காவிரி விவகாரம்.. “அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட முடியுமா.. முடியாதா?”.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கேள்வி!
DMK Supreme Court Petition: மேகதாது அணை மற்றும் காவிரி நீர் விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட முடியுமா என முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதனிடையே, சட்டமன்றத் தீர்மானத்திற்குப் பின் அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லை என அமைச்சர் நிர்மல்குமார் பதிலளித்துள்ளார்.
சென்னை, ஆகஸ்ட் 02: காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டித் தங்கள் நிலைப்பாட்டைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில், “தமிழகத்திலும் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட முடியுமா முடியாதா?” என்று தமிழக முதலமைச்சர் விஜயிடம் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிக்க: தமிழகத்தில் தீவிரமடையும் நாய்க்கடி அவலம்.. இந்த ஆண்டில் இதுவரை 4.68 லட்சம் பேர் பாதிப்பு; 24 பேர் உயிரிழந்த சோகம்!
கர்நாடகாவில் அனைத்துக் கட்சி கூட்டம்:
கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, அம்மாநில முதல்வர் மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தலைமையில் பெங்களூரில் உள்ள முதல்வர் இல்லத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. முன்னாள் முதல்வர்கள், அமைச்சர்கள் மற்றும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.
மு.க.ஸ்டாலின் கடும் சாடல்:
இந்தச் சூழலைச் சுட்டிக்காட்டியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனளிக்காது என்ற எச்சரிக்கையை மீறிச் செயல்பட்ட தமிழக முதல்வர் விஜய், தற்போது தனிமைப்பட்டு நிற்கிறார். சட்டரீதியாக மட்டுமே போராட வேண்டும் என்ற கடந்த கால படிப்பினைகளைப் புறக்கணித்துவிட்டு கர்நாடகாவிற்குத் தூது அனுப்பியது தவறு. கர்நாடக அரசு பேச்சுவார்த்தைக்கு மறுப்பு தெரிவித்ததோடு, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டித் தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளது. எனவே இனியேனும் உரிய ஆலோசனைகளுடன் தமிழக அரசு செயல்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லை:
மு.க.ஸ்டாலின் கோரிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அமைச்சர் நிர்மல்குமார், “சட்டமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டுவதில் அர்த்தமில்லை. காவிரி விவகாரத்தில் சுமுகமான தீர்வு காணக்கூடாது என்ற எண்ணத்தில் செயல்படுபவர்களை வைத்து அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட முடியாது. தமிழக அரசு எந்த வகையிலும் சுமுகத் தீர்வுக்கு முயன்றாலும் அதற்கு இடையூறு விளைவிப்பவர்களுடன் கூட்டம் நடத்த முடியாது” என்று தெளிவுபடுத்தினார்.
உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு:
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உடனடியாகத் தண்ணீர் திறந்துவிட உத்தரவிடக் கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அம்மனுவில், “காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வினாடிக்கு 3,500 கன அடி நீர் திறக்க உத்தரவிட்டும் அதை கர்நாடக அரசு நடைமுறைப்படுத்தத் தவறிவிட்டதால் டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தட்டுப்பாட்டைச் சரிசெய்யும் வகையில் அடுத்த 15 நாட்களுக்குத் தினமும் வினாடிக்கு 7,000 கன அடி நீர் திறக்க உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: கர்நாடகா போனா முதல்வரை கட்டி வச்சிடுவாங்க.. விஜய் பற்றி மீண்டும் சர்ச்சையை கிளப்பிய அனிதா ராதாகிருஷ்ணன்!
பிரதமரைச் சந்திக்க அவசியம்:
இதனிடையே மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், “காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் பிரதமரை நேரில் சந்தித்து நிலைமையை எடுத்துரைப்பது மிக மிக இன்றியமையாத தேவையாக உள்ளது. அதற்குக் முன்னோடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி ஒருமித்த கருத்து உருவாக்கப்பட வேண்டும். இதுகுறித்துத் தமிழக அரசு விரைவில் நல்ல முடிவை எடுக்கும் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.