சென்னையில் நடைபாதை திட்டத்தில் முறைகேடு: 35 டெண்டர்களை ரத்து செய்த மாநகராட்சி
இந்தத் திட்டத்திற்கு மாநில அரசின் ஒப்புதல் ஏற்கனவே கிடைத்துள்ளதால், திட்டம் கைவிடப்படவில்லை என்றும், தற்போதைக்கு டெண்டர்கள் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். மேலும், விரிவான திட்ட அறிக்கை (DPR) முழுமையாக மறுஆய்வு செய்யப்பட்டு, திருத்தப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் புதிய டெண்டர்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜூன் 26, 2026: சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரூ.284 கோடி மதிப்பீட்டில் நடைபாதைகள் அமைக்கும் திட்டத்திற்காக வெளியிடப்பட்ட 35 டெண்டர்களை சென்னை மாநகராட்சி ரத்து செய்துள்ளது. திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநகரம் முழுவதும் நடைபாதைகள் அமைக்கும் திட்டத்தின் செலவு செயற்கையாக உயர்த்தப்பட்டதுடன், சில குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கு சாதகமாக டெண்டர் நிபந்தனைகள் வடிவமைக்கப்பட்டதாகவும், திட்ட அறிக்கையில் தேவையற்ற பணிகள் சேர்க்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
35 டெண்டர்களை ரத்து செய்த சென்னை மாநகராட்சி:
இதனால் அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அனைத்து டெண்டர்களும் ரத்து செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், திட்ட மதிப்பீடு தயாரிக்கும் கட்டத்திலேயே செலவு சுமார் நான்கு மடங்கு உயர்த்தப்பட்டதுடன், ஏலம் கோரும்போது கூடுதலாக 10 சதவீதம் வரை மதிப்பீடு உயர்த்தப்பட்டதும் ஆய்வில் முறைகேடாக கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: இனி யாருக்கும் சீட் இல்லைனு சொல்ல முடியாது.. அரசு கல்லூரிகளில் திடீர் மாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!!
கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தாக்கல் செய்த மாநகராட்சி பட்ஜெட்டில் இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, சிறப்புத் திட்டங்கள் துறை பிப்ரவரி 20-ஆம் தேதி டெண்டர்களை வெளியிட்டது. ஆனால், அதற்குள் சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், குறைந்தபட்ச ஏலதாரர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், பணி ஆணைகளை சென்னை மாநகராட்சி வழங்கவில்லை.
4 மடங்கு அதிகமாக காட்டப்பட்ட செலவீனங்கள்:
பொதுவாக இரண்டு அல்லது மூன்று சாலைகளில் நடைபாதைகள் அமைப்பதற்கான ஒவ்வொரு தொகுப்பிற்கும் ரூ.8 கோடி முதல் ரூ.9 கோடி வரை டெண்டர் மதிப்பீடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், நடைபாதை அமைக்கும் பணிகளில் பெரும்பாலும் கொத்துவேலை, கான்கிரீட் சமன்படுத்துதல் மற்றும் கற்கள் பதிக்கும் பணிகள் மட்டுமே இடம்பெறுவதால், ஒரு திட்டத்திற்கு ரூ.1.5 கோடி முதல் ரூ.2 கோடி வரை மட்டுமே செலவாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஒரு மீட்டர் நடைபாதை அமைப்பதற்கான மதிப்பீடும் வழக்கத்தை விட சுமார் நான்கு மடங்கு அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெண்டர்கள் மட்டுமே ரத்து:
இந்தத் திட்டத்திற்கு மாநில அரசின் ஒப்புதல் ஏற்கனவே கிடைத்துள்ளதால், திட்டம் கைவிடப்படவில்லை என்றும், தற்போதைக்கு டெண்டர்கள் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். மேலும், விரிவான திட்ட அறிக்கை (DPR) முழுமையாக மறுஆய்வு செய்யப்பட்டு, திருத்தப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் புதிய டெண்டர்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.