தமிழகத்தில் நாளை முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு களப்பணி.. 1.15 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் களமிறங்குகின்றனர்!
Tamil Nadu Census Fieldwork: தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீடுகள் பட்டியல் மற்றும் வீட்டு வசதி களப்பணிகள் கணக்கெடுக்கும் பணிகள் நாளை ஆகஸ்ட் 1- ஆம் தேதி முதல் தொடங்க உள்ளன. இதில், 33 கேள்விகளை அதிகாரிகள் கேட்க உள்ளனர்.
தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீடுகள் பட்டியல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை ஆகஸ்ட் 1- ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 30- ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக களப்பணியின் போது 19 ஆயிரம் அதிகாரிகள் மேற்பார்வையில், 1.15 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். இவர்கள் அனைத்து வீடுகளுக்கும் நேரடியாக சென்று கணக்கெடுப்பை மேற்கொள்ள உள்ளனர். இந்த பணிகளின் போது, பொதுமக்களிடம் 33 வகையான கேள்விகளை கேட்க உள்ளனர். இதற்கான ஒரு கட்டமைக்கப்பட்ட கேள்வித்தாள்களை பயன்படுத்தி இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதில், வீடுகளின் வசதி நிலை மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட முக்கிய தரவுகள் சேகரிக்கப்பட உள்ளது.
கணக்கெடுப்பில் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பம்
மேலும், விரிவான, துல்லியமான கணக்கெடுப்பை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் முதல் முறையாக நவீன டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் வீடுகள் தோறும் நேரடியாக சென்று கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த கள பணியின் போது, கணக்கெடுப்பாளர்கள் தரவுகளை டிஜிட்டல் முறையில் பதிவு செய்ய ஒரு பிரத்தியேக செல்போன் செயலியை பயன்படுத்த உள்ளனர். இதன் மூலம் விரைவான செயலகம், அதிக துல்லியம் மற்றும் தடையற்ற கணக்கெடுப்பு அனுபவம் ஆகியவற்றை வழங்கும்.
மேலும் படிக்க: தாய் என்றும் பார்க்கவில்லை.. தம்பி என்றும் நினைக்கவில்லை.. ரூ.1 கோடிக்காக அண்ணா நகரில் அரங்கேறிய இரட்டை கொலை!




அனைத்து தகவல்களும் ரகசியமாக பாதுகாக்கப்படும்
இதன் மூலம் சேகரிக்கப்படும் அனைத்து தகவல்களும் சட்டபூர்வமாக பாதுகாக்கப்பட்டு, ரகசியமாக வைக்கப்படும். புள்ளிவிவர பகுப்பாய்வு, பொது கொள்கை உருவாக்கம் ஆகியவற்றிற்காக மட்டுமே பிரத்தியேகமாக பயன்படுத்தப்பட உள்ளன. கள செயல்பாடுகளுக்கு முன்னதாக 2027 மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சுய கணக்கெடுப்பு வசதியானது தமிழக மக்களிடம் இருந்து பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குக
ஜூலை 17- ஆம் தேதி முதல் 31- 1 ஆம் தேதி வரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக தங்களது விவரங்களை பதிவு செய்துள்ளனர். சுய கணக்கெடுப்பை நிறைவு செய்துள்ள மக்கள் வீட்டு பட்டியல் தயாரிப்பு பணியை எளிதாக்குவதற்காக வருகை தரும் கணக்கெடுப்பாளரிடம் பகிர்ந்து கொள்ள தாங்கள் உருவாக்கிய சுய கணக்கெடுப்பு அடையாள எண்ணை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும். இந்த பணியின் போது களப்பணியாளர்களுக்கு முழு ஆதரவை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: டாஸ்மாக் முறைகேடு வழக்கு.. கைதிலிருந்து தப்பினார் செந்தில் பாலாஜி.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!