சென்னையில் பயங்கரம்.. கத்திகளுடன் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்.. 2 பேருக்குப் பலத்த வெட்டுக்காயம்
சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் அருகே பட்டப்பகலில் இருவேறு கல்லூரி மாணவர்கள் கத்திகளுடன் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதலில் பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த 2 மாணவர்கள் பலத்த வெட்டுக் காயங்களுடன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை, ஜூலை 27: சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் அருகே பட்டப்பகலில் இருவேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கத்திகளுடன் பயங்கரமாக மோதிக்கொண்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தின் வெளியே பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த வேளையில், திடீரென இருவேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுப் பின்னர் கைகலப்பாக மாறியது.
இதையும் படிக்க: சோகத்தில் முடிந்த ஜாலி ரைடு.. கடலில் எஞ்சின் பழுதானதால் துயரம்.. அலையில் அடித்துச் செல்லப்பட்ட 2 சிறுவர்கள் பலி!
15 பேர் கொண்ட கும்பல் கத்திகளுடன் தாக்குதல்:
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த பி.எஸ்சி இரண்டாமாண்டு பயிலும் ஏம்ராஜ் மற்றும் பொன்னேரியைச் சேர்ந்த நிதீஷ்குமார் ஆகிய இரு மாணவர்களை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சுமார் 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று திரண்டு, 6-க்கும் மேற்பட்ட கத்திகள் உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களுடன் வந்து இந்த இரண்டு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை:
கத்திகளால் சரமாரியாக வெட்டப்பட்டதில் ஏம்ராஜ் மற்றும் நிதீஷ்குமார் ஆகிய இருவருக்கும் உடலில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன. ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காகச் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அலறியடித்து ஓடிய பொதுமக்கள்:
பொதுமக்கள் மற்றும் பயணிகள் அதிக அளவில் நடமாடும் சென்ட்ரல் மெட்ரோ பகுதியில், மாணவர்கள் பட்டப்பகலில் கத்திகளுடன் மோதிக்கொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் பயந்து அலறியடித்து ஓடினர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த பெரியமேடு காவல் நிலையப் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: அதிமுக EX MLA-க்கள் தகுதி நீக்க விவகாரம்.. எடப்பாடி பழனிசாமிக்கு பறந்த பரபரப்பு கடிதம்!
தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பியோடிய மற்றொரு கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் யார் என்பதைக் கண்டறிய, மெட்ரோ ரயில் நிலையத்தைச் சுற்றியுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய மாணவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் சென்னை சென்ட்ரல் பகுதியில் சிறிது நேரம் கடும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.