பயிற்சிக்கு வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை.. பிரபல கபடி பயிற்சியாளர் மீது போக்சோ வழக்கு.. வலைவீசிய போலீஸ்!
Chennai Kabaddi Coach : சென்னையில் கபடி வீராங்கனைக்கு தொடர் பாலியல் தொல்லை அளித்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், பிரபல கபடி பயிற்சியாளர் ராஜு மீது அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை மாவட்டம், கண்ணகி நகர் பகுதியில் கபடி பயிற்சியாளராக இருந்து வருபவர் ராஜு. இவர், பல்வேறு மாணவ, மாணவிகளுக்கு கபடி பயிற்சி அளித்து வருகிறார். இவரிடம் தாய், தந்தை இல்லாத 17 வயது மாணவி ஒருவர் தனது பாட்டியின் வீட்டில் தங்கி இருந்து படித்துக் கொண்டே கபடி பயிற்சி பெற்று வருகிறார். இந்த நிலையில், அந்த மாணவியிடம் கபடி பயிற்சியாளர் ராஜு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி அவரிடம் கண்டித்துள்ளார். ஆனால், அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாத ராஜு அந்த மாணவியை மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மீண்டும் கபடி பயிற்சியாளர் அந்த மாணவியிடம் பாலியல் தொல்லை அளித்த நிலையில், ஆத்திரம் தாங்காத அந்த மாணவி போலீசில் புகார் அளிக்க முடிவு செய்தார்.
வீராங்கனையிடம் அத்துமீறிய கபடி பயிற்சியாளர்
அதன்படி, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த மாணவி புகார் அளித்தார். அந்த புகாரில், கடந்த ஜூன் 9- ஆம் தேதி முதல் தன்னை கபடி பயிற்சியாளர் ராஜு 3 முறை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். அத்துடன், தான் வீட்டில் தனியாக இருந்த போது பயிற்சியாளர் ராஜு தன்னிடம் அத்துமீறி ஈடுபட்டார். இதனால், அவரை கண்டித்தபோது என்னை மிரட்டினார் என்று தெரிவித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் கபடி பயிற்சியாளர் ராஜு மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் படிக்க: பெப்பர் ஸ்பிரே அடித்து பெண் துடிதுடிக்க வெட்டிக் கொலை.. சென்னையில் நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்!!




தலைமறைவான பயிற்சியாளருக்கு வலை வீச்சு
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த கபடி பயிற்சியாளர் ராஜு தலைமறைவானார். அவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். பாலியல் புகாருக்குள்ளான கபடி பயிற்சியாளர் ராஜு கடந்த 2015- ஆம் ஆண்டு பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய மகளிர் அணி ஜூனியர் கபடி போட்டியில் இந்திய அணி தங்கம் வென்று வெற்றி பெற்றிருந்தது. இந்த வெற்றிக்கு கண்ணகி நகரை சேர்ந்த கபடி வீராங்கனை கார்த்திகா என்பவர் முக்கிய பங்காற்றி இருந்தார்.
பிரபல கபடி பயிற்சியாளர் ராஜு
இவருக்கு ராஜு கபடி பயிற்சி அளித்து இருந்தார். இதன் மூலம், அவர் தமிழ்நாடு முழுவதும் பிரபலமான கபடி பயிற்சியாளராக அறிமுகமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. கபடி பயிற்சிக்கு வந்த வீராங்கனைக்கு தொடர் பாலியல் தொல்லை அளித்ததாக கபடி பயிற்சியாளர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: தாயின் பிரிவு தந்த ஏக்கம்.. இந்த உலகமே வேண்டாம்.. சோகத்தில் மாணவி எடுத்த விபரீத முடிவு!