வென்டிலேட்டர் செயற்கை சுவாசக் கருவிகளின் உதவியுடன் தீவிரக் கண்காணிப்புப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனைகளில் சிகிச்சை விவரம்:

பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுப் பிரிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தற்போதைய தரவுகளின்படி, வேல்ஸ் தனியார் மருத்துவமனையில் 29 தொழிலாளர்கள் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றொரு தனியார் மருத்துவமனையில் 18 பேருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 10 தொழிலாளர்கள் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்குச் சிறப்புச் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

விபத்து குறித்துப் போலீசார் மற்றும் ஆலை பாதுகாப்புத் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளவர்களின் உயிரைக் காக்க மருத்துவக் குழுவினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

விபத்து நேர்ந்த விதம்:

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வரும் ‘செயின்ட் பீட்டர்ஸ் பவுல்’ என்ற கடல் உணவு பதப்படுத்தும் நிறுவனத்தில், ஞாயிற்றுக்கிழமை அன்று சுமார் 120 தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். காலை 9 மணி அளவில், குளிரூட்டும் பிரிவில் பயன்படுத்தப்படும் அமோனியா நச்சு வாயு திடீரெனக் கசிந்தது. காற்றில் வேகமாகப் பரவிய இந்த வாயுவால், ஆலைக்குள் இருந்த 60-க்கும் மேற்பட்ட வடமாநில மற்றும் உள்ளூர் தொழிலாளர்களுக்குக் கடுமையான கண் எரிச்சலும் மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. தங்கும் விடுதியில் இருந்த சில தொழிலாளர்களுக்கு வாய் மற்றும் மூக்கிலிருந்து இரத்தம் கசிந்து அங்கேயே மயங்கி விழுந்தனர்.

ஆலைக்குச் சீல் வைக்க நடவடிக்கை?

விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் ஆலை பாதுகாப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். தொழிற்சாலையில் முறையான பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா? அவசரக்கால எச்சரிக்கை மணிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் சரியாகச் செயல்பட்டனவா? என்பது குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க : அரசுப் பள்ளியில் புகுந்து இடையூறு.. ‘ரீல்ஸ்’ போட்ட தவெக நிர்வாகி கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்!

பாதுகாப்பு விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட இறால் பதப்படுத்தும் ஆலைக்குச் சீல் வைக்கவும், நிர்வாகத்தின் மீது கடுமையான சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

Follow Us