ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ மறு வழக்குப்பதிவு.. சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை!
Armstrong Murder Case CBI: பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் சிபிஐ அதிகாரப்பூர்வமாக மறு வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து, பெரம்பூரில் சம்பவம் நடந்த இடத்திற்கே நேரில் சென்று சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை, ஆகஸ்ட் 16: தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024-ஆம் ஆண்டு சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த படுகொலை வழக்கில், தமிழகக் காவல்துறையின் விசாரணையில் திருப்தியடையாததால் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி ஆம்ஸ்ட்ராங் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இந்த வழக்கை அதிகாரப்பூர்வமாகக் கையில் எடுத்துள்ள சிபிஐ, தற்போது மறு வழக்குப்பதிவு செய்து களத்தில் இறங்கியுள்ளது.
இதையும் படிக்க: “உதவி செஞ்ச பிறகுதான் உள்ள மம்மூட்டி சார் இருக்குறதே தெரிஞ்சிது!”.. மதுரை நெடுஞ்சாலையில் நள்ளிரவு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு:
ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் தொடர்பாகச் செம்பியம் காவல் துறையினர் முதற்கட்டமாக வழக்குப் பதிவு செய்து, 28 பேரை கைது செய்தனர். இதில் கைதான திருவேங்கடம் என்பவர் காவல்துறையினரின் என்கவுண்டரில் கொல்லப்பட்ட நிலையில், மொத்தம் 30 பேர் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. எனினும், இதில் உண்மையான பின்னணி மற்றும் முக்கியச் சதியாளர்களை வெளிக்கொண்டுவர சிபிஐ விசாரணை அவசியம் என சென்னை உயர் நீதிமன்றம் 2024 செப்டம்பரில் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை 2025 ஜூலை 22 அன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து, சிபிஐ விசாரணையை உறுதி செய்தது.
சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை:
உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கில் தற்போது மறு வழக்குப்பதிவு செய்து தங்களது முதற்கட்ட விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட பெரம்பூர் வேணுகோபாலசாமி தெரு பகுதிக்குச் சிபிஐ அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். சம்பவம் எவ்வாறு நடைபெற்றது, கொலையாளிகள் எந்த வழியில் தப்பிச் சென்றனர் என்பது குறித்துச் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்திய அதிகாரிகள், அங்குள்ள சிசிடிவி காட்சி ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க : “லஞ்சமும் ஊழலுமற்ற தமிழ்நாட்டை உருவாக்குவதும் விடுதலைக்குச் சமமே!”.. சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய் பேச்சு!
அடுத்த கட்ட நடவடிக்கை:
செம்பியம் காவல் துறையினரிடமிருந்து வழக்கு தொடர்பான அனைத்துக் ஆவணங்கள், வாக்குமூலங்கள் மற்றும் சாட்சியப் பதிவுகளைச் சிபிஐ அதிகாரிகள் பெற்று ஆய்வு செய்து வருகின்றனர். இக்கொலை வழக்கின் சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை நடத்தவும், சம்பவத்தின் போது உடனடியாகச் செயல்பட்ட நபர்கள் மற்றும் பின்னணியில் இருந்த முக்கியச் சதியாளர்களைக் கண்டறியவும் திட்டமிடப்பட்டுள்ளது. படுகொலைக்கான உண்மையான பின்னணி என்ன என்பதைக் கண்டறியும் கோணத்தில் சிபிஐ அதிகாரிகளின் இந்த விசாரணை அடுத்த கட்டத்தை நோக்கி வேகமெடுத்துள்ளது.