தவெக வெற்றியின் வீச்சு கொளத்தூர் தேர்தல் முடிவுகளை பார்த்துமா புரியவில்லை.. முதல்வர் விஜய் கடும் தாக்கு!
Chief Minister Joseph Vijay : தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியின் வீச்சு கொளத்தூர் தேர்தல் முடிவுகளை பார்த்துமா புரியவில்லை என்றும், அதிகார ஆட்டம் போட்ட 15 அமைச்சர்களின் தோல்வியை பார்த்துமா புரிந்து கொள்ளவில்லை என்று முதல்வர் ஜோசப் விஜய் தெரிவித்தார்.
தமிழக சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக்கழக அரசு பெரும்பான்மை நிரூபிக்கும் கூட்டம் இன்று புதன்கிழமை நடைபெற்றது. இதில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், தவெக தலைவர் விஜய்க்கு வெற்றி நம்பிக்கை இல்லாத காரணத்தால் 2 தொகுதிகளில் வெற்றி பெற்று அதில் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய உள்ளார். தற்போது வரை தொகுதி மக்களுக்கு நன்றி கூட தெரிவிக்கவில்லை என்று விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில், உதயநிதி கருத்துக்கு முதல்வர் விஜய் எக்ஸ் தளத்தில் எதிர்க் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், அரசு தொடர்பாக சரியான குறைகளை யார் வைத்தாலும் அதனை ஏற்று உடனடியாக திருத்திக் கொள்ளும் மனப்பக்குவம் எங்களுக்கு உள்ளது. ஆனால், சொத்தை வாதங்களை மக்கள் மன்றத்தில் வைத்து தோல்வியே சந்தித்த திமுக அதே வழக்கத்தை சட்டமன்றத்திலும் தொடர்கிறது.
கொளத்தூர் தொகுதியில் தவெக வெற்றி வீச்சு
நம் வெற்றியின் வீச்சு எப்படி இருந்தது என்பதை கொளத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் பார்த்து கூடவா திமுகவினருக்கு புரியவில்லை. அதிகாரத்தை வைத்து ஆட்டம் போட்ட திமுக அமைச்சர்கள் 15 பேரின் தோல்விகளை பார்த்தும் கூடவா இன்னும் புரிந்து கொள்ளவில்லை. இயல்பு நிலை புரியாமல் இப்படியே தொடர்ந்தால் மக்களே இனிவரும் காலங்களில் திமுகவிற்கு இன்னும் நன்றாக ஆழமாக புரிய வைப்பார்கள். நமது மக்களுக்கு ஒட்டுமொத்தமாக நாம் நன்றி சொன்னதை மறந்து விட்டு நன்றி சொல்லவில்லை என்று கூறுகின்றனர்.
மேலும் படிக்க: திருப்பத்தூர் தவெக எம்எல்ஏ வழக்கில் திடீர் திருப்பம்.. உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை!




டிஜிட்டல் முறையில் தேம்பி தேம்பி அழ வேண்டாம்
நாம் போட்டியிட்ட தொகுதிகளை பிரித்து பேசி பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டது புரிதலே இல்லாத திமுக தான். நம் மக்களை நாம் விரைவில் சந்திப்போம் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே, திமுக அக்கரையாக இருப்பது போல டிஜிட்டல் முறையில் தேம்பி தேம்பி அழ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். தமிழக மக்களே நீங்கள் அனைவரும் தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களிக்க விரும்பினீர்கள் என்பது நமக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும், சில சூழல்களால் நமக்கு வாக்களிக்க இயலாமல் போனவர்கள் இப்போது மனம் வருந்துவதையும் நம்மால் உணர முடிகிறது. வரும் காலங்களில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும் உங்கள் தமிழக வெற்றி கழகம் பெறும் என்பதை உறுதியாக நம்புகிறோம்.
தவெகவை விட திமுக 10 சதவீதத்துக்கும் கீழ் வாக்குகள் பெற்றுள்ளது
தமிழக வெற்றி கழகத்திற்கு கிடைத்த வாக்கு சதவீதம் 34.92 ஆகும். அதாவது ஏறக்குறைய 35 சதவீதம். ஆனால், எதிர்க்கட்சியான திமுக கூட்டணி கட்சிகளின் ஓட்டுகளையும் பெற்று தான் சில தொகுதிகளில் ஆவது வென்றது என்பது உண்மை. தனிப்பட்ட முறையில் திமுகவின் வாக்கு சதவீதம் 24.19 ஆகும். அதாவது கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக்கழகம் பெற்ற வாக்கு சதவீதத்தை விட 10 சதவீதத்துக்கும் கீழ் திமுக பெற்றுள்ளது. இதேபோல திமுக தனி கட்சியாக பெற்ற வாக்குகள் ஒரு கோடியே 19 லட்சத்து 29 ஆயிரத்து 144 மட்டுமே. தமிழக வெற்றி கழகம் தனித்து பெற்ற வாக்குகள் ஒரு கோடியே 72 லட்சத்தி 26 ஆயிரத்து 209 வாக்குகள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: அரசியல் ரீதியாக பதிவிடும் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – தமிழக அரசின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை