டெல்லியில் 3 ஆண்டுகள் பணியாற்ற சொன்ன அமித் ஷா – அண்ணாமலை சொன்ன பரபரப்பு தகவல்
Annamalai on Amit Shah Offer : சென்னையில் நடைபெற்ற வி த லீடர்ஸ் அமைப்பின் பேரணியில் பங்கேற்ற அண்ணாமலை, டெல்லியில் பொறுப்பெடுத்து 3 ஆண்டுகள் அங்கிருக்கும்படி அமித் ஷா கூறினார். அவரிடம் வேண்டாம் என சொல்லிவிட்டேன். தமிழ்நாட்டிலேயே மக்கள் சேவை செய்து, அரசியல் செய்கிறேன் என தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
சென்னை, ஆகஸ்ட் 16 : வி த லீடர்ஸ் அமைப்பின் பேரணியில் பங்கேற்ற அண்ணாமலை, தன்னை 3 ஆண்டுகள் டெல்லியில் இருந்து பணியாற்றும்படி அமித் ஷா சொன்னதாகவும், தான் அதனை மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தார். அண்ணாமலையின் வி த லீடர்ஸ் அமைப்பு சார்பில் சென்னையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி ஆகஸ்ட் 16, 2026 இன்று நடைபெற்றது. இந்த பேரணியில் பேசிய அண்ணாமலை, தனது வி த லீடர்ஸ் அமைப்பில் இதுவரை 20 லட்சம் தன்னார்வலர்கள் இணைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், டெல்லியில் பொறுப்பெடுத்து 3 ஆண்டுகள் பணி செய்யும்படி உள்துறை அமைச்சர் அமித் ஷா சொன்னதாகவும், அதனை வேண்டாம் என மறுத்ததாகவும் தெரிவித்தார்.
டெல்லியில் 3 ஆண்டுகள் பணியாற்ற அமித் ஷா சொன்னதாக அண்ணாமலை தகவல்
நிகழ்வில் பேசிய அவர், நமது அமைப்பை அரசியல் இயக்கமாக மாற்றி மக்களுக்கான அரசியலாக செயல்படவிருக்கிறோம். சேவை மனப்பான்மையோடு வருபவர்களால் மட்டுமே அடிப்படை அரசியலை மாற்ற முடியும். வீ த லீடர்ஸ் அமைப்பை தொடங்கிய 73 நாட்களில் இதுவரை 20 லட்சம் தன்னார்வலர்கள் இணைந்துள்ளனர் என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க : “100 ஆண்டா வாழ்ந்த மக்களை ஆக்கிரமிப்புன்னு சொல்றதா?”.. சீமான் கொந்தளிப்பு!




தொட்ர்ந்து பேசிய அவர், தலைவர்கள் தமிழ்நாட்டின் முடிவை டெல்லியில் இருந்து எடுக்க கூடாது. எதிர்க்கட்சியை சார்ந்த நிறைய நண்பர்கள் என்னை பார்த்து சொல்கிறார்கள். அரசியலை பண்ணவில்லை என்று இன்றைக்கு எதிர்க்கட்சி பண்ணக்கூடிய அரசியல் என்னவென்றால், எப்படியாவது ஆளுங்கட்சியை கவிழ்த்து ஆட்சிக்கு வரவேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சியின் அரசியலாக இருக்கிறது என்றார்.
மேலும், ஆப்ரேஷன் மேகாலயா என்ற ஒரு பெயரை வைத்துக்கொண்டு பிள்ளை பிடிப்பது போல் 10 எம்எல்ஏக்களை பிடித்து வைத்து அவர்கள் மீது சபாநாயகர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து ஆட்சியை கவிழுங்கள் என்று எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கிறார்கள். தவறாக ஆட்சி செய்தால் ஆட்சியே கவிழும். ஒரு வருடம் இந்த அரசுக்கு நேரம் கொடுங்கள் எதற்கு காலில் வெந்நீரை ஊற்றியது போல சுற்றிக்கொண்டே வருகிறீர்கள் அவர்கள் வேலை செய்யட்டு் என்றார்.
இதையும் படிக்க : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ மறு வழக்குப்பதிவு.. சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை!
தொடர்ந்து பேசிய அவர், மேகதாது அணை கட்ட தடையில்லை என மத்திய அரசு சொல்வது வலிக்கிறது. அணை கட்டுவதை எதிர்க்கிறோம். 2 மாநில முதல்வர்களையும் பிரதமர் அழைத்து பேச வேண்டும். சில அமைச்சர்கள் ஊழல் செய்கிறார்கள். ஊழல் செய்பவர்களுக்கு எதிராக முதலமைச்சர் கடிவாளம் போட வேண்டும். நமது காலத்தில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்றார்.
நான் அமித்ஷாவை சந்தித்ததை வைத்து, பாஜகவின் பீ டீம் என என்னைப் பற்றி பேசுகிறார்கள். டெல்லியில் பொறுப்பெடுத்து 3 ஆண்டுகள் அங்கிருக்கும்படி அமித் ஷா கூறினார். அவரிடம் வேண்டாம் என சொல்லிவிட்டேன். தமிழ்நாட்டிலேயே மக்கள் சேவை செய்து, அரசியல் செய்கிறேன் என அமித் ஷாவிடம் கூறினேன் என்றார்.