AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அதிமுக இரு அணிகள் இணைப்பு முயற்சி தோல்வி.. கோரிக்கைகளை ஏற்க மறுத்து இபிஎஸ் பிடிவாதம்!!

ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும், நேற்று ஒரு திடீர் திருப்பமாக சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு எஸ்.பி.வேலுமணி அணியைச் சேர்ந்தவர்களின் கார்கள் அணிவகுத்து வந்தன. கட்சி இரு பிரிவாகச் செயல்படுவதால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்த்து, கட்சியின் நலன் கருதி இரு தரப்பையும் ஒன்றிணைக்க இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அதிமுக இரு அணிகள் இணைப்பு முயற்சி தோல்வி.. கோரிக்கைகளை ஏற்க  மறுத்து இபிஎஸ் பிடிவாதம்!!
கோப்புப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 27 May 2026 07:27 AM IST

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்பு, ஒவ்வொரு நாளும் அரசியல் களம் பல்வேறு பரபரப்பான சூழல்களுடன் நகர்ந்து வருகிறது. குறிப்பாக, இந்தத் தேர்தலில் 47 இடங்களை வென்ற அதிமுக தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையிலான மற்றொரு அணி என இரண்டு அணிகளாகப் பிரிந்துள்ளது. சட்டசபையில் தவெக ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை நிரூபிக்க நடந்த வாக்கெடுப்பில், எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தரப்பு அணியைச் சேர்ந்த 25 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எடப்பாடி பழனிசாமி தரப்பு அணியைச் சேர்ந்த 22 எம்எல்ஏக்கள் மட்டுமே வாக்கெடுப்பில் பங்கேற்றனர். தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக எம்எல்ஏக்கள் மீது எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை எடுத்தார். அவர்களின் கட்சிப் பதவிகளைப் பறித்ததோடு, கட்சி கொறடா உத்தரவை மீறிச் செயல்பட்டதாகக் கூறி அவர்கள் மீது தகுதி நீக்கம் உள்ளிட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகரிடம் மனு அளித்தார்.

மேலும் படிக்க: “டாஸ்மாக் பணியாளர்கள் பணிக்கு திரும்ப அழைப்பு”.. ஜூன் மாத இறுதிக்குள் மாற்றம்.. அமைச்சர் கொடுத்த உறுதி!!

எம்எல்ஏக்கள் ராஜினாமாவும் அணி மாற்றமும்:

இந்த அரசியல் குழப்பங்களுக்கு இடையே, எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் அணியில் இருந்த முக்கிய எம்எல்ஏக்கள் சிலர் திடீரென எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிக்கத் தொடங்கினர். அமிர்தராஜ் சுந்தரராஜ், பண்ருட்டி மோகன், காந்தியம் நடராஜன், சங்கரன்கோவில் சீலியன், அந்தியூர் ராஜாமணி, பாலகிருஷ்ணா ரெட்டி ஆகிய 6 எம்எல்ஏக்கள் நேற்று முன்தினம் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துத் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். அத்துடன், தாங்கள் செய்த தவறுக்கு மன்னிப்புக் கடிதத்தையும் அவரிடம் வழங்கினர். மறுபுறம், ஜயராமன், சத்யபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகிய மூவர் தங்களது எம்எல்ஏ. பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணைந்தனர்.

வலுவிழந்த எஸ்.பி.வேலுமணி அணி:

எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் அணியில் இருந்து 6 எம்எல்ஏக்கள் அணி மாறியதாலும், 4 பேர் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்ததாலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக எஸ்.பி.வேலுமணி அணியில் இருந்த 25 எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 15 ஆகக் குறைந்தது. அதே நேரத்தில், எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது.

திடீர் திருப்பமாக நடந்த பேச்சுவார்த்தை

இந்த அதிரடி மாற்றங்களால் அதிமுகவின் இரு பிரிவினரிடையே உச்சகட்ட பரபரப்பு தொற்றிக்கொண்டது. அடுத்து என்ன செய்வது என்பது குறித்து விவாதிக்க, எஸ்.பி.வேலுமணி தரப்பினர் சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள சி.வி.சண்முகம் இல்லத்தில் நேற்று காலை அவசர ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும், நேற்று ஒரு திடீர் திருப்பமாக சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு எஸ்.பி.வேலுமணி அணியைச் சேர்ந்தவர்களின் கார்கள் அணிவகுத்து வந்தன. கட்சி இரு பிரிவாகச் செயல்படுவதால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்த்து, கட்சியின் நலன் கருதி இரு தரப்பையும் ஒன்றிணைக்க இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

எடப்பாடி காட்டிய பிடிவாதம்:

இந்த இணைப்பிற்கான பேச்சுவார்த்தையின் போது, “கட்சியின் நலனைக் கருத்தில் கொண்டு மீண்டும் இணைய முயன்று நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். எங்களிடமிருந்து பறிக்கப்பட்ட கட்சிப் பதவிகளை மீண்டும் திரும்ப வழங்க வேண்டும், நாங்கள் அனைவரும் ஒன்று சேரத் தயாராக இருக்கிறோம். அதேபோல், எங்களுக்கு எதிராக சபாநாயகரிடம் கொடுக்கப்பட்ட தகுதி நீக்க மனுவையும் எடப்பாடி பழனிசாமி தரப்பு திரும்பப் பெற வேண்டும். அப்படி மனுவைத் திரும்பப் பெற்றால் கட்சித் தாவல் சட்டம் உள்ளிட்ட எந்தவித சட்ட நடவடிக்கைகளும் எடுக்கக்கூடாது” என்று வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால், இந்தக் கோரிக்கைகளை ஏற்பதற்கு எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்துவிட்டார். பறிக்கப்பட்ட பதவிகளைத் திருப்பித் தர முடியாது என்பதில் உறுதியாக இருந்த அவர், கட்சித் தாவல் விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதிலும் தீவிரமாக இருந்தார். எடப்பாடி பழனிசாமி தனது முடிவில் மிகவும் பிடிவாதமாக இருந்ததால், அதிமுகவின் இந்த இணைப்பு பேச்சுவார்த்தை எவ்வித உடன்பாடும் இன்றி முற்றிலும் தோல்வியில் முடிவடைந்தது.

மேலும் படிக்க: பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை.. முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்..

அடுத்தகட்ட நகர்வுகளால் நிலவும் பதற்றம்:

அதிமுகவின் இரு அணிகளையும் ஒன்றிணைக்க நடத்தப்பட்ட இந்த இறுதிமுயற்சியும் தோல்வியில் முடிந்ததால், அடுத்து அரசியல் களத்தில் என்ன நடக்கப்போகிறது என்ற மிகப்பெரிய கேள்விக்குறியும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இரு தரப்பினரும் தங்களது அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளைத் தீவிரப்படுத்தியுள்ளதால், அதிமுக வட்டாரத்தில் தற்போது பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது.

Follow Us