சோகத்தில் முடிந்த ஜாலி ரைடு.. கடலில் எஞ்சின் பழுதானதால் துயரம்.. அலையில் அடித்துச் செல்லப்பட்ட 2 சிறுவர்கள் பலி!
Thoothukudi Drowning Inciden: தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் பொழுதுபோக்கிற்காக பைபர் படகில் கடலுக்குச் சென்ற 7 சிறுவர்களில், படகின் எஞ்சின் பழுதாகி அலையில் அடித்துச் செல்லப்பட்டதால் கடலில் நீந்திய 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மாயமான இருவரின் சடலங்களும் சங்கு குளிக்கும் தொழிலாளர்கள் மூலம் மீட்கப்பட்டு மெரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி, ஜூலை 27: தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் அருகே விடுமுறை நாளன்று பொழுதுபோக்கிற்காக பைபர் படகில் கடலுக்குள் சென்ற சிறுவர்களில், எஞ்சின் பழுதானதால் கடலில் குதித்து நீந்த முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: தவெக ஆட்சி கவிழ்ப்பு முயற்சி.. செந்தில் பாலாஜியிடம் 2- ஆவது நாளாக விசாரணை.. கேள்விகளால் துளைத்தெடுத்த போலீசார்!
7 சிறுவர்கள் சென்ற ஜாலி ரைட்!
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் கடற்கரைக் கிராமத்தைச் சேர்ந்த 7 சிறுவர்கள், விடுமுறை தினமான நேற்று மதியம் கரையிலிருந்த ஒரு பைபர் படகை எடுத்துக்கொண்டு ஜாலியாகச் சுற்றிப் பார்க்கவும், கடலில் குளிப்பதற்காகவும் கடலுக்குள் சென்றுள்ளனர். கரையில் இருந்து சுமார் 1 மைல் தொலைவு சென்றதும், படகை நிறுத்திவிட்டு அதில் 3 பேர் அமர்ந்திருக்க, மீதி 4 சிறுவர்கள் கடலில் குதித்து நீந்தி குளித்துக் கொண்டிருந்துள்ளனர்.
அலையில் அடித்துச் செல்லப்பட்ட படகு:
அப்போது எதிர்பாராதவிதமாகப் படகின் எஞ்சின் திடீரென அணைந்து பழுதானது. காற்று வேகமாக வீசியதால், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு கடலில் நீந்திக்கொண்டிருந்த சிறுவர்களை விட்டு விலகி மிக வேகமாக அலைகளின் திசையை நோக்கி அடித்துச் செல்லப்பட்டது. படகின் அருகே நீந்திச் செல்ல முடியாததால், நீரில் குளித்துக் கொண்டிருந்த 4 சிறுவர்களும் கரையை நோக்கி நீந்தத் தொடங்கினர். அதேவேளையில், படகில் இருந்த 3 சிறுவர்களுக்கும் எஞ்சினை மீண்டும் ஸ்டார்ட் செய்யத் தெரியாததால் செய்வதறியாது திகைத்தனர்.
செல்போன் அழைப்பும் மீட்பு நடவடிக்கையும்:
படகில் இருந்த சிறுவர்கள் உடனடியாகத் தங்களிடம் இருந்த செல்போன் மூலம் கரையில் உள்ள குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும், அதில் ஒரு சிறுவனின் தந்தை உடனடியாக மற்றொரு படகை எடுத்துக்கொண்டு கடலுக்குள் விரைந்தார். நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த 2 சிறுவர்களையும், எஞ்சின் இயங்காமல் தவித்த படகையும் அதில் இருந்த 3 சிறுவர்களையும் சேர்த்து மொத்தம் 5 பேரை பாதுகாப்பாக மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர்.
2 சிறுவர்கள் சடலமாக மீட்பு:
இருப்பினும், நீந்தி வர முயன்ற மனோஜ்குமார் மற்றும் ஜோசுவா ஆகிய 2 சிறுவர்கள் கடலில் மாயமாகினர். அவர்களைத் தேடும் பணியில் 8 நாட்டுப் படகுகளில் 60-க்கும் மேற்பட்ட உள்ளூர் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். நேற்று இரவு வரை தேடியும் கிடைக்காத நிலையில், இன்று அதிகாலை சங்கு குளிக்கும் தொழிலாளர்களின் உதவியுடன் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது, தருவைகுளத்தில் இருந்து முக்கால் மைல் தொலைவில் மனோஜ்குமார் மற்றும் ஜோசுவா ஆகிய இருவரின் உடல்களும் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டு கரைக்குக் கொண்டு வரப்பட்டன.
மேலும் படிக்க: அதிமுக EX MLA-க்கள் தகுதி நீக்க விவகாரம்.. எடப்பாடி பழனிசாமிக்கு பறந்த பரபரப்பு கடிதம்!
உயிரிழந்த சிறுவர்களின் உடல்களைக் கண்டு குடும்பத்தினரும் உறவினர்களும் கதறி அழுத காட்சி காண்போரைக் கலங்கச் செய்தது. இச்சம்பவம் குறித்து மெரைன் (Marine) துறைமுகக் காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.