ராஜகுருவாக இருந்தால் பர்சனலாக வைத்துக்கொள்ளுங்கள்.. அரசு பதவி எதற்கு? ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் நியமனம் குறித்து பேரவையில் பிரேமலதா விஜயகாந்த காட்டம்..
‘அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவன் இல்லை’ என முதலமைச்சர் சொல்லும்போது அனைவரும் வரவேற்றோம். ஆனால், அவருடைய ராஜகுருவாக இருக்கும் ரத்தன் பண்டிட் வெற்றிவேலை அரசு பதவியில் அமர்த்தியதற்கு, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்கள் சார்பாக வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என பிரேமலதா விஜய்காந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
மே 13, 2026: புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக்கழக அரசின் மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தமிழக அரசு பொறுப்பேற்ற உடனே, மூன்று நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த சூழலில், இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் இதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார். அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களும் பேசத் தொடங்கினர். அப்போது தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த உரையாற்றினார்.
குதிரை பேரம் நடந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது:
அப்போது பேசிய அவர், “எதிர்க்கட்சிகளை எதிர்க்கட்சிகளாக நினைக்காமல், அரசியலில் ஒரு மாண்பை உருவாக்கியுள்ளார் முதலமைச்சர் விஜய். 717 மதுக்கடைகளை மூடும் அறிவிப்பு, பெண்கள் பாதுகாப்புக்காக சிறப்பு படை உருவாக்கும் அறிவிப்பு ஆகியவை வரவேற்கத்தக்கது.
தமிழக வெற்றிக்கழக அரசு தனது ஆட்சியை தக்கவைக்க குதிரைப் பேரம் நடத்தியதாக வரும் குற்றச்சாட்டுகள் வேதனை அளிக்கிறது. தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் குதிரைப் பேரம் நடைபெற்றுள்ளது.
மேலும் படிக்க: தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு.. எஸ்.பி வேலுமணி தரப்பிலான அதிமுக உறுப்பினர்கள் ஆதரவு..
‘முகமூடி அணிந்து எங்கும் செல்ல மாட்டோம்; வெளிப்படையான ஆட்சி வழங்குவோம்’ என முதலமைச்சர் விஜய் தெரிவித்திருந்தார். அப்படி இருக்கையில், முதலமைச்சர் விஜயின் பட்டினப்பாக்கம் வீட்டிற்கு முகத்தை மூடிக்கொண்டு சென்றவர் யார் என்பதை பேரவையில் வெளிப்படையாக விளக்க வேண்டும்.
குதிரைப் பேரம் நடந்ததாக ஏராளமானோர் கூறி வரும் நிலையில், அதுகுறித்து பேச வேண்டும். தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு மோசமான நிகழ்வு தற்போது நடந்துள்ளது. இந்த செயல் மிகுந்த வேதனை அளிக்கிறது.
ராஜகுருவாக இருந்தால் பர்சனலாக வைத்துக்கொள்ளுங்கள்:
‘அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவன் இல்லை’ என முதலமைச்சர் சொல்லும்போது அனைவரும் வரவேற்றோம். ஆனால், அவருடைய ராஜகுருவாக இருக்கும் ரத்தன் பண்டிட் வெற்றிவேலை அரசு பதவியில் அமர்த்தியதற்கு, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்கள் சார்பாக வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் ராஜகுருவாக இருந்தால் தனிப்பட்ட முறையில் வைத்துக் கொள்ளுங்கள். அரசு பதவி எதற்கு? இதன் மூலம் உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கும் இளைஞர்களுக்கும் என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள்? இதற்கு முதலமைச்சர் நிச்சயம் விளக்கம் கொடுத்தே ஆக வேண்டும். இந்த ஆட்சி ஒரு நேர்மையான ஆட்சியாகவும், அறிவியல் பூர்வமான ஆட்சியாகவும் இருக்க வேண்டும்,” என குறிப்பிட்டார்.