“சட்டமன்றத்தில் போய் அப்பாவை தேடுறாங்க”.. நயினார் நாகேந்திரன் சர்ச்சை பேச்சும்.. தடாலடி விளக்கமும்!!
CM Vijay Remarks Controversy: தமிழக முதலமைச்சர் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சட்டமன்றப் பேச்சை விமர்சித்து பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களிடமிருந்தும் அவருக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனது தன்னிலை விளக்கத்தை வெளியிட்டுள்ளார்.
சென்னை, ஆகஸ்ட் 16: சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநிலத் தலைமை அலுவலகமான ‘கமலாலயத்தில்’ நடைபெற்ற கூட்டத்தில், தமிழகத்தில் பாஜகவின் நடவடிக்கைகள் மற்றும் மத்திய அரசின் சாதனைகளை முன்னிறுத்தி பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார். அப்போது தமிழகத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகள் குறித்து அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். குறிப்பாக, முதலமைச்சரின் சட்டமன்றப் பேச்சு மற்றும் நடவடிக்கை தொடர்பாக நயினார் நாகேந்திரன் தெரிவித்த சில கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிக்க: தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை வெளுக்கப்போகுது.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை!!
சட்டமன்றப் பேச்சு குறித்த கடுமையான விமர்சனம்:
அந்தவகையில் பாஜக நிகழ்ச்சியில் பேசிய அவர், சட்டமன்றத்தில் போய் தந்தையைத் தேடும் சூழல் நிலவுவதாகக் குறிப்பிட்ட அவர், வீட்டில் தாயிடம் கேட்டால் தான் தந்தை யார் என்பது தெரியவரும் என்றும், ஆனால் சட்டமன்றத்தில் போய் தந்தையைத் தேடினால் யாரும் இருக்க மாட்டார்கள் என்றும் கடுமையான தொனியில் கருத்துத் தெரிவித்தார். இத்தகைய நபர்களின் ஆட்சியே தற்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பதாக அவர் சாடினார்.
சர்ச்சைக்கு பேச்சுக்கு குவிந்த கண்டனம்:
முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி, தவெக அமைச்சர்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளனர். தாய்மார்களும் பெண்களும் முகம் சுளிக்கும் வகையில் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளதாகவும், பெண்களின் பெருமையையும், தாயின் அருமையையும் அறியாத மூன்றாம் தர நபரை போல பேசியது அருவருப்பின் உச்சம் எனவும் கடுமையாக சாடி வந்தனர். அதோடு, ஆயிரம் அநாகரிகமான பேச்சுகளை ஏவினாலும் கூட, முதல்வர் விஜய் கற்றுக்கொடுத்த வழியில் செல்வோம் என அமைச்சர்கள் கூறி வந்தனர். அதோடு, நயினார் நாகேந்திரன் முதல்வரிடமும் பொதுமக்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
அரசியல் தலைவர்கள் கண்டனம்:
நயினார் நாகேந்திரன் சர்ச்சை பேச்சுக்கு அமைச்சர் வன்னி அரசு, காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர். We the Leader அமைப்பின் தலைவர் அண்ணாமலை, குறிப்பாக பாஜகவில் உள்ள குஷ்பு உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் முதல்வர் பற்றி அவதூறாக பேசிய நயினார் நாகேந்திரன் மீது டிஜிபி அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : “லஞ்சமும் ஊழலுமற்ற தமிழ்நாட்டை உருவாக்குவதும் விடுதலைக்குச் சமமே!”.. சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய் பேச்சு!
நயினார் நாகேந்திரன் விளக்கம்:
ஒரே நாடு 2.0 பத்திரிக்கை வெளியீட்டு விழாவின் போது நான் மேடையில் பேசிய பேச்சைத் திரித்து சித்தரித்து, அரசியல் ஆதாயம் தேட நினைப்பவர்களுக்கு நான் தெரிவிப்பது என்னவென்றால், எந்தவிதமான உள்நோக்கத்துடனும் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை. தாய் மீதும், தாய் நாட்டின் மீதும், தாய்மொழி…
— Nainar Nagenthran (@NainarBJP) August 15, 2026
இந்தச் சூழலில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அதற்கு மறுப்புத் தெரிவித்துத் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அரசியல் ஆதாயத்திற்காகத் தனது பேச்சைத் தவறாகச் சித்திரிக்க முற்படுகிறார்கள் எனக் கூறியுள்ள அவர், தாம் எந்தவித உள்நோக்கத்துடனும் பேசவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் பதிவில், தாம் தாய் மீதும், தாய்நாட்டின் மீதும், தாய்மொழியின் மீதும் ஆழமான மரியாதையும் அக்கறையும் கொண்டவன் என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, தவறாகச் சித்திரிக்கப்படும் இத்தகைய கருத்துகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும், பொதுவெளியில் பரப்பப்படும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.