தமிழக அரசின் ரூ. 22.30 கோடி நிதி திருட்டு – ஒரே நிறுவனத்துக்கு பலமுறை பணம் அனுப்பப்பட்டது கண்டுபிடிப்பு
Tamil Nadu Government Cyber Fraud : தமிழக அரசின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.22.10 கோடி பணம் திருடப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசாரின் விசாரணையில் ஒரே கணக்குக்கு பல முறை பணம் அனுப்பப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை, நவம்பர் 11 : தமிழக அரசின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.22.10 கோடி பணம் திருடப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பல்வேறு திட்டங்களுக்காக ஊராட்சி ஒன்றியங்களுக்கு வழங்குவதற்காக தமிழக அரசின் வங்கிக் கணக்கில் வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கிலான பணம் திருடப்பட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியானது. இந்த நிலையில் இந்த சம்பவத்தில் நைஜீரியா கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் சைபர் கிரைம் காவல்துறையினர் (Cyber Crime) விசாரித்து வருவதாக தகவல் வெளியானது.
தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ், பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்காக ஊராட்சி ஒன்றியங்களின் பெயர்களில் வங்கிக் கணக்குகள் பராமரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த வங்கி கணக்குகள் சென்னையை மையமாக வைத்து நிர்வகிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்த 15 நிதிக் குழுவின் சார்பில் மானிய நிதி ஒதுக்கப்ப்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : “தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் சிசிடிவி பொருத்துவது கட்டாயம்!”.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!




தமிழ்நாடு அரசின் ரூ. 22.30 கோடி நிதி மோசடி
இதற்காக சென்னை எச்.டி.எஃப்.சி. வங்கிக் கிளையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் பெயரில் தனி வங்கிக்கணக்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கணக்கிலிருந்து அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்கள் மட்டுமே பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும், ஒப்புதல் அளிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 2026 அக்டோபர் 12 அன்று முதல் அக்டோபர் 30, 2026 வரையிலான காலகட்டத்தில் சைபர் கிரைம் கும்பல் இந்த வங்கிக்கணக்கில் இருந்து, அரசின் அனுமதியின்றி மொத்தம் ரூ. 22.30 கோடி நிதிமின்னணு முறையில் மாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.
இதனையடுத்து அரசு தரப்பில் சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் 15வது நிதிக்குழுவின் சுகாதாரத் துறை மானியங்களுக்காகப் பராமரிக்கப்பட்டு வந்த வங்கிக்கணக்கில் இருந்து மொத்தம் ரூ.22.30 கோடி முறைகேடாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, எச்.டி.எஃப்.சி. வங்கியின் எஸ்.என்.ஏ. எனப்படும் ஒற்றை கணக்கு நிர்வாகத்திற்காக உருவாக்கப்பட்ட இணையதளத்தின் வாயிலாக இந்த மோசடி நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில் லீட் வின்னர் கார்ப் என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இணையதளத்தைப் பயன்படுத்தி, அரசின் வங்கிக்கணக்கிலிருந்து மோசடியாகப் பெறப்பட்ட பணம் பல்வேறு மின்னஞ்சல் முகவரிகளுடன் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதன் மூலம் வட்டார வளர்ச்சி அலுவலகங்களின் பெயரில் போலியா கணக்குகள் உருவாக்கப்பட்டு 46 பரிவர்த்தனைகள் நடைபெற்றதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரே நிறுவனத்தின் வங்கிகணக்குகளுக்கு வெவ்வேறு நடா்களுக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது
இதையும் படிக்க : “ஒரே கடையில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்கள் கட்டாய இடமாற்றம்!”.. டாஸ்மாக் ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு..
மேலும், அரசு துறையின் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்களின் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொற்கள் திருடப்பட்டதா? வங்கியின் இணையதளத்தில் பாதுகாப்புக் குறைபாடு ஏற்பட்டதா? அல்லது ஓடிபி உள்ளிட்ட அங்கீகார முறைகளில் ஊடுருவி இந்த மோசடி அரங்கேற்றப்பட்டதா? என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் வெளியாகவில்லை. இது தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தொழில்நுட்ப மற்றும் சைபர் தடயவியல் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.