“டாஸ்மாக்கில் இனி கூடுதலாக வசூலிக்க முடியாது”.. பறக்கும் படை அதிரடி சோதனையில் இறங்க உத்தரவு!
புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு டாஸ்மாக் கடைகள் தொடர்பாகச் சில முக்கியக் கட்டுப்பாடுகள் ஏற்கனவே நடைமுறைக்கு வந்துள்ளன. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது பானங்களை விற்பனை செய்யக்கூடாது என்ற உத்தரவு கண்டிப்புடன் பிறப்பிக்கப்பட்டுள்ளது
சென்னை, மே 14: தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், டாஸ்மாக் கடைகளில் மது பானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதைத் தடுக்க டாஸ்மாக் நிர்வாகம் அதிரடியான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில், மது பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ₹10 வரை வசூலிக்கப்படுவதாக நீண்ட காலமாகப் புகார்கள் எழுந்து வருகின்றன. புதிய அரசு பொறுப்பேற்ற பின்னரும் இத்தகைய புகார்கள் தொடர்ந்த நிலையில், டாஸ்மாக் நிர்வாகம் தற்போது தனது பணியாளர்களுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிக்க: “ஆட்சி மாறினாலும் மாறாத காட்சி”.. டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் வசூல் தொடர்வதாக மதுப்பிரியர்கள் குமுறல்!!
கண்காணிக்கப் பறக்கும் படைகள்:
இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள உத்தரவில், “மது பாட்டில்களைக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது. மீறினால் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விலை விற்பனையைத் தடுக்கவும், மதுக் கடைகளைக் கண்காணிக்கவும் ‘பறக்கும் படைகள்’ எனப்படும் சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் படைகள் கடைகளில் திடீர் ஆய்வுகளை மேற்கொள்ளும்.
புகார்கள் வரும் கடைகளில் ஆய்வு செய்து, முறைகேடு கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தங்கள் மாவட்டத்தில் இத்தகைய முறைகேடுகளைக் கண்காணிக்கத் தவறும் மாவட்ட மேலாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
அரசின் புதிய கட்டுப்பாடுகள்:
புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு டாஸ்மாக் கடைகள் தொடர்பாகச் சில முக்கியக் கட்டுப்பாடுகள் ஏற்கனவே நடைமுறைக்கு வந்துள்ளன. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது பானங்களை விற்பனை செய்யக்கூடாது என்ற உத்தரவு கண்டிப்புடன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் நிர்வாகத்தின் இந்த அதிரடி நடவடிக்கை, அரசு நிர்ணயித்த விலையிலேயே மது பானங்கள் கிடைப்பதை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூல்:
முன்னதாக, மதுக்கடைகளின் இடமாற்றம் மற்றும் மூடல் போன்ற நடவடிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், மதுக்கடைகளில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் “கூடுதல் 10 ரூபாய்” வசூல் மட்டும் இன்னும் குறையவில்லை என மதுப்பிரியர்களின் கவலை தெரித்திருந்தனர். ஆட்சி மாறினாலும் டாஸ்மாக் ஊழியர்களின் இந்த வசூல் வேட்டை மாறவில்லை.
நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விற்பனை விலையைவிட (MRP) கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பது தொடர்வாதக மதுப்பிரியர்கள் வேதனை தெரிவித்தனர். இதனால் பல இடங்களில் ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதங்கள் ஏற்பட்டன. இதுதொடர்பான செய்திகள் நேற்று முதல் ஊடகங்களில் வெளிவந்த நிலையில், இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க : “மதுக்கடையை மூடினால் சந்து கடைகள் திறப்பு”.. விளாசிய செளமியா அன்புமணி.. நோட்ஸ் எடுத்த முதல்வர் விஜய்!!