நாட்டின் பிரதமர் விஜய்… தமிழகத்தின் முதல்வர் அஜித் குமார்.. ரக்கி ராதன் பண்டிட் கணிப்பால் அதிரும் அரசியல் களம்!
Astrologer Ricky Radhan Pandit : தமிழக முதல் அமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு ஜோதிடத்தின் மீது நம்பிக்கை உள்ளதா என்பது தொடர்பாக அவரது அஷ்டாங்க ஜோதிடரும், தவெக செய்தி தொடர்பாளருமான ரிக்கி ராதன் பண்டிட் என்பவர் விளக்கம் அளித்து உள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் கடந்த மே 10- ஆம் தேதி புதிய அரசாக பொறுப்பேற்றுக் கொண்டது. அப்போது, முதல்வராக பதவியேற்ற ஜோசப் விஜய் தமிழக அரசில் பல்வேறு அதிரடி மாற்றங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், பெண்கள் பாதுகாப்புக்கான சிங்கப் பெண்கள் சிறப்பு பாதுகாப்பு படை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு படை, மதுக்கடைகள் அடைப்பு என்பன உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளார். அத்துடன் தமிழக அரசு துறைகளில் முக்கிய பொறுப்புகளில் உள்ள உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனடியாக மாற்றம் செய்யப்பட்டனர். இதில், தலைமைச் செயலாளர், முதல்வரின் தனிச் செயலாளர்கள், காவல்துறையில் உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் உள்ளிட்டோர் மாற்றம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர்.
முதல்வரின் சிறப்பு அதிகாரியாக ஜோதிடர் நியமனம்
அத்துடன், தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் சிறப்பு அதிகாரியாக ( அரசியல்) ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் என்பவர் நியமனம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை தமிழக பொதுத்துறை முதன்மை செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கர் வெளியிட்டிருந்தார். ரிக்கி ராதன் பண்டிட் என்பவர் விஜயின் ஜோதிடராகவும், தமிழக வெற்றி கழகத்தின் செய்தி தொடர்பாளராகவும் இருந்து வருகிறார். முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிகவும் நெருக்கமானவராக கூறப்படும் ரிக்கி ராதன் பண்டிட் அரசு பதவியில் நியமிக்கப்பட்டதற்கு அரசியல் கட்சியினர் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. சட்டப்பேரவையிலும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.
மேலும் படிக்க: தமிழக வெற்றிக் கழக அரசை காங்கிரஸ் ஆதரிக்க காரணம் என்ன? கார்த்திக் சிதம்பரம் எம்.பி.விளக்கம்!




ரிக்கி ராதன் பண்டிட் பதவி வாபஸ்
இதைத் தொடர்ந்து, ராதன் பண்டிட்டுக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரி என்ற அரசு பதவி உடனடியாக வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ரிக்கி ராதன் பண்டிட் தனியார் ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு ஜோதிடத்தின் மீது பெரிய அளவில் நம்பிக்கை இல்லை. அவர் ஜோதிடர் என்பதற்காக என்னை அங்கீகரிக்கவில்லை. தந்தை மகன் போலவும் நண்பர்கள் போலவும் எங்களுக்கு இடையே ஏதோ ஒரு பிணைப்பு இருந்து வருகிறது. இதன் காரணமாகவே அவர் அன்புக்குரியவராக இருந்து வருகிறேன் என்று தெரிவித்தார்.
பிரதமர் விஜய் – முதல்வர் அஜித் குமார்
மேலும், 2029- இல் மீண்டும் மோடி பிரதமராக வர மாட்டார். நாட்டின் அடுத்த பிரதமராக விஜய் ஆவதற்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் முதல்வர் ஆவதற்கு நடிகர் அஜித் குமாருக்கு யோகம் உள்ளது. ஜோதிடம் என்பது மூடநம்பிக்கை இல்லை அது ஒரு கணிதம் ஆகும். முதல்வருக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை ஆனால் நான் சொல்வது பிடித்ததால் அவர் கேட்டார் நம்பிக்கையின் அடிப்படையில் அவர் கேட்டிருக்க மாட்டார் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: அதிமுக வளர்ச்சிக்காக எந்த தியாகமும் செய்ய தயார்.. எடப்பாடி கே.பழனிசாமி