தாயின் பிரிவு தந்த ஏக்கம்.. இந்த உலகமே வேண்டாம்.. சோகத்தில் மாணவி எடுத்த விபரீத முடிவு!
Kanyakumari Crime : கன்னியாகுமரியில் தாய் இறந்த மன வேதனையில் இருந்து மீளமுடியாத மகள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விபரீதமான முடிவை எடுத்தார். இந்தச் சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் அருகே உள்ள செங்கோடி புல்லானிவிளை பகுதியை சேர்ந்தவர் ரிங்கில் ஜெயக்குமார். கூலித் தொழிலாளியான இவருக்கு நிர்மலா சுனிதா என்ற மனைவியும், 15 வயதில் ரினோஷியா என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். நிர்மலா சுனிதா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் திடீரென உயிரிழந்து விட்டார். இதன் காரணமாக ரிங்கில் ஜெயக்குமார் தனது இரு குழந்தைகளையும் கடும் சிரமத்திற்கு மத்தியில் வளர்த்து வருகிறார். ரினோஷியா அந்தப் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் 10 – ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நிர்மலா சுனிதா இறந்ததில் இருந்தே, அவரது மகள் ரினோஷியா மிகுந்த மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவ்வப்போது தனது தந்தை ரிங்கில் ஜெயக்குமாரிடம் கூறி வருத்தப்பட்டு வந்துள்ளார். அவருக்கு, ரிங்கில் ஜெயக்குமார் ஆறுதல் தெரிவித்து வந்தார்.
தாய் இறந்ததை மறக்க வீடு மாற வேண்டும் என்ற சிறுமி
மேலும், தாய் நிர்மலா இறந்ததை மறப்பதற்காக தாங்கள் குடியிருக்கும் வீட்டை மாற்றிவிட்டு வேறு வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று தனது தந்தையிடம் ரினோஷியா அடிக்கடி கூறி வந்தார். ஆனால், ரிங்கில் ஜெயக்குமார் வேறு வீட்டுக்கு செல்ல வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், தந்தை மகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், ரிங்கில் ஜெயக்குமார் வழக்கம் போல காலை வேலைக்கு சென்று விட்டார்.
மேலும் படிக்க: சென்னையில் நடைபாதை திட்டத்தில் முறைகேடு: 35 டெண்டர்களை ரத்து செய்த மாநகராட்சி




வீட்டில் மாணவி எடுத்த விபரீதமான முடிவு
மாணவி ரினோஷியாவும் வழக்கம்போல காலையில் பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார். அப்போது, வீட்டில் ரினோஷியா மட்டும் தனியாக இருந்தார். இந்த நிலையில், தாய் இறந்த சம்பவத்தில் இருந்து வெளிவராத மாணவி தானும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்துள்ளார். அதன்படி, வீட்டின் பின் வாசல் பகுதியில் உள்ள கொக்கியில் கயிறால் தூக்கு போட்டு தொங்கினார். பின்னர், சிறிது நேரம் கழித்து வேலைக்கு சென்று வீடு திரும்பிய ஜெயக்குமார் தனது மகளின் நிலையை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார்.
திருவட்டார் போலீசார் விசாரணை
உடனே, அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று தூக்கில் இருந்து மாணவியை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக, ரிங்கில் ஜெயக்குமார் திருவட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: மாநகராட்சிகளில் தூய்மைப் பணி தனியார்மயம்.. டெண்டரை ரத்து செய்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!